செய்திகள்

என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு 25ந்தேதி தொடக்கம் - அமைச்சர் அன்பழகன் தகவல்

Published On 2018-07-21 03:31 GMT   |   Update On 2018-07-21 03:34 GMT
என்ஜினீயரிங் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 25-ந்தேதி தொடங்கும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #MinisterAnbalagan
மதுரை:

தேசிய அளவில் ஜூனியர்களுக்கான ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஸ் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் நாசர் உசேன், தமிழக தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் கூறும்போது, மேலைநாடுகளில் விளையாடும் ரக்பி விளையாட்டு இந்தியாவில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இந்த போட்டி தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து ஆகிய மூன்று போட்டிகளையும் உள்ளடக்கியது. 14 நிமிடங்கள் நடைபெறும் இந்த போட்டியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். போட்டியின் முடிவில் நன்றாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மதுரையில் 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்றனர்.

ஆண்களுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி மத்திய பிரதேசம் அணியை 27-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அதே போன்று மேற்குவங்கம், ஒடிசா, பீகார், கோவா, டெல்லி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறும் போது, 2018-19-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பிற்கான பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட தலைநகரில் 42 சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்றார். #MinisterAnbalagan
Tags:    

Similar News