செய்திகள் (Tamil News)
மின்வாரிய அலுவலக பிரிண்டரில் இருந்த பாம்பு

பொன்னேரி அருகே மின்வாரிய அலுவலக ‘பிரிண்டரில்’ புகுந்த பாம்பு

Published On 2020-01-23 10:22 GMT   |   Update On 2020-01-23 10:22 GMT
பொன்னேரி அருகே மின்வாரிய அலுவலக பிரிண்டரில் புகுந்த பாம்பை வெளியேற்றிய ஊழியர்கள், அப்பகுதியில் உலாவரும் பாம்புகளால் பீதியில் உள்ளனர்.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் துணைமின் நிலைய அலுவலகம் உள்ளது. இங்குள்ள 4 பிரிவு அலுவலகங்கள் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பழுதடைந்த அலுவலக கட்டிடத்தில் வி‌ஷ பாம்புகள் அதிக அளவு உள்ளன. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ‘எஸ்.எஸ்’ பிரிவு அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் பிரிண்டரை இயக்கியபோது அது செயல்படவில்லை.

அதனை சரிபார்த்த போது வி‌ஷ பாம்பு ஒன்று பிரிண்டருக்குள் புகுந்து இருப்பது தெரிந்தது.

உடனடியாக பாம்பை வெளியே எடுத்து அடித்து கொன்றனர். அலுவலகத்தில் உலா வரும் பாம்புகளால் ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, ‘வி‌ஷ பாம்புகள் கட்டிடத்தின் மேல் இருப்பதால் உள்ளே யாரும் இருப்பதில்லை கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் கணக்கு புத்தகங்கள் சுவர் அருகே உள்ளதால் பாம்புகள் அதன் உள்ளே சென்று விடுகின்றன.

பாம்புக்கு பயந்து அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உடனடியாக வெளியே வந்து விடுகின்றனர். உள்ளே யாரும் போவது கிடையாது.

கடந்த ஒரு மாதமாக இதுபோல் உள்ளது. இது பற்றி உயர் அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை’ என்றனர்.
Tags:    

Similar News