search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    • விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்- அமைச்சர் தென்னரசு
    • இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது- அமைச்சர் கணேசன்

    தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் (ஏப்ரல் 23-ந்தேதி) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.

    இருந்தாலும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மசோதா நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக தெலுங்கு நடிகை தெரிவித்தார்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி உள்பட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கண்டு களித்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் சச்சின் 2011 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்தார்.


    2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக அவர் தெரிவித்தார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்தனர்.


    ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபட்டது.


    ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது.


    அதன் விவரம் வருமாறு:

    1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

    ஒரு உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அதிக ரன் திரட்டிய கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை ரோகித் தகர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெய்ல் (85) சாதனையை ரோகித் (86) முறியடித்தார்.


    இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    • ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
    • பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    துருக்கியில் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

    துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. 

    இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

    இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

    நிலநடுக்கத்தால், சுமார் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டில் உலகளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில், அதி பயங்கர சம்பவமாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கருதப்படுகிறது.

    • பல "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன
    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2022-ஐ விட 2023ல் அதிகம்

    2022 வருட பிற்பகுதியில் அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்களை கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் செய்யும் "லே ஆஃப்" (layoff) நடைமுறை தொடங்கியது.

    இவ்வருடமும் அந்த நடைமுறை தொடர்வதுடன் பணிநீக்கங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், யாஹு, மெடா மற்றும் ஜூம் உள்ளிட்ட பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி "ஸ்டார்ட் அப்" நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

    பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை, பணியாளர்களின் திறன் வளர்த்தல் குறைபாடு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை, ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு செலவினங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் லே ஆஃப் நடப்பதாக கூறப்பட்டு வருகிறது.

    பணியை இழந்தவர்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது.


    அமெரிக்காவில் ஹெச்1-பி விசா முறையில் பணிக்காக சென்றவர்கள் பணியில்லாமல் சில மாதங்களே வசிக்க முடியும். வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இச்சூழலில் வேலை இழந்தவர்கள் மாற்று வேலையை தேடி வருகிறார்கள்.

    கடந்த டிசம்பர் 21 வரை 2,24,503 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2022 ஆண்டு எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க பொருளாதார மந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டும் இது தொடரலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • கோவை, திருப்பூர் மாநிலங்களில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி.
    • பீகார், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் பிரச்சினை எதிரொலிக்க, குழு அமைத்து விசாரணை

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவரும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருமாநில தொழிலாளர்கள் மீது கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலம் திரும்பினர். இது பாதுகாப்பு தொடர்பான பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் எதிரொலித்தது.

    இதனால் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.

    என்றபோதிலும் பீகார் அரசு இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தமிழகம் வந்து பீகார் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் சந்தோசமாக இருக்கிறோம். எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்தனர். அதன்பின் இந்த விவாகரம் முடிவடைந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு மாநிலத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி கிளம்பியது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அதன்பின் தென்மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தினர் சென்றனர்.

    • அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பின்னர் பொதுச் செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்களாவும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    இதனால் 2022 ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரை பொதுச் செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.

    இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.

    பின்னர் ஏப்ரல் 20-ந்தேதி அதிமுக-வின் பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களையும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக் கொண்டது.

    • 5 நிறுவன பங்குகள் முதலீட்டிற்கு 50 சதவீத லாபத்தை ஈட்டி தந்தன
    • இவ்வருடம் முதல்முறையாக நிஃப்டி 21 ஆயிரத்தை கடந்து வர்த்தகமாகியது

    2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு விதித்த ஊரடங்கு உத்தரவினால் பல இந்தியர்கள் வீட்டிலிருந்தே வருவாயை அதிகரிக்கும் வழிகளை தேடி வந்தனர். அவர்களுக்கு பங்கு சந்தை ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததனால், அப்போதிலிருந்தே இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    இவ்வருடத்தின் முதல் வர்த்தக நாளான ஜனவரி 2 முதல் கடந்த டிசம்பர் 21 காலம் வரை இந்திய பங்கு சந்தையில் பல பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டி தந்தன.

    குறிப்பாக 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்தை கடந்து வர்த்தகமாகி உள்ளன.

    டாடா மோட்டார்ஸ் - ஜனவரி 2 அன்று 394 - டிசம்பர் 21 அன்று 708

    என்டிபிசி - ஜனவரி 2 அன்று 168 - டிசம்பர் 21 அன்று 301

    பஜாஜ் ஆட்டோ - ஜனவரி 2 அன்று 3573 - டிசம்பர் 21 அன்று 6246

    எல் அண்ட் டி - ஜனவரி 2 அன்று 2089 - டிசம்பர் 21 அன்று 3424

    கோல் இண்டியா - ஜனவரி 2 அன்று 224 - டிசம்பர் 21 அன்று 355

    முதல்முறையாக, மும்பை பங்கு சந்தை பிஎஸ்ஈ (BSE) குறியீட்டு எண் 70,000 தொட்டதும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி (Nifty) 21,000 தொட்டதும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ், முதலீட்டாளர்களுக்கு 44 சதவீதம் லாபம் ஈட்டி தந்தது. ஜனவரி 2 அன்று 2715 என தொடங்கி டிசம்பர் 21 அன்று 3850 என வர்த்தகமாகியது.

    ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உட்பட பல சிக்கல்களுக்கு இடையே பங்கு சந்தை வலுவாக இருந்ததை சாதனையாக குறிப்பிடுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

    • ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.
    • இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.


    இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.


    இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.


    இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.


    இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

    • ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் இந்த தொடரில் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 

    அந்த போட்டியில் இருந்து ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதேபோல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்தார்.

    இந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் பெங்களூர் அணிக்கு எதிராக காயமடைந்தார். பீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த சீசனின் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சீசனில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்தாலும் சிக்சர் மூலம் மிரட்டலான சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் 252 சிக்சருடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

     

    ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

     

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    மேலும் 236 ஆட்டங்களில் ஆடிய டோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.


    இந்த சீசனில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கம்பீர் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை யாரும் மருந்து விட முடியாது. இந்த மோதலினால் கோலி- கம்பீர் ஆகியோருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது.


    ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது. அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.


    இந்த தொடர் முழுவதிலும் சென்னை அணி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு சென்னை அணிக்கே அதிகமான ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் இந்த தொடருடன் டோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது. இதனால் அவரை கடைசி போட்டியில் பார்த்து விட வேண்டுமென்றே அனைவரும் சென்றதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.


    இந்த சீசனில் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.


    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினர். 

    • உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை சம்பவங்களில் நிகழ்ந்தவை
    • மாஸ் ஷூட்டிங் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன

    இவ்வருட தொடக்கம் முதல் கடந்த டிசம்பர் 7 வரை அமெரிக்காவில் 40,167 பேர் துப்பாக்கி சூட்டில் நிகழும் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் எனும் விகிதத்தில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவர்களில் 1306 பேர் பதின் வயதுக்காரர்கள்; 276 பேர் குழந்தைகள்.

    இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைகளால் (22,506) நிகழ்ந்தவை.

    டெக்ஸாஸ், கலிபோர்னியா, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, வடக்கு கரோலினா, இல்லினாய்ஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில்தான் இவை அதிகம் நடந்துள்ளன. பணியின் போது உயிரிழந்த 46 காவலர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.

    "மாஸ் ஷூட்டிங்" எனப்படும் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் சுடப்படும் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன.

    ஆண்டுதோறும் நிகழும் துப்பாக்கி கலாச்சார உயிரிழப்புகள், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து கொண்டே செல்வதால் இதை தடுக்க அமெரிக்க அரசு முனைய வேண்டும் என உளவியல் வல்லுனர்களும், காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர்.

    • கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது
    • கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விசா வழங்கலை இந்தியா நிறுத்தியது

    கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார், கனடா நாட்டின் வேன்கூவர் (Vancouver) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, செப்டம்பர் 18 அன்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்ததுடன், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

    இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைய ஆரம்பித்தது.

    இந்தியாவிற்கான கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புபவர்களுக்கு விசா வழங்கலை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.


    இரு தரப்பிலும் சுமூகமான உறவு ஏற்பட உயர் அதிகாரிகள் தரப்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் 2024ல் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு அமையும் என அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடங்கியது
    • 75 நாட்களை கடந்து தீவிரமாக இப்போர் நடைபெற்று வருகிறது

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 3000 பேர் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் எல்லை பகுதிகளில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர். அந்த பயங்கரவாதிகள் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தி கொடூரமாக கொன்றனர். மேலும், சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் நிறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

    போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.

    75 நாட்களை கடந்து தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் இப்போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அங்கு மருத்துவமனைகள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன.


    இப்போர் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் உலக போராக மாறும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×