என் மலர்tooltip icon

    சென்னை

    • பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது.
    • அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    அதேநேரம் சிறிய கட்சிகள் எந்த கூட்டணியில் இணைவது? எந்த கூட்டணியில் இணைந்தால் என்னென்ன லாபம்? என்று கணக்கு போட்டு கூட்டணிகளில் இடம்பிடித்து வருகின்றன.

    இப்போதைய நிலையில் எந்த கணக்கு போட்டாலும் தீர்வு கிடைக்காமல் தடுமாறுவது டாக்டர் ராமதாஸ்தான்.

    பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது. நான்தான் அதிகாரப்பூர்வமான பா.ம.க. யாராக இருந்தாலும் என்னிடம்தான் கூட்டணி பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார்.

    அதே நேரம் கட்சியும் என்னிடம்தான் உள்ளது. கட்சியின் மாம்பழம் சின்னமும் என்னிடமும்தான் உள்ளது என்று கூறி வரும் டாக்டர் அன்புமணி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறைப்பட அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டார். கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த நிலையில் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?, த.வெ.க.வா? எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் டாக்டர் ராமதாஸ் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அங்கு அன்புமணி இருக்கிறாரே என்று யோசிக்கிறார். தி.மு.க. பக்கம் சென்றால் எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற சூழல். புதிய கட்சியான த.வெ.க.வுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று யோசிக்கிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் அனைத்து தலைவர்களுடனும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். எந்த முடிவாக இருந்தாலும் வருகிற 22-ந்தேதிக்குள் ராமதாஸ் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

    • கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகிறது
    • இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் பராசக்தி படம் ஜனவரி 10 ஆம்ட தேதி வெளியானது.

    பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.

    கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 14) வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், வா வாத்தியார் பட வெளியீட்டை ஒட்டி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் மரியாதையை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை கார்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்ற உள்ளார்.
    • ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதி அன்று எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
    • உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் வருகிற பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்ப ரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

    பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

    தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளி விவரங்களும் தர வரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

    1 கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ் நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 லட்சம் அரிசி அட்டை தாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.

    தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.

    தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய –நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.

    கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.

    உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டு உள்ளேன்.

    தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ம் நாள் அதாவது, தை மாதம் 3-ம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்றக் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.

    சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

    கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் - தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
    • கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார்.

    * எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை.

    * விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது.

    * சி.பி.ஐ. விசாரணையில் த.வெ.க. தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார்.

    * பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.

    * ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது.

    * கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
    • 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

    கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

    நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

    2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! என்று கூறியுள்ளார். 



    • ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும்.
    • மீதமுள்ள மணல் குவாரிகளையும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றில் மணல் குவாரி திறக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலாற்றில் ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர் மாசுபாடும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கொள்ளையடிக்கும் நோக்கு டன் மணல் குவாரிகளை திறப்பது கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் வரை மணல் குவாரிகளை திறப்பதில்லை என்று கடந்த ஜனவரி 9-ந்தேதி முடிவெடுத்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே புதிய மணல் குவாரியை திறக்க ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கிறார்கள் என்றால், ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, கோடிகளை குவிக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும். மீதமுள்ள மணல் குவாரிகளையும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும். அதையும் மீறி மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைத் திரட்டி வரலாறு காணாத போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு 12-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதையடுத்து அவர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.

    பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் கேட்பதற்கு கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட 100 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    விஜய் விசாரணைக்கு சென்ற நேரத்தை ஒட்டியே கரூர் சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவரும், தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த (தற்போது தலைமையக கூடுதல் கமிஷனர்) ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரும் ஆஜர் ஆகினர். விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒப்பிட்டே அவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

    சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் த.வெ.க. இதனை மறுத்து போலீஸ் தரப்பை குற்றம் சாட்டியுள்ளது.

    எனவே, சி.பி.ஐ. விசாரணை இருபக்கமும் கூர்மையாக செல்கிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணையை கொண்டு செல்கிறார்கள். ஒன்று, கட்சியிடம் நடத்தப்படுகிறது. மற்றொன்று காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்படுகிறது. இன்னொன்று சி.பி.ஐ. அதிகாரிகளின் கள ஆய்வு மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த 3 கோண விசாரணையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்பீடு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.

    த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார். சம்பவத்துக்கு த.வெ.க. பொறுப்பல்ல என அவர் உறுதிபட கூறியுள்ளார்.

    அவரை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.

    இந்நிலையில சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.

    ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
    • மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

    இந்த இனிய பொங்கல் திருநாளில், மக்கள் தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை வைத்து, புதுப்பானையில் அரிசியிட்டு, அது பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளை அலங்கரித்து, பொங்கல் மற்றும் வாழைப் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

    உழவர்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது.

    பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 பரிசுத்தொகை வழங்கும் பணி இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகளில் நாளையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு, பரிசுத்தொகை வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நாளையும் வழங்கப்படுகிறது.

    இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3,000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும்.
    • கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.

    2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள் மொழிக்கு வழங்கப்படுகிறது.

    அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ.வுக்கும், பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படுகிறது.

     

    பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத் துல்லாவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமை செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது.

    விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

    மேற்குறிப்பிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான வருகிற 16-ந்தேதி விருதாளர்களுக்கு வழங்க உள்ளார்.

    ×