செய்திகள்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் போலீஸ்காரர் கவாஸ்கரின் மனைவி உறவினர்களுடன் சென்று புகார் மனு அளித்தார்.

போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள்- கேரள முதல்வரிடம் புகார்

Published On 2018-06-16 06:36 GMT   |   Update On 2018-06-16 06:36 GMT
கேரளாவில் போலீஸ் டிரைவரை அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட டிரைவரின் மனைவி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளவர் சுதேஷ்குமார். இவரது மகள் ஸ்நேகிதா (வயது 22). ஏ.டி.ஜி.பி.க்கு ஜீப் டிரைவராக உள்ளவர் கவாஸ்கர் (35). நேற்று முன்தினம் கவாஸ்கரை ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கினார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.

இதனையடுத்து அவர் பேரூர்கடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் மியூசியம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர்.

தாக்கப்பட்ட ஜீப் டிரைவர் கவாஸ்கர்.

இந்நிலையில் நேற்று கவாஸ்கரின் மனைவி ரேஸ்மா கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தார். மனுவில், ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் தனது நாயை குளிப்பாட்ட அடிக்கடி எனது கணவரை கட்டாயப்படுத்துவார். பல நேரங்களில் என் கணவர் நாயை குளிப்பாட்டினார். சில நேரங்களில் மறுத்துள்ளார். இதனால் ஏ.டி.ஜி.பி.க்கு எனது கணவர் மீது கோபம் ஏற்பட்டது. இது தவிரஅவரது மனைவி காய்கறி வாங்க அனுப்புவார். அவரது மகள் குப்பை கூழங்களை கூட்ட செய்வார். வேலைகளை செய்ய தவறினால் தகாத வார்த்தைகளில் குடும்பமே திட்டுவதாக என்னிடம் அடிக்கடி கூறி வருத்தப்படுவார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் அவர் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, கேரளாவில் தற்போது சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவம் கேரளாவிற்கு பெரும் தலைகுனிவு. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அவர் உறுதியளித்தார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
Tags:    

Similar News