செய்திகள்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாணவனுக்கு நவீன கல்லீரல் ஆபரேசன்

Published On 2018-07-04 10:39 GMT   |   Update On 2018-07-04 10:39 GMT
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு நவீன கல்லீரல் ஆபரேசன் நடைபெற்றது.
ராயபுரம்:

தர்மபுரியை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மகன் உதயகுமார் (15). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உதயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் மாணவனை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் உதயகுமாருக்கு கல்லீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இண்டர்வென்‌ஷனல் ரேடியாலஜி பிரிவில் உதயகுமாருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கல்லீரல், குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் ஆபரேசன் செய்தார். தொடையில் சிறிய ஓட்டை போட்டு ரத்த நாளங்களில் நுண்குழாய் செலுத்தி கல்லீரலில் ஏற்பட்ட ‘ரத்த’கசிவு சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறுவனுக்கு நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த ரத்த கசிவு அகற்றப்பட்டு உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயர்தர அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளன.

தனியார் ஆஸ்பத்திரியைவிட சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் பெற்றால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது என்றார்.
Tags:    

Similar News