என் மலர்
பிரிட்டன்
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் கீசி கார்டி சதமத்து அசத்தினார்.
கார்டிப்:
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீசி கார்டி சிறப்பாக அடி சதமடித்து 103 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 78 ரன்கள் எடுத்தார். பிராண்டன் கிங் 59 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் அதில் ரஷீத் 4 விக்கெட்டும், சாகிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்-வில் ஜாக்ஸ் ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
தனியாகப் போராடிய ஜோ ரூட் சதமடித்து, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
- இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் எடுத்தது.
- கருண் நாயர் இரட்டை சதமடித்து 204 ரன்னில் அவுட் ஆகினார்.
கான்டேபெரி:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து தொடருக்கு முன் இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இணைந்த கருண் நாயர்,சர்பராஸ் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி 204 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஜோஷ் ஹல், ஜமான் அக்தர் தலா 3 விக்கெட்டும், எடி ஜேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் ஹைன்ஸ் சதமடித்து 103 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேக்ஸ் ஹோல்டன் அரை சதம் கடந்து 64 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்துள்ளது. எமிலோ கே 46 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 400 ரன்கள் குவித்தது.
- பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பெர்மிங்காம்:
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்மிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்தது. பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
ஜேக்கப் பெத்தேல் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 60 ரன்னும், ஹாரி புரூக் 58 ரன்னும், ஜோ ரூட் 57 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 401 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கேப்டன் ஷாய் ஹோப் 25 ரன்னும், கீசி கார்டி 22 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தது.
ஜெய்டன் சீல்ஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது, ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டும், அதில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.
- ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்தது.
இதில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள செய்தியில், லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போலீசார் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியவர்.
- தற்போது அவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.
கடந்த 2020-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி (38) என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன்-கேரி தம்பதிக்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். 'பாப்பி' என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜான்சனுக்கு 9-வது குழந்தை என கூறப்படுகிறது.
போரிஸ் ஜான்சனுக்கு கேரியுடன் பிறந்த குழந்தைகள் தவிர முதல் மனைவியுடன் ஒரு குழந்தை, 2-வது மனைவியுடன் 4 குழந்தைகள் என ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது கேரியுடனான 4-வது குழந்தைக்கு தந்தையானதை தொடர்ந்து 3 மனைவிகளுடன் 9 குழந்தைகளுக்கு போரிஸ் ஜான்சன் தந்தையாகி உள்ளார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் சதமடித்தனர். பென் டக்கெட் 140 ரன்னிலும், ஜாக் கிராலி 124 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய ஒல்லி போப் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஒல்லி போப் 171 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 565 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
ஜிம்பாப்வே அணியின் முசாராபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 139 ரன்னில் அவுட்டானார். கேப்டன் கிரெய்க் எர்வின் 42 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை விட 300 ரன்கள் பின்தங்கியதால் பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், கட் அட்கின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் ஆவார்.
- ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
- ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன.
- பானு முஷ்டாக் கன்னட மொழியில் எழுதிய நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
லண்டன்:
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் 6 புத்தகங்கள் இடம்பிடித்தன. இதில் தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ஹார்ட் லாம்ப் எனும் நூலும் ஒன்றாகும்.
இந்நிலையில், கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
புக்கர் பரிசு பெறும் புத்தக்கத்துக்கு 50,000 யூரோ பரிசுத்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
- இங்கிலாந்து ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
லண்டன்:
இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.
தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் கிடங்காகப் பயன்படுகின்றது.
இந்நிலையில், இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் அந்த இடம் முழுதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது இரங்கலைத் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
- நிரவ் மோடி 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன்:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிரவ் மோடி தாக்கல் செய்த 10வது மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
- இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
லண்டன்:
சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.
இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.






