செய்திகள் (Tamil News)

அருணாசலேஸ்வரர் கோவிலில் டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2018-10-09 18:09 GMT   |   Update On 2018-10-09 18:09 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டெங்கு கொசு புழு ஒழிப்பு குறித்து கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் டெங்கு போன்ற விஷ காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மாடவீதியில் டெங்கு கொசு புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது மாட வீதியில் உள்ள கடைகள், காலி இடங்களில் இருந்த தேவையற்ற டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கோ சாலையை பார்வையிட்டார். அங்கு இருந்த பழைய டயர் போன்றவற்றை அப்புறப்படுத்தினார். மேலும் அங்கிருந்த காலி நெய் டின்களில் தேங்கியிருந்த மழைநீரில் கொசு புழுக்கள் இருந்தது தெரியவந்தது. அதனை அகற்றவும், கோவில் வளாகத்தில் கொசு மருந்து அடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அங்கு கொசு மருந்து அடிக்கப்பட்டது.

மேலும் கோவிலில் இருந்து வெளியே வரும்போது அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இருப்பதை பார்த்தார். இதையடுத்து, இங்கு சக்கர நாற்காலி இருப்பது யாருக்கும் தெரியாது. அதனால் கோவிலில் மக்கள் வரும் வழியில் சக்கர நாற்காலி உள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்க கோவில் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News