search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    • 21-ம் நூற்றாண்டில் தமிழகம் டிசம்பர் மாதம் பல பேரழிவுகளை கண்டுள்ளது.
    • 2004 சுனாமி, 2015 மழை வெள்ளம், வர்தா புயல் என இன்னல்களை சந்தித்துள்ளது.

    தமிழகத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் சற்று ஆகாது என்றே கூறலாம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் இயற்கை சீற்றங்களை டிசம்பர் மாதத்தில்தான் எதிர்கொண்டுள்ளது.

    2004-ம் ஆண்டு வங்கக் கடலில் சுனாமி ஏற்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல மாதங்கள் பிடித்தன.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் ஒருபோதும் மறக்காது. சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அதேவேளையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான வெள்ளம் திறந்து விடப்பட்டது.

    ஏற்கனவே மழை வெள்ளம் தேங்கிய நிலையில், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து அடையாறு கரையோரம் உள்ள பகுதியை சூழ்ந்தது. மேலும், அதுவரை தண்ணீரை கண்டிராக சென்னையில் பெரும்பாலான மையப்பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் உயிரிழந்த நிலையில், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

    2016-ல் வர்தா புயல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சுழன்று அடித்தது. இதில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும் ஆயிரக்காணக்கான மரங்கள் வேரோடு சரிந்தது போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது.

    சுமார் 8 வருடங்கள் கழித்து இந்த வருடம் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் மீண்டும் ஒருமுறை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தன. இந்த முறை ஏரியில் இருந்து சீரான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடானாது. சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் பயனளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

    மழை மற்றும் காற்று காரணமாக எண்ணூர் துறைமுக முகத்துவாரத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி உள்ள கடற்பகுதி எண்ணெப் படலமாக மாறியது. பின்னர் கடும் போராட்டத்திற்குப்பின் எண்ணெய் அகற்றப்பட்டது.

    மிக்சாங் புயலால் சென்னை மக்கள் அடைந்த சோகம் அடங்குவதற்குள் 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 150 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்தது. மேக வெடிப்பு இல்லை, புயல் இல்லை, காற்றழுத்த தாழ்வு இல்லை, கீழடுக்க சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இவ்வளவு மழை எப்படி பெய்தது என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.


    இந்த கனமழை காரணமாக இதுவரை தண்ணீர் தேங்காத கூடங்குளம் போன்ற வறண்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டால், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம்வரை வெள்ளத்தில் மிதந்தது.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர்- சென்னை ரெயில் சுமார் ஆயிரம் பயணிகளுடன் சிக்கியது. திருச்செந்தூர்- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருநெல்வேலி பாதைகள் முற்றிலும் சேதடைந்தன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியது. ஏரி, குளம் என அனைத்தும் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இரண்டு வாரங்களாக பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் வேதனையடைந்தனர்.

    • ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
    • இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.

    ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.


    இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

    • அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
    • மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

    எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

     

    மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

    FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

    18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலக சாம்பியனை கடைசி வரை போராட விட்ட பிரக்ஞாந்தாவை முதலமைச்சர் உள்பட பல சினிமா பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
    • மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.

    பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 29 அன்று மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.


    இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    • சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம்.
    • முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண் ஆயிரம் ரூபாய் பெற்றனர்.

    2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தது.

    திமுக அளித்திருந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

    அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்றன. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் முதன்முதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். சுமார் ஒன்றரை கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு, இந்த திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    அப்போது பலரது பெயர் விடுபட்டதாக விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பலர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன் பலனடைவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து, 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10-ந்தேதிக்கு மேல் 15-ந்தேதிக்குள் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    • ஜூன் 13-ந்தேதி பலமணி நேரம் விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன் 13-ந்தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் காவேரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் ஜூன் 21-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார்.

    என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை சேர்க்கவே, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

    செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டடு. ஆனால் மூன்று நீதிமன்றங்களும் ஜாமின் வழங்க மறுத்திவிட்டன. இதனால் தொடர்ந்து புழல் ஜெயலில் இருந்து வருகிறார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28-ம் தேதி திறந்துவைத்தார்.
    • மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28-ம் தேதி திறந்து வைத்தார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.


    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.

     


    • டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு பயணித்தது
    • 4 நாட்கள் உலகமே பயணிகளை குறித்து தகவல் எதிர்நோக்கி இருந்தது

    2023 ஜூன் மாதம், ஒஷன்கேட் (OceanGate) நிறுவனத்தை சேர்ந்த டைட்டன் (Titan) எனும் சிறு நீர்மூழ்கி வாகனத்தில் நியூஃபவுண்ட் லேண்ட் (Newfoundland) கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் தரை தட்டி நிற்கும் டைட்டானிக் (Titanic) கப்பலை காண 5 பேர் கொண்ட ஒரு குழு புறப்பட்டது.

    இதில் ஓஷன்கேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இங்கிலாந்தை சேர்ந்த கோடீசுவரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் பால்-ஹென்றி நார்கியோலெட், பாகிஸ்தான் கோடீசுவரர் ஷஹ்சாதா தாவுத் மற்றும் அவர் மகன் சுலெமான் தாவுத் ஆகிய 5 பேர் பயணித்தனர்.

    ஜூன் 18 அன்று ஆழ்கடலில் இறங்கிய சில மணி நேரங்களில் டைடன் தகவல் தொடர்பை இழந்தது.

    இதையடுத்து பெரிய அளவில் அவர்களை தேடும் பணி தொடங்கியது.

    5 பேர் கதி என்ன என உலகமே அதிர்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் ஜூன் 22 அன்று அந்த நீர்மூழ்கி வாகனத்தில் உள்ளிருந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் அதன் பாகங்கள் சிதறியிருப்பதாகவும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னேற்பாடுகளுடன் இது போன்ற பயணங்கள் செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் ஆதரித்தும், இவை ஆபத்தானவை மட்டுமின்றி தேவையற்றவை என எதிர்த்தும் ஒரு சாரார் கருத்து தெரிவித்தனர்.

    • ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டது.
    • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல்கள் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முன்னணி பிரான்டுகள் துவங்கி, ஆடம்பர கார் நிறுவனங்களின் மாடல்கள் வரை பலதரப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில், 2023 ஆண்டு இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


     

    ஹோண்டா எலிவேட்:

    காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த கார் மாடல் - ஹோண்டா எலிவேட். இந்த கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன. ஹோண்டா சிட்டி போன்ற பிளாட்ஃபார்மிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்:

    கியா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி-யாக செல்டோஸ் மாடல் உள்ளது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ADAS அம்சங்கள் இந்த காரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. நெக்சான் மட்டுமின்றி அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான நெக்சான் EV மாடலும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் அறிமுகம் செய்து டாடா நிறுவனம் அசத்தியது.

     


    ஹூண்டாய் வெர்னா & எக்ஸ்டர்:

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆறாவது தலைமுறை வெர்னா மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ஹூண்டாயின் பாராமெட்ரிக் டிசைன் கொண்ட செடான் கார் என்ற பெருமையுடன் புதிய தலைமுறை வெர்னா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபோன்ற டிசைன் இந்தியாவில் வேறு எந்த செடான் மாடலிலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    வெர்னாவை தொடர்ந்து ஹூண்டாய் அறிமுகம் செய்த மிகப்பெரிய மாடல் எக்ஸ்டர். இந்த கார் மூலம் ஹூண்டாய் நிறுவனம் மினி எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்கியுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


     

    மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்:

    நெக்சா பிரான்டில் அறிமுகமான முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. என்ற பெருமையை ஃபிரான்க்ஸ் பெற்றது. மாருதி சுசுகியின் மிகப் பெரிய வெளியீடாக ஃபிரான்க்ஸ் அமைந்தது. இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர் ஜெட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CNG ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 

    • ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர்.
    • எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனும் தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், எஸ்.எம்.வி.டி பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று ஜூன் 2-ம் தேதி மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


    இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனப்படும் தொழில்நுட்ப கோளாறு தான் விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பின், ரெயில்வே அதிகாரிகள் சிலரை கைதுசெய்தனர். இந்தக் கோர விபத்து இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

     


    • கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
    • தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்

    அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.

    சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.

    ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.

    • ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
    • நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

    நான்கு கட்ட பாத யாத்திரை முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்டம் மற்றும் கடைசி கட்ட யாத்திரையை டிசம்பர் 16-ந்தேதி தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 10-ந்தேதி யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    ×