செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இரண்டாம் கட்டமாக 5 மாவட்டங்களில் நாளை ஓட்டுப்பதிவு

Published On 2020-12-09 08:31 GMT   |   Update On 2020-12-09 08:31 GMT
கேரளாவில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் நாளை நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக நடத்தப்படுகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

முதல்கட்ட தேர்தலில் 72.67சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் 69.76 சதவீதமும், கொல்லம் மாவட்டத்தில் 73.41 சதவீதமும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் 69.70 சதவீதமும், ஆலப்புழா மாவட்டத்தில் 77.23 சதவீதமும், இடுக்கி மாவட்டத்தில் 74.5 6சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

2-ம் கட்ட தேர்தல் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(10-ந்தேதி) நடக்கிறது. இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இந்த 5 மாவட்டங்களில் 451 பஞ்சாயத்துகளில் 8,116 வார்டுகளில் உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

5 மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் ஆன்-லைன் வீடியோ பதிவு மூலம் வாக்குப்பதிவை அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கிறார்கள்.

கேரளாவில் மூன்றாவது கட்ட தேர்தல் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அன்று மீதமுள்ள மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மூன்றாம்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 12-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது.

இதனால் அந்த மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News