செய்திகள்

குளச்சலில் வீடு புகுந்து 5 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2018-07-11 16:20 GMT   |   Update On 2018-07-11 16:20 GMT
குளச்சலில் வீடு புகுந்து 5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மே லும், மணவாளக்குறிச்சியில் பள்ளிக்கூடத்தில் பாத்திரங்கள் திருடப்பட்டன.
குளச்சல்:

இந்த சம்பவங்கள் குறித்த விவரம் வருமாறு:-

குளச்சல் வாணியக்குடி, சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜெரோமியாஸ். இவரது மனைவி ஸ்டெல்லா. ஜெரோமியாஸ் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால், குளச்சலில் உள்ள வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு ஸ்டெல்லா வழக்கம் போல் தூங்க சென்றார்.

நேற்று காலையில் கண்விழித்து பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும், வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

நள்ளிரவில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து சமையல் கூடத்தில் இருந்த பாத்திரங்களை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலையில் பள்ளிகூடத்துக்கு வந்தவர்கள் பாத்திரங்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுக்குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை உஷா மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News