செய்திகள்

கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்டு தொடர்பாக பேராசிரியைகள் விசாரணை

Published On 2018-04-16 04:54 GMT   |   Update On 2018-04-16 04:54 GMT
காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து வகுப்பில் பேசிய சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து மூத்த பேராசிரியைகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. #JusticeForAshifa

வடவள்ளி:

ஈரோட்டை சேர்ந்தவர் பிரியா (24).இவர் கோவை அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதற்காக அவர் கோவை புலிய குளத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார்.இவர் வகுப்பறையில் சக மாணவர்களிடம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பேசி போராட்டத்தை தூண்டியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக 7 மாணவர்கள் கல்லூரி முதல்வர் கோபால கிருஷ்ணனிடம் புகார் கொடுத்தனர். அவர் மாணவி பிரியாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து மாணவி பிரியா கூறும் போது, ஆங்கில பேராசிரியை மேடையில் தயக்கம் இன்றி பேசி பழகுங்கள் என்று கூறி என்னை பேச அழைத்தார்.

இதன் அடிப்படையில் காஷ்மீர் மாணவி பலாத்காரம் குறித்து பேசினேன். இதனை தவறாக எடுத்து கொண்டு நடந்த சம்பவம் குறித்து என்னிடம் விசாரிக்காமல் சஸ்பெண்டு செய்து உள்ளனர் என்றார்.

இது குறித்து சட்டக் கல்லூரி முதல்வர் கோபால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது-

நீதிபதி ப. சண்முகம் கமிட்டியின் பரிந்துரைப்படி கல்லூரி வளாகங்கள் என்பது ஜாதி,மத, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதனை கோவை அரசு சட்டக் கல்லூரியும் இது நாள் வரை விதிகளாக பின்பற்றி அமைதியான முறையில் செயலாற்றி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பாடம் எடுக்க சென்ற பேராசிரியை அன்றைய தினத்துக்குரிய பாடக் குறிப்புகளை தயார் செய்து வராத நிலையில் மாணவர்களை ஆங்கில தலைப்புகளில் உரையாற்ற வரும்படி அழைத்துள்ளார்.

அப்போது மாணவி பிரியா எழுந்து மதம், சார்ந்ததும், ஆணாதிக்கம் என்றும் மாணவர்கள் இடையே வாக்குவாதம் செய்தார். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதை அறிந்து அங்கு சென்ற பேராசிரியர்களிடமும் மாணவி பிரியா மேஜையை ஓங்கி அடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்து உள்ளனர்.

காஷ்மீர் சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் மனதை உலுக்கும் கொடிய செயலாகும். மாணவி பிரியா இந்த சம்பவத்தை தான் சார்ந்த அமைப்பையும் தன்னையும் பிரபலப்படுத்துவதற்காக நடந்த சம்பவத்தை திரித்து கண்ணியமிக்க கோவை அரசு சட்டக் கல்லூரிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேராசிரியைகள், மாணவர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து மாணவி பிரியா சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த பேராசிரியைகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டக் கல்லூரி இயக்குனர் மாணவி மீது நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் அடிப்படையில் மூத்த பேராசிரியைகள் துர்க்கா தேவி, குமுதா ஆகியோர் இன்று விசாரணையை தொடங்குகிறார்கள்.

இதற்கிடையில் சட்டக் கல்லூரியில் படித்து வரும் 7 மாணவர்கள் நிருபர்களிடம் கூறும் போது, மாணவி காஷ்மீர் சிறுமி பலாத்காரம் குறித்து பேசிய போது, சக மாணவர்கள் பெண்களிடம் ஆடை குறித்து பேசினார்கள்.

அப்போது மாணவி மேஜையை தட்டி கத்தி பேசினார். அவர் பேசிய பேச்சு வகுப்பறையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த பதிவை கல்லூரி முதல்வரிடம் கொடுக்க உள்ளோம் என்றனர்.

எனவே அந்த காட்சிகளையும் மூத்த பேராசிரியைகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News