உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவில் வாரச்சந்தை வளாகத்தில் தினசரி மார்க்கெட் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு
வாரச்சந்தைக்கு மட்டும் அனுமதிக்க வேண்டுமென வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை முத்தூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகே ஞாயிறுதோறும் செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தை 2.60 ஏக்கர் பரப்பளவில் தற்போது செயல்படுகிறது.
இந்த இடத்தில் தற்போது கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 130 கடைகள் மற்றும் உணவு விடுதி, தங்கும் அறை, ஏ.டி.எம். அறை, பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தம், கழிப்பிட வசதி ஆகியவை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வாரச்சந்தையில் கடைகள் அமைத்து நடத்தி வரும் வியாபாரிகள் தற்போது நாங்கள் இந்த வாரச் சந்தையை நம்பி தான் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றோம். இங்கு தினசரி மார்க்கெட் அமைத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அதனால் வேறு இடங்களில் தினசரி மார்க்கெட் அமைத்துக் கொள்ளுங்கள். வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் வாரச்சந்தைக்கு மட்டும் அனுமதிக்க வேண்டுமென வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் ஞாயிறன்று (8ந்தேதி) கடையை நடத்திக் கொள்ளுங்கள். மாவட்ட நிர்வாகத்திற்கு உங்களது கோரிக்கைகளை தெரிவித்து அதற்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.