ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கலசாபிஷேக விழா 10-ந்தேதி நடக்கிறது

Published On 2019-01-31 05:32 GMT   |   Update On 2019-01-31 05:32 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கோவிலில் வருகிற 10-ந் தேதி கலசாபிஷேகம் நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். எனவே, இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு மாசிக்கொடை விழா மார்ச் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்து வருகிறது. அதாவது, ரூ.3 கோடியில் கோவில் கோபுரம், கொடிமரம், கருவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

இந்த பணிகளை விரைவாக முடித்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கோவிலில் வருகிற 10-ந் தேதி கலசாபிஷேகம் நடத்த திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனையொட்டி கலசாபிஷேக யாகசாலை பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வருகிற 10-ந் தேதி கலசாபிஷேக விழா நடத்தப்படவுள்ளது. இதனை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். மிகவும் பழமையான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கலசாபிஷேகம் நடப்பது இது தான் முதல் முறை என்றனர்.
Tags:    

Similar News