என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முன்னணி வீரர்கள் அசத்தல் சதம்: முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 498 ரன்கள் குவிப்பு
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 498 ரன்களைக் குவித்தது.
- ஒல்லி போப், பென் டக்கெட், ஜாக் கிராலி ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர். ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 140 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஒல்லி போப் ஜாக் கிராலி உடன் இணைந்தார்.
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 124 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஒல்லி போப் சதமடித்து அசத்தினார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 34 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களைக் குவித்தது. ஒல்லி போப் 169 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.






