செய்திகள்
கோப்புப்படம்

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு - தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

Published On 2020-12-22 21:54 GMT   |   Update On 2020-12-22 21:54 GMT
28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கேரள கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த கொலையில் பாதிரியார், கன்னியாஸ்திரி ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா(வயது 19) என்பவர் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு துறையும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 1993-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி கொச்சி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

பின்னர் விசாரணையில், இந்த கொலைக்கான ஆதாரங்கள் இல்லை என 3 முறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 2007-ம் ஆண்டு மீண்டும் சி.பி.ஐ. புதிய குழு விசாரணையை தொடங்கியது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் கொலைக்கான ஆதாரங்களை அழித்தது, உடற்கூறு பரிசோதனை அறிக்கையை திருத்தியது உள்பட பல்வேறு மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது. இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் ஜோஸ் ஆகியோரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.

பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் உடலுறவில் ஈடுபட்டதை இளம் கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார்.

இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என நினைத்த அவர்கள், அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம்சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினர். இதன் பிறகு வழக்கின் விசாரணையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் பாதிரியார் ஜோஸ் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத நிலையில் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 177 சாட்சிகளில் 49 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் ஒரு கன்னியாஸ்திரி உள்பட சிலர் பல்டி அடித்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் சம்பவம் நடந்த அன்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கிணற்றை எட்டி பார்த்தபடி பதற்றமாக இருந்ததாகவும், மிக மோசமான சூழலில் அவர்கள் இருந்ததாகவும் ராஜு என்ற திருடன் அளித்த வாக்குமூலம் தான், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரையும் இந்த வழக்கில் சிக்க வைத்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் 2 பேரையும் கொலை குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பை கேட்டதும் கன்னியாஸ்திரி செபி கதறி அழுதார். பாதிரியார் தாமஸ் கோட்டூர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரி இருவரும் குற்றவாளிகள் என கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
Tags:    

Similar News