என் மலர்tooltip icon

    Recap 2023

    • பிரதமர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    2 ஆண்டு சிறைத்தண்டனை

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்டது. இதனால் இவரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.


    தகுதி நீக்கம்

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. அதானி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதை தடுக்கவே அவரை வெளியேற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

    தண்டனை நிறுத்திவைப்பு


    அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்திக்கு நிம்மதி ஏற்பட்டது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரது எம்.பி பதவியும் தப்பியது.

    • இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகின.
    • முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலை மாடலை அறிமுகம் செய்தன.

    2023 ஆண்டு இந்திய சந்தையில் இருசக்கர வாகன பிரியர்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. பழைய பிராண்டுகளில் துவங்கி பிரீமியம் பிராண்டுகள் வரை சிங்கில் சிலிண்டர் மற்றும் டுவின் சிலிண்டர் என்ஜின் கொண்ட வாகனங்கள் பிரிவில் களமிறங்கின.

    வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வழக்கமான பாணியை தவிர்த்து, வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறைந்த விலை மாடல்கள் மட்டுமின்றி பிரீமியம் மற்றும் ஃபிளாக்ஷிப் பிரிவில் இருசக்கர வாகன சந்தை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.

    அந்த வகையில், இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் டாப் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்..

    ராயல் என்பீல்டு ஹிமாலயன்:

    புதிய தலைமுறை ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்கிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய ஷெர்பா 450 என்ஜின் கொண்டிருக்கிறது. ராயல் என்பீல்டு உருவாக்கியதிலேயே அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மாடலாக புதிய ஹிமாலயன் அமைந்தது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.


    டிரையம்ப் 400 சீரிஸ்:

    டிரையம்ப் நிறுவனத்தின் 400 டுவின்ஸ் மாடல்களை பஜாஜ் ஆட்டோ உற்பத்தி செய்தது. இந்த மாடல்களில் 400சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் என்று துவங்குகிறது.

     


    கே.டி.எம். 390 டியூக்:

    புதிய தலைமுறை கே.டி.எம். 390 டியூக் மாடல் அதிகளவு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மேம்பட்ட என்ஜின், ரைடர் எலெக்டிரானிக்ஸ், முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இதன் விலை ரூ. 3 லட்சத்து 11 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    ஹார்லி டேவிட்சன் X440:

    ஹார்லி டேவிட்சன் இதுவரை உருவாக்கியதிலேயே சிறிய மாடல் இது ஆகும். பட்ஜெட் அடிப்படையிலும் இந்த மாடல் ஹார்லியின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 440 சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    டி.வி.எஸ். அபாச்சி RTR 310:

    டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக அபாச்சி RTR 310 அறிமுகம் செய்யப்பட்டது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் அபாச்சி RTR 310 மாடலில் 312 சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • இந்திய மக்களை பரபரப்பாக பேசவைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது.
    • நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்


    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்க வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நவம்பர் 12-ம் தேதி தீபாவளி அன்று சுரங்கத்தின் பாறைகள் இடிந்து விழுந்தது. அங்கு பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

    மீட்புப் பணிகளில் சிக்கல்


    மீட்புப் பணி தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தது. எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் இதில் இறக்கப்பட்டனர். இந்த முறையே வெற்றிக்கு வித்திட்டது.

    17 நாளுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசித்த தொழிலாளர்கள்


    நவம்பர் 28-ம் தேதி இரவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து பகுதியில் முகாமிட்டிருந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர்.

    • நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது.
    • இந்த விண்கலத்தில் இருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

    சந்திரனில் சாதித்த சந்திரயான் 


    நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வுசெய்ய இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி அனுப்பியது. விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது.

    நிலவில் கால் பதித்த 4வது நாடு இந்தியா


    நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விண்வெளித்துறையில் இந்தியா படைத்த முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    ஆதவனை நோக்கிப் பயணித்த ஆதித்யா எல்-1


    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெற்றது.

    • செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
    • அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.

    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

    அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

     


    இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.

    சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

     


    உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும். 

    • தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு.
    • திராவிட மாடல் போன்ற வாக்கியங்களை குறிப்பிடவில்லை என அவருக்கு எதிராக தீர்மானம்.

    தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை கவர்னர் அப்படியே வாசிப்பதுதான் நடைமுறை.

    ஆனால் ஜனவரி 9-ந்தேதி சட்டசபை கூடியதும் கவர்னர் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல் ஆகிய வாசகங்களை வாசிக்கவில்லை. இதை உன்னிப்பாக கவனித்த துரைமுருகன் உடனடியாக ஒரு தீர்மான அறிக்கையை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

    கவர்னர் முழு உரையையும் வாசித்தபின், சபாநாயகர் தமிழ் உரையை வாசிப்பார். அதன்பின் தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடையும்.

     சபாநாயகர் தமிழ் உரையை வாசித்த முடித்த உடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அந்த தீர்மானத்தில் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து பகுிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரை இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனக் கூறியதும், அவை முடிவடையும் முன்னதாகவே ஆளுநர் ஆர்.என். ரவி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    • இளங்கோவனின் மகன் திருமகன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.

    இதனால் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர்.

    2019-ல் நடந்த மக்களை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியை சந்தித்த ஒரு வேட்பாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னதாக டுவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றினார் மஸ்க்
    • விளம்பர வருவாய் மஸ்க் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைந்தது

    உலக புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) நிறுவனத்தை, 2022ல் உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். 2023ல் மஸ்க் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை வளர்க்கவும் பல அதிரடி முயற்சிகளை எடுத்தார். முன்னதாக "டுவிட்டர்" பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார்; நிறுவன இலச்சினையை (logo) மாற்றினார்; பல உயர்மட்ட அதிகாரிகளையும், கடைநிலை மற்றும் இடைநிலை ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார்; தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார். ஆனால், இதுவரை "எக்ஸ்" விளம்பர வருவாய் அவர் எதிர்பார்த்தது போல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    இதை தொடர்ந்து, எக்ஸ் குறித்த தனது திட்டங்களை மஸ்க் மாற்றியமைப்பார் என தெரிகிறது.

    • ஆக்ரமிப்புக்கு எதிராக உக்ரைன் போரிட்டு வருகிறது
    • போர் 667 நாட்களை கடந்து தொடர்கிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.


    இரு தரப்பிலும் பெரும் கட்டிட சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்தாலும், போர் 667-வது நாட்களை கடந்து இன்று வரை தொடர்கிறது.

    • 2023ம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. 3 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளோடு 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தது.

    வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி


    கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சி கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. மேகாலயாவில் பா.ஜ.க, தேசிய மக்கள், ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை அடங்கிய மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. நாகாலாந்தில் என்.டி.பி.பி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

    கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்


    கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சித்தராமையா முதல் மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் 2,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.

    5 மாநில தேர்தலில் பா.ஜ.க. அபாரம்


    மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. பதவியை தக்கவைத்தது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்தது பா.ஜ.க. இதனால் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரமில் எதிர்க்கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

    • சாம்சங் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாடல்களை அறிமுகம் செய்தது.
    • ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் அறிமுகமாகின. முன்னணி நிறுவனங்கள் துவங்கி புதிதாக களமிறங்கிய நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களை எந்த மாடலை வாங்குவது என்று குழம்ப செய்தன. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த மாடல்கள் ஒருபுறம் கவனம் ஈர்த்தன.

    மறுப்பக்கம் யாரும் எதிர்பாராமல் அறிமுகமாகி பிறகு, நல்ல வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களும் சந்தையில் கணிசமான விற்பனையை பதிவு செய்தன. அந்த வரிசையில், 2023 ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    ஐகூ 11 5ஜி:

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி மாதத்திலேயே அறிமுகமான ஐகூ 11 5ஜி பிரீமியம் டிசைன், அசத்தலான டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

     


    சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி:

    2023 பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி S3 அல்ட்ரா 5ஜி மாடல் அசத்தலான அம்சங்கள், சிறப்பான கேமரா சென்சார்கள் மற்றும் அதிரடியான பிராசஸர் கொண்டிருக்கிறது. இது சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.

     


    ஒன்பிளஸ் 11:

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போது அறிமுகமானதில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக இருந்தது. மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    விவோ X90 ப்ரோ:

    பிரீமியம் டிசைன், அழகிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்டவை விவோ X90 ப்ரோ மாடலின் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     


    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல் இது ஆகும். முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன், சக்திவாய்ந்த பிராசஸர், தலைசிறந்த கேமரா சென்சார்கள் உள்ளிட்டவை ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 5, ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன. ஃப்ளிப் போன் பிரிவில் ஒப்போ ஃபைண்ட் N3 அதன் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை என அனைத்து பிரிவுகளிலும் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. 

    ×