உள்ளூர் செய்திகள்

இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-09-02 00:14 GMT   |   Update On 2023-09-02 00:14 GMT
  • இந்தியா கூட்டணியை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, இந்தியா கூட்டணி போன்றவற்றால் பா.ஜ.க. அரசு பயத்தில் உள்ளது.

சென்னை:

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது ஒரே தேர்தலுக்காக குழு அமைத்துள்ளார்கள். இதனை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும். மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, 'இந்தியா' கூட்டணி போன்றவற்றால் மத்திய பா.ஜ.க. அரசு பயத்தில் இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசை ஒழிக்கவேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்காக மனம் மற்றும் கொள்கை வித்தியாசங்களை மறந்து 'இந்தியா' கூட்டணி அமைந்துள்ளது. இதனால்தான் பா.ஜ.க. அரசு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இது பயத்தின் வெளிப்பாடு ஆகும்.

மார்ச் 1-ம் தேதி தலைவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) பிறந்தநாளில் 7 தலைவர்கள் சென்னைக்கு வந்தார்கள். அப்போதே மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கியது. பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால் நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். எல்லா இயக்கங்களும் விட்டுக்கொடுத்து ஒத்து வரவேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றமுடியும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொல்லிவிட்டார்.

இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்தியாவுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் பிரசார வியூகங்கள், யார், யார் எந்த இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு சொல்வார். அதன்படி நாங்கள் நடப்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News