செய்திகள் (Tamil News)

மத்தூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 3 பேர் கைது

Published On 2019-01-22 13:56 GMT   |   Update On 2019-01-22 13:56 GMT
மத்தூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியது குறித்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள ஜிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் குட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். நேற்று அந்த பகுதி பொதுமக்களிடம் 3 பேர் தனியார் நிறுவன பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த 3 பேரிடம் ராஜகோபால் இந்த பொருட்கள் அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்கிறீர்களா? என்று கேட்டார். இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் ஆத்திரமடைந்த 3 பேர் ராஜகோபாலை சரமாரியாக தாக்கினர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜகோபாலை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய அந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போச்சம்பள்ளி அருகே பன்னந்தூரை சேர்ந்த பவித்ரன் (25), மேட்டூரை சேர்ந்த முனுசாமி (23), அரூரை சேர்ந்த ஜயந்துரை (23) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ஊத்தங்கரைகிளை சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News