செய்திகள்

சென்னையில் 500 சொகுசு பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றம்

Published On 2018-08-01 06:45 GMT   |   Update On 2018-08-01 06:45 GMT
சொகுசு கட்டண பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு குறைந்து உள்ளதால் 500 சொகுசு பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்படுகிறது. #Deluxebus
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 13-ந்தேதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 ஆகவும், அதிகபட்சமாக ரூ.23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

விரைவு பஸ்சில் குறைந்த பட்சம் ரூ.7, அதிகபட்சம் ரூ.35, சொகுசு பஸ்களில் குறைந்த பட்சம் ரூ.12, அதிகபட்சம் ரூ.48 என கட்டணம் உள்ளது. சென்னையில் சொகுசு பஸ் கட்டணத்தில் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டன. சாதாரண கட்டண பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.

இதனால் சுமார் 30 சதவீத பயணிகளின் பயணம் குறைந்தது. இதனால் சொகுசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் காலியாக சென்று வந்தன. அதிக கட்டணம் உள்ள பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பயணிகள் மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு மாறினர். அதனால் போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் குறைந்தது. இதையடுத்து சாதாரண பஸ்கள் அதிக அளவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பயணிகளை மீண்டும் மாநகர பஸ்களுக்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதனால் சுமார் 20 ஆயிரம் பயணிகள் மீண்டும் மாநகர பஸ்களில் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1250-க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சொகுசு கட்டண பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு குறைந்து உள்ளதால் 500 சொகுசு பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என தனி பலகை வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது என்றனர். #Deluxebus
Tags:    

Similar News