search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேகர் பாபு"

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    • பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி தமிழக அரசை நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.
    • பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை என சேகர் பாபு விளக்கம்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை.

    முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி "அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தனியாருக்கு சொந்தமான கோவில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களை மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

    • மழைநீர் வடிகால் திட்டம் தற்போது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்போடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பேருந்து நிலையம் சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட இருந்தது. பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக கனமழை பெய்தது. மழைநீர் செல்வதற்கு போதிய வகையில் மழைநீர் வடிகால் ஏற்படுத்தாததால் மழை நீர் பேருந்து நிலையத்திற்குள் குளம்போல் தேங்கியது.

    இதனால் மழைநீர் முழுவதும் வடிந்து செல்லும் வகையில் வடிகால் பணி முழுமையாக முடிவடைந்ததும் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகை (தமிழ் புத்தாண்டு) வருகிறது. அதற்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என தமிழக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 1200 மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2310 பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர்கள் தை 1-ந்தேதியைத்தான் தமிழ்புத்தாண்டு எனக் கூறி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019, பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • 151-வது நிலம் சர்வே செய்யும் பணி தொடக்க விழா நல்லம்பள்ளி கோபாலம்பட்டியில் இன்று தொடங்கி வைக்கபட்டுள்ளது.
    • பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காலபைரவர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நல்லம்பள்ளி அருகேவுள்ள கோபாலம் பட்டியில் கோவில் நிலத்தை அளவீடும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து அதியமான் கோட்டையிலுள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி நகரில் பிரசித்திப்பெற்ற பழமையான கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேசியதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஜி.பி.எஸ் கருவி மூலம் நில அளவை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1.50 ஏக்கர் நிலம் சர்வே செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    151-வது நிலம் சர்வே செய்யும் பணி தொடக்க விழா நல்லம்பள்ளி கோபாலம்பட்டியில் இன்று தொடங்கி வைக்கபட்டுள்ளது.

    கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்ந்து, நில அளவையாளர்கள் கொண்டும், ஜி.பி.எஸ் கருவி உதவியின் மூலமும், அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதனையடுத்து தருமபுரி மாவட்டத்திலும் நில அளவீடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதியமான் கோட்டையிலுள்ள காலபைரவர் கோவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று காலபைரவர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பணிகளை விரைவாக எடுத்துக் கொள்ளவும், பக்தர்களின் வசதிக்காக கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதற்கும், அஷ்டமி காலங்களிலும் பூஜைக்கு அதிகமாக பக்தர்கள் வந்து செல்வதால், அவர்கள் விளக்கேற்றி சாம்பல் பூசணி வைத்து வழிபாடு செய்ய வசதியாக கோவிலுக்கு அருகேவுள்ள தனியார் நிலத்தை கோவி லுக்கு பெறுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற் கொண்டு வருகின்றோம்.

    கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் சாமி கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும்.

    இதே போல பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் கோவில் தேரினை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மத்திய மந்திரி அமித் ஷா தொடங்கி வைக்கிறார்
    • 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம்

    'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    நடைபயண தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார்.

    அண்ணாமலை நடைபயணம் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் ''ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கிறாரோ? எனத் தெரியவில்லை. ஆனால், நடைபயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருடைய நடைபயணத்திற்கு வாழ்த்துக்கள்'' என்றார்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர்.
    • நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர். மாலையில் தான் தண்ணீர் வடிந்து நிலைமை சரியானது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்ததால் சென்னை மழை பாதிப்பை அங்கிருந்தபடியே கேட்டு அமைச்சர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் மழை பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மூத்த அமைச்சர்கள் கண்காணிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர்களை சென்னையிலேயே இருந்து மழை பாதிப்புகளை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர்கள் மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • சென்னையில் ஒரு திருமண நிகழ்வுக்கு சேகர்பாபுவும் அழைத்து இருந்தார்.
    • எனக்கு தூக்கத்தில் கூட மார்ச் 16 என்று சேகர்பாபு வர தொடங்கிவிட்டார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசியதாவது:-

    இவர் சேகர்பாபு அல்ல. செயல்பாபு என்று தலைவராலேயே பாராட்டப்பட்டவர். நான் சொல்வேன். இவர் வெறும் செயல்பாபு அல்ல. சூப்பர் செயல்பாபு.

    என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொள்வார். நான் நாமக்கல்லில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக ஒத்துக்கொண்டிருந்த அதே தேதியில் சென்னையில் ஒரு திருமண நிகழ்வுக்கு சேகர்பாபுவும் அழைத்து இருந்தார். அவரை சமாளித்து நாமக்கல்லுக்கு போவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்த நிகழ்ச்சியை பற்றி பேசிய போதே 'அப்படீன்னா மார்ச் 16 சென்னையில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. அதில் உங்கள் பெயரை போட்டுக்கொள்கிறேன் என்று போனிலேயே அடுத்த தேதியை வாங்கிக் கொண்டார்.

    அன்று முதல் எப்போது பார்த்தாலும் அண்ணே மார்ச்.16... அண்ணே மார்ச். 16 என்று நினைவுபடுத்திக் கொண்டே வந்தார்.

    எனக்கு தூக்கத்தில் கூட மார்ச் 16 என்று சேகர்பாபு வர தொடங்கிவிட்டார். இப்போது சொன்னபடி நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் அவருக்கு நிம்மதி.

    • மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    • சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான்.
    • தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை போல 4 நாட்கள் மழை பெய்ததே எங்களை போல் வீதியில் இறங்கி சுற்றினீர்களா? இல்லை நிவாரண பணிகளை செய்தீர்களா? எங்கெங்கு தண்ணீர்கள் தேங்கி இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டே கேள்வி கேட்பதா என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது சென்னையில் மழை நீர் தேக்கத்திற்கு அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதற்குத்தான் இப்படி ஒரு கேள்வியை சேகர்பாபு எழுப்பி இருக்கிறார்.

    நாங்கள் வீதி, வீதியாக சென்று எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அதை வடிய செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். மக்களுக்கு உதவி செய்தோம். உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் எதுவுமே செய்யாததால்தான் இப்போது இந்த தண்ணீர் தேக்கமும். எங்களுடைய நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்று கூறினார். சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான். தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார். இதை குறிப்பிட்டு தன்னோடு இருந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி சொன்னாராம்.... "இப்போது அவர் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் போயிருக்கிறார். அதை நாம் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காலம் இனியும் மாறத்தான் செய்யும்" என்றாராம்.

    ×