என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-

    கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டரில் மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டருடன் வந்தார்.

    மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பெட்டியை எடுத்துச் சென்றது சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பெட்டியில் இருந்தது என்ன?

    அது தேர்தலில் பணத்தை வினியோகம் செய்ய பிரதமர் மோடி கொண்டு வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஐந்து வருடங்கள் கழித்தும் கூட தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. மோடி புனிதர் வேடமணிந்த உண்மையான ஊழல்வாதி.

    ஒடிசா மாநிலத்தின் சாம்பல்புர் மக்களவை தொகுதியின் பொது பார்வையாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, நரேந்திர மோடி காருடன் அணிவகுத்து சென்ற காரை சோதனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி தேர்தல் பார்வையாளரிடம் எதை மறைக்க வேண்டும்?.

    இவ்வாறு அந்த எக்ஸ் பக்க பதிவில் கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    • அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில், நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நெல்ல தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அதிமுக அறிவித்துள்ளது.

    அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளரான ஜான்சிராணி வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.

    திமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் வேட்பாளராக சிம்லா அறிவிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர்.

    ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்களுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிந்தது. இதையடுத்து திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலமாக அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்தநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு கிடங்கு திறக்கப்பட்டு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.

    கண்ட்ரோல் யூனிட், இ.வி.எம்., - வி.வி.பேட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனத்தில், 8 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.

    தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் தலா 360, விவிபேட் 390 அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படுகிறது. காங்கயம் தொகுதியில் 295 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 356, விவிபேட் 386 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.

    அவினாசி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 378, விவிபேட் 410 அனுப்பி வைக்கப்பட்டது. இவை அவினாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 458, விவிபேட் 496 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 292, விவிபேட் 317 அனுப்பி வைக்கப்பட்டது. இவை திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியில் இருப்பு வைக்கப்படுகிறது. பல்லடம் தொகுதியில் 412 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 498, விவிபேட் 539 அனுப்பி வைக்கப்பட்டது. அவை பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது.

    உடுமலை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 355, விவிபேட் 385 அனுப்பி வைக்கப்பட்டன. இவை உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருப்பு வைக்கப்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கட்டுப்பாட்டுக்கருவி, வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தலா 347, விவிபேட் 375 அனுப்பி வைக்கப்பட்டன. இவை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்படுகிறது. 8 தொகுதியில் கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் தலா 3 ஆயிரத்து 44-ம், விவிபேட் 3 ஆயிரத்து 298-ம் பயன்படுத்தப்படுகிறது.

    • மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
    • நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேலும் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வதை கண்டறியும் வகையில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

    அப்போது அந்த வழியாக ஒரு பிக்கப் வேன் வந்தது. அந்த வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து நகைகளை வேனுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அங்கு வருமான வரித்துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான பணியாளர்கள் விடிய விடிய விசாரணை நடத்தியதில் அந்த வேனில் 2½ கிலோ தங்க நகைகளும் 4 கிலோ வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    அந்த நகைகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து உரிய ஆவணமின்றி கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து வருமான வரித்துறையினர் உரிய ஆவணங்களை சமர்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது நகைகளுடன் அந்த வேனை பறிமுதல் செய்து போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதற்கிடையில் நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை ரூ.36 லட்சத்து 23 ஆயிரத்து 372 ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அவர் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் தொகுதியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    மாலை 6 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டையிலும், இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு தேனி தொகுதிக்கு சென்று உசிலம்பட்டியில் பேசுகிறார். இரவு 9.15 மணிக்கு ஆண்டிப்பட்டியில் பேச உள்ளார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேனி பங்களாமேடு பகுதியிலும், 11 மணிக்கு பெரியகுளம் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் ஓட்டு வேட்டையாடுகிறார். மாலை 5 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்கு செல்கிறார். அங்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும், மாலை 6.15 மணிக்கு நத்தம் நகரிலும் ஓட்டு வேட்டையாடுகிறார்.

    அதன்பிறகு மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 7 மணிக்கு மதுரை உமச்சிக்குளம் பகுதியிலும், 7.45 மணிக்கு மதுரை புதூர் பகுதியிலும் பேசுகிறார்.

    அதன் பிறகு சென்னை புறப்பட்டு வருகிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதிக்கு சென்று பேசுகிறார். அதன் பிறகு ஆரணி தொகுதிக்கு செல்கிறார்.

    மாலை 6 மணிக்கு செய்யாறு, 7 மணிக்கு வந்தவாசி, 8 மணிக்கு சேத்துப்பட்டு நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


    அதன் பிறகு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று இரவு 9 மணிக்கு கீழ்பொன்னாத்தூர் பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். மறுநாள் (26-ந்தேதி) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை, 10.45 மணிக்கு கலசப்பாக்கம், 11.45 மணிக்கு செங்கம், 12.30 மணிக்கு திருப்பத்தூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    அன்று மாலை 5 மணிக்கு ஜோலார்பேட்டை பகுதியில் ஓட்டு வேட்டையாடுகிறார். அதன் பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாணியம்பாடி, 6.30 மணிக்கு ஆம்பூர், 7.30 மணிக்கு பேரணாம்பட்டு, 8.15 மணிக்கு குடியாத்தம், 9 மணிக்கு பள்ளிகொண்டா, 9.30 மணிக்கு வேலூர் பகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    27-ந்தேதி (புதன்கிழமை) அரக்கோணம் தொகுதியில் ஓட்டு வேட்டையாட உள்ளார். அன்று காலை 10 மணிக்கு ஆற்காடு, 10.15 மணிக்கு ராணிப்பேட்டை, 11.30 மணிக்கு வாலாஜா, 12.30 மணிக்கு சோளிங்கர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணிக்கு வந்து ஆதரவு திரட்டுகிறார்.

    மாலை 6 மணிக்கு அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகே நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட உள்ளார்.

    28-ந்தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரம் தொடங்கும்.

    • பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • முதல்முறையாக இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், விஜயதரணி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் காலியான விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை பொருத்தமட்டில் கன்னியாகுமரி-கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல்முறையாக இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

    தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார்.

    பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வை போன்று பெண் வேட்பாளரையே களமிறக்கிவிட்டது.

    பாரதிய ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள நந்தினி பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். கட்சியில் மண்டல நிர்வாக குழு உறுப்பினராகவும், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்த நந்தினி தற்பொழுது மாவட்ட செயலாளராக உள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகள் பேசும் திறமை கொண்டவர் நந்தினி. இவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

    அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்று இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் அல்லது தற்போதைய மாவட்ட தலைவராக உள்ள பினு லால்சிங்கை களம் இறக்க கட்சி தயாராகி வருகிறது.

    ஆனால் இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் தேர்தல் பணியை தொடங்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் விளவங்கோடு தொகுதியில் மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் அந்த தொகுதி முடிவு அனைவராலும் எதிர்பார்க்க்க்கூடிய ஒன்றாக இருக்கிறது.

    இந்த சூழலில் வேட்பாளர் யார் ? என்று அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதாவினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இதனால் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சி வேட்பாளர்களுமே தொகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக முந்திரி தோட்ட தொழிலாளர் பிரச்சினை, ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவதாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். மேலும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் உறுதியளிக்கின்றனர். அவர்கள் நேரில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

    • திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
    • முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.

    திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.

    ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.

    எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.

    புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.

    கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

    • தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
    • பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024 பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!

    அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    இதற்கு முன் 1999 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என கூறியுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும், நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ், சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத் பெரியசாமி, மார்க்சிஸ்டு சார்பில் பீமாராவ், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் வக்கீல் சந்தோஷ் குமார், மாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக், லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கூறப்பட்டது.

    • சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
    • கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

    சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.


    கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.

    அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.


    இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    நிலக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வத்தலக்குண்டு அருகே பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரைக்கு வந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் நடராஜன் (வயது 34), மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலநாதன் (49) ஆகியோரிடம் விசாரித்த போது மதுரையில் உள்ள 3 நகை கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    பறக்கும்படை சோதனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    * தேர்தல் பணிகளை முறைப்படுத்தும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * திமுக-வின் கலாநிதி வீராசாமி போட்டியிடும் வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * திமுக-வின் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * திமுக-வின் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * பாஜக-வின் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு இசக்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தேனி தொகுதிக்கு ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி தொகுதிக்கு கடம்பூர் ராஜூ, மதுரை தொகுதிக்கு நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தஞ்சை தொகுதிக்கு காமராஜ், மயிலாடுதுறை தொகுதிக்கு ஓ.எஸ்.மணியன், திருச்சிக்கு சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×