என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை இருந்தாலும் பொதுவாக டிசம்பர் மாதத்திற்குள் அதிகபட்ச மழை பெற்று முடிந்து விடும். ஜனவரி மாதத்தில் படிப்படியாக குறைந்து பருவமழை விலகி விடும்.
ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையையொட்டி மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் இடியுடன் மழையும் அதன் பின்னர் மழை குறைந்து 10-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டம் கடனாஅணை 24 செ.மீ., குன்னூர் 21 செ.மீ., சிவகிரி 17 (தென் காசி), வீரபாண்டி (தேனி) 12, கோத்தகிரி (11 செ.மீ., சேரன் மாதேவி 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
- இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
- தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார்.
திருச்சி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அதேபோல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பொங்கலுக்கு பிறகு முக்கிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள்.
அதை தடுப்பதற்கு மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைபயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.
மேலும் இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சியில் இன்று நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார்.
அதன்படி வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைபயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
9 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் பயணித்தும், நடந்து சென்றும் ரோடு-ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.
இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார்.
இந்த நடைபயணம் வருகிற 12-ந்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது.
இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த கனமழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு மண் திட்டுகள் சாலையில் விழுந்தன.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மண்சரிவில் சிக்கி கொண்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண் திட்டுகள் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 1 மணிக்கு அங்கு போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மேலும் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று குன்னூர்-கொலக்கெம்பை, சேலாஸ் செல்லும் சாலையில் 7 இடங்கள், குன்னூர்-ஊட்டி சாலையில் 4 இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கனமழைக்கு குன்னூர் வேளாங்கண்ணி நகர் பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதேபோன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் நின்றிருந்த 3 கார்கள் மீது மண் குவியல் விழுந்து கார்கள் சேதம் அடைந்தன.
மேலும் அப்பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தன. அங்குள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது. இதனால் ரெய்லி காம்பவுண்ட் மற்றும் மாடல் அவுஸ் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
மேலும் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் குன்னூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு முதல் இன்று காலை வரை மின்வினியோகம் தடைபட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்தது.
ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
குன்னூர்-215, கோத்தகிரி-114, குன்னூர் புறநகர்-90, கீழ்கோத்தகிரி-73, கெத்தை-66, கிண்ணக்கொரை-63, பாலகொலா-60, கொடநாடு, குந்தா-51, பர்லியார்-46, ஊட்டி-37.4 அளவு மழை பெய்துள்ளது.
திருச்செந்தூர்:
சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (வயது 31) ஓட்டினார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களது உதவியுடன் வேனில் இருந்தவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து வெளியேறினர்.
உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பிரசாந்த் (38), அபிஷேக் (21), சந்திரன் (51), ராகுல் (26) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது.
மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது. உடனடியாக மலை ரெயில் கல்லாறில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
- மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு நேரடி தொடர்பு இருந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தொடர்ந்து அந்த அமைப்பை காங்கிரசார் எதிர்த்து வருகிறார்கள்.
இதற்கிடையே நடைபயண அழைப்பிதழ் வழங்கியபோதே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெறும் வைகோ நடைபயண தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
இதில் மாநில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வழக்கமான வெயில் அடித்தது. மாலையில் நாங்குநேரி பகுதியில் லேசான சாரல் பெய்தது.
இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை சுற்று வட்டாரங்களில் இரவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடைவிடாமல் கனமழையாக பொழிய தொடங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் இன்று காலை நிலவரப்படி 10 சென்டி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 9 சென்டி மீட்டரும், கண்ணடியன் கால்வாய் பகுதி, களக்காடு சுற்றுவட்டாரங்களில் 5 சென்டிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாஞ்சோலையில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 8 சென்டி மீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 955 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 465 கனஅடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் அம்பை சுற்றுவட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணியையொட்டி நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரவில் பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வயல்வெளிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் இடைவிடாமல் பெய்தது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 52 கனஅடி நீர் வந்த இடத்தில் இன்று காலை வினாடிக்கு 1,265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் ராமநதி அணைக்கு 312 கனஅடியும், கருப்பாநதியில் 25 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அணை அடி வாரத்தில் உள்ள சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, சம்பன் குளம், கல்யாணிபுரம் சுற்றுவட்டாரத்திலும் மிக கனமழை கொட்டியது.
ராமநதியில் 12 சென்டி மீட்டரும், கருப்பாநதியில் 7½ சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதேபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் சற்று கூட இடைவெளி விடாமல் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீர் கனமழையால் மக்கள் அவதி அடைந்தனர்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கிடையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். ஏற்கனவே இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வந்துள்ளன. நேற்று டோக்கன் வரப்பெற்றுள்ளன. அதில் கடையின் பெயர், எண், டோக்கன் எண், ரேஷன் கார்டு தாரரின் பெயர், ரேஷன் அட்டை எண், கிராமம், தெரு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அந்த டோக்கன் திரும்ப பெறப்படும். டோக்கன் பெறாதவர்கள், பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அவற்றை நிரப்பி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றார்கள்.
- வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
- ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தித்திக்கும் பொங்கலுடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவும் பா.ஜ.க. வியூகங்கள் அமைத்து வருகிறது.
அந்த வகையில் வருகிற 5-ந்தேதி ஸ்ரீரங்கத்தில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுக்கோட்டைக்கு வர உள்ளார். அன்றைய தினம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இதில், சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதையடுத்து, திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர், மறுநாள் (5-ந்தேதி) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். இதையடுத்து காலை 11 மணி அளவில் மன்னார்புரம் ராணுவத்திடலில் ஏறக்குறைய 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் "மோடி பொங்கல்" விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில் 4-ந்தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 5-ந்தேதி திருச்சியில் வைத்து இருவரின் சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமித்ஷாவுடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், தேர்தல் வியூகம், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இணைப்பு, குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 5-ந்தேதி திருச்சியில் நடக்கும் பொங்கல் விழாவிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
- இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன.
- தென்காசியில் 20 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் ஆங்கில புத்தாண்டோடு தங்களது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்த குழந்தைகளை ஆஸ்பத்திரியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சந்திரகலா உள்ளிட்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண் 5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண்-6, பெண்-14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண்-24, பெண்-23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண்-12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும், சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்து உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகளும் (ஆண் - 9, பெண் -15), தூத்துக்குடியில் 12 (ஆண்-4, பெண்-8) குழந்தைகளும், தென்காசியில் 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.
திருச்சியில் 13 (ஆண்-8, பெண்-4), பெரம்பலூரில் 10 (ஆண்-7, பெண்-3), அரியலூரில் 3 (ஆண்-2, பெண்-1), புதுக்கோடடையில் 14 (ஆண்-9, பெண்-5), கரூரில் 4 குழந்தைகள் (ஆண்-4) பிறந்துள்ளன. கிருஷ்ணகிரியில் 15 (ஆண் 7, பெண்8), தர்மபுரியில் 13 (ஆண் 7, பெண் 6), நாமக்கல்லில் 10 (5 ஆண், 5 பெண்), சேலத்தில் 29 குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சையில் 22 குழந்தைகளும், திருவாரூரில் 3 குழந்தைகளும், நாகையில் 6 குழந்தைகளும், மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
புதுச்சேரியை பொறுத்தவரை புத்தாண்டான நேற்று 26 குழந்தைகள் (ஆண்-12, பெண்-14) பிறந்துள்ளன.






