என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியவர்.
    • தற்போது அவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.

    கடந்த 2020-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி (38) என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதிக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். 'பாப்பி' என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜான்சனுக்கு 9-வது குழந்தை என கூறப்படுகிறது.

    போரிஸ் ஜான்சனுக்கு கேரியுடன் பிறந்த குழந்தைகள் தவிர முதல் மனைவியுடன் ஒரு குழந்தை, 2-வது மனைவியுடன் 4 குழந்தைகள் என ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது கேரியுடனான 4-வது குழந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து 3 மனைவிகளுடன் 9 குழந்தைகளுக்கு போரிஸ் ஜான்சன் தந்தையாகி உள்ளார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் சதமடித்தனர். பென் டக்கெட் 140 ரன்னிலும், ஜாக் கிராலி 124 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஒல்லி போப் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 171 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 565 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    ஜிம்பாப்வே அணியின் முசாராபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 139 ரன்னில் அவுட்டானார். கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை விட 300 ரன்கள் பின்தங்கியதால் பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் ஆவார்.
    • ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.

    ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
    • ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.

    2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன.
    • பானு முஷ்டாக் கன்னட மொழியில் எழுதிய நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

    லண்டன்:

    ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஹார்ட் லாம்ப் எனும் நூலும் ஒன்றாகும்.

    இந்நிலையில், கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

    பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.

    புக்கர் பரிசு பெறும் புத்தக்கத்துக்கு 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

    • இங்கிலாந்து ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.

    தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் கிடங்காகப் பயன்படுகின்றது.

    இந்நிலையில், இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் அந்த இடம் முழுதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது இரங்கலைத் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    • நிரவ் மோடி 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிரவ் மோடி தாக்கல் செய்த 10வது மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
    • இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.

    லண்டன்:

    சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.

    இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.

    • டைட்டானிக் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பலாகும்.
    • உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது.

    லண்டன்:

    உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.

    அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், டைட்டானிக் கப்பலில் இருந்து கர்னல் ஆர்ச் சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

    அந்தக் கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என தீர்ப்பு வழங்க முடியும் என எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
    • லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அதிக சத்தத்துடன் இசையை இசைக்க வைத்தனர். தூதரக மாடியில் நின்று கொண்டு இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் ஆலோசகருமான கர்னல் தைமூர் ரஹத், போராட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
    • பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்

    இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.

    அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஹாங்காங் விமான நிலையத்தில் பிரிட்டன் பெண் எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்.
    • சீனாவின் நடவடிக்கைக்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் உள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சி எம்.பி. வேரா ஹோப்ஹவுஸ் (65). இவரது மகன் சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக வேரா தனது கணவருடன் சீனா சென்றிருந்தார்.

    ஆனால் சீனாவின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக ஹாங்காங் விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அதேசமயம் அவரது கணவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பின்னர், வேரா விமானம் மூலம் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

    சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், இஸ்ரேல் விமான நிலையத்திலும் ஆளுங்கட்சி பெண் எம்.பி.க்கள் 2 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×