உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான "எனது மண் எனது தேசம்" கலச யாத்ரா நிகழ்ச்சி

Published On 2023-10-24 09:04 GMT   |   Update On 2023-10-24 09:04 GMT
  • திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்ரா வீரபாண்டிபட்டினம் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.
  • தொடர்ந்து நடைபெற்ற எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியில் பஞ்ச் பிரான் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருச்செந்தூர்:

75 ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டும், இந்திய படை வீரர்களை போற்றும் வகையிலும் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவில் எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அணி எண். 44, 48 மற்றும் திருச்செந்தூர் உபகோட்ட இந்திய அஞ்சல் துறையம் இணைந்து திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்ரா வீரபாண்டிபட்டினம் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளியப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கவிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் நிகழ்ச்சி அமைப்பாளர் இசக்கி விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் அஞ்சல் துறை திருச்செந்தூர் உபகோட்டம் அஞ்சலக உதவி கண்காணப்பளர் ஐடா எபனேசர் ராஜாபாய், கல்லூரி பேராசிரியர்கள் வேலாயுதம், பாலு, பசுங்கிளி பாண்டியன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊராட்சி கள் துறை முதன்மை வள பயிற்றுநர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் பிரவீன்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஒன்றிய அளவிலான கலச யாத்ரா ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அஞ்சலக அலுவ லர்கள், நேரு யுவ கேந்திரா இளைஞர் மன்றத்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியில் பஞ்ச் பிரான் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கலச யாத்திராவில் திருச்செந்தூர் உப கோட்டம் அஞ்சல் துறை அலுவலர்கள் மூலமாக அனைத்து கிராமங் களில் சேகரிக்கப்பட்ட மண் கலசங்களை மாணவ, மாணவிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒன்றிய அளவில் உள்ள கலசத்தில் மண்ணை கலந்தனர்.

ஒன்றிய அளவிலான கலக்கப்பட்ட மண்ணானது தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் மூலம் தேசிய அளவில் டெல்லியில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் ஆகிய அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மற்றும் கழுகுமலை மாடசாமி நாதஸ்வர இசை குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முடிவில் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலரும், பேராசிரியருமான சத்திய லெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியானது நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் ஆலோசனையின் பேரில் நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி அமைப்பாளர் இசக்கி மற்றும் தேசிய இளையோர் தொண்டர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News