என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி மலையில் டிரோன்களை பறக்க விட்ட 2 வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் விசாரணை
    X

    திருப்பதி மலையில் டிரோன்களை பறக்க விட்ட 2 வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் விசாரணை

    • தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சர்வ லக்ஷன் தாஸ். ஆந்திர மாநிலம், ஒங்கோலை சேர்ந்தவர் பானு சந்தர். இருவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தனர். பஸ்சில் ஏறி திருப்பதி மலைக்கு சென்றனர். திருப்பதி மலையில் உள்ள கல் வளைவு என்ற பகுதியில் தாங்கள் கொண்டு வந்த டிரோன்களை பறக்க விட்டு படம் பிடித்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் பிடித்து டிரோன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி மலைக்கு மது, மாமிசம், போதைப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அலிபிரி சோதனை சாவடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பலத்த சோதனைக்கு பிறகு இவர்கள் எப்படி டிரோன் கேமராவை கொண்டு வந்தார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அலட்சியமாக பணியில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 67,336 பேர் தரிசனம் செய்தனர். 25,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×