search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2023 Recap"

    • ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது.

    ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த தொடரில் கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங் இந்த தொடரில் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியின் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 

    அந்த போட்டியில் இருந்து ரிங்கு சிங் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதேபோல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்தார்.

    இந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் பெங்களூர் அணிக்கு எதிராக காயமடைந்தார். பீல்டிங்கின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் ராகுல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த சீசனின் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சீசனில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்தாலும் சிக்சர் மூலம் மிரட்டலான சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார். ரோகித் 252 சிக்சருடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 141 போட்டியில் 357 சிக்சருடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

     

    ஐ.பி.எல். தொடரில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 233 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

     

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    மேலும் 236 ஆட்டங்களில் ஆடிய டோனி 5004 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை கடந்த 7-வது வீரர் டோனி ஆவார். ஏற்கனவே விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.


    இந்த சீசனில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் விராட் கோலி, நவீன் உல் ஹக், கம்பீர் ஆகியோர் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை யாரும் மருந்து விட முடியாது. இந்த மோதலினால் கோலி- கம்பீர் ஆகியோருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டது.


    ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி 25 முறை 200 ரன்னுக்கு எடுத்தது. அதிக முறை 200-க்கு மேல் எடுத்த அணி சென்னை தான். இந்த வகையில் 2-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் கிங்சும் (17 முறை) உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.


    இந்த தொடர் முழுவதிலும் சென்னை அணி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு சென்னை அணிக்கே அதிகமான ஆதரவு கிடைத்தது. ஏனென்றால் இந்த தொடருடன் டோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக வதந்தி பரவியது. இதனால் அவரை கடைசி போட்டியில் பார்த்து விட வேண்டுமென்றே அனைவரும் சென்றதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.


    இந்த சீசனில் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.


    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினர். 

    ×