என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்"

    • எல்லையோர கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
    • பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் ரூ. 40 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    நேற்று, இரவு எல்லையோர கிராம மக்கள் சிலர், டிரோன் ஒன்று பறப்பதையும், அது ஒரு பொட்டலத்தைக் கீழே போடுவதையும் கவனித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.

    எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், விவசாய நிலங்களில் இருந்து அந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

    அதேநேரம், மற்றொரு சம்பவத்தில், கதுவா மாவட்ட எல்லைப் பகுதியில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய புகாரில் ஜதின் மற்றும் டேனிஷ் டோக்ரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இவர்கள் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  

    • டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது.
    • கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. அங்குள்ள சவுசாலாவில் ஒரு மையத்தில் ஆங்கில தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வில் முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நூதன முயற்சியை மேற்கொண்டனர்.

    அதன்படி தேர்வு மையத்தின் மேல் டிரோனை பறக்க விட்டு கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது சில பெற்றோர்களும், உறவினர்களும் தேர்வு மையத்தின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டு, மாணவர்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப முயற்சிப்பது டிரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. சிலர் ஜன்னல்களில் ஏறிச் செல்வதையும் காண முடிந்தது.

    டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது. தேர்வு மைய வளாகம் திறந்த வெளியில் இருந்ததால் வெளியில் இருந்து மாணவர்களை அணுகுவதை எளிதாக்கியதாகவும், பெற்றோர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். டிரோன் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவும் டிரோன் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. 

    • டிரோன் ஷோவிற்காக 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
    • வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

    தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான தருணமாக, 'வித் லவ் (With Love)' திரைப்பட குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

    ஜியோன் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் (MRP Entertainment) இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், `டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, "வித் லவ்" திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் புதுமையான விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது. தமிழ் சினிமாவில், திரைப்பட விளம்பரத்திற்காக டிரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    வானில் மின்னும் எழுத்துகளாக 'With Love' தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது. இந்த தனித்துவமான நிகழ்வில், 'வித் லவ்' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.

    சமூக வலைதளங்களில் இந்த டிரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

    • செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கல்லூரியை திறந்து வைக்கிறார்.
    • காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

    இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல்புதூரில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தியடிகள், ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு காரைக்குடியில், திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை காலை 9.30 மணிக்கு காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கல்லூரியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து காலை 10.10 மணிக்கு காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார். பின்னர் 11.15 மணிக்கு சட்டக்கல்லூரி அருகே புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். பகல் 11.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு காரில் புறப்படுகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி அவர் பங்கேற்கும் இடங்களில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர தயால், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சேகர் தேஷ்முக்த், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ்புனியா மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

    முதலமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று சிவகங்கை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    • பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
    • டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

    பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. 

    • காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
    • 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ராமேசுவரம்:

    காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை, பாதுகாப்பு துறை உயர் மட்ட அதிகாரி குழு ஆலயம் விடுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ் சங்கமம் நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை மாலை 3:30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்து, ஒரு மணி நேரம் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக சென்று மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக வரும் போது மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குடியரசு துணை தலைவர் நிகழ்ச்சி மேடையை வந்தடைந்த உடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.

    அதேபோல் மீண்டும் அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

    • தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சர்வ லக்ஷன் தாஸ். ஆந்திர மாநிலம், ஒங்கோலை சேர்ந்தவர் பானு சந்தர். இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தனர். பஸ்சில் ஏறி திருப்பதி மலைக்கு சென்றனர். திருப்பதி மலையில் உள்ள கல் வளைவு என்ற பகுதியில் தாங்கள் கொண்டு வந்த டிரோன்களை பறக்க விட்டு படம் பிடித்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி மலைக்கு மது, மாமிசம், போதைப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அலிபிரி சோதனை சாவடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பலத்த சோதனைக்கு பிறகு இவர்கள் எப்படி டிரோன் கேமராவை கொண்டு வந்தார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அலட்சியமாக பணியில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர். 25,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
    • அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக டிரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார்.

    சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட  ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

    அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.

    கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA சான்றிதழ்களைப் பெற்ற இந்தியாவின் முதல் டிரோன் ஸ்டார்ட்அப் ஆகும்.

    தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், "எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.

    அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். டிரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்" என்று தெரிவித்தார். 

    • ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.

    எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்படுகிறது.
    • இதை கண்காணிக்க டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 553 கி.மீ. தூரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இந்த எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிரோன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பறக்கவிடப்படும் டிரோன், இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்களை போட்டுவிடும். அதை ஏஜென்ட்கள் எடுத்து மற்ற இடத்திற்கு கடத்துவது வழக்கமாகி வருகிறது.

    இதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் டிரோன் எதிர்ப்பு சிஸ்டத்தை (Baaz Akh) பஞ்சாப் அரசு தொடங்கியுள்ளது.

    எல்லை பாதுகாப்பு படையு ஒத்துழைப்புடன் இந்த சிஸ்டம் செயல்படும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன்கள் பறந்து வந்தாலு, இந்த சிஸ்டம் அவற்றை தாக்கி அழிக்கும்.

    இந்த சிஸ்டத்தை பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • அமிர்தசரஸில் உள்ள மோதே எல்லையில் 5 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
    • ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 டிரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அமிர்தசரஸில் உள்ள மோதே கிராமத்தில் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் (magazines), 1.070 கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    • 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
    • கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ×