என் மலர்
மெக்சிகோ
- மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா தோல்வி அடைந்தார்.
மெக்சிகோ:
மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 1-6 என படோசா இழந்தார். 2வது செட்டைல் 3-5 என இருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் டாரியா அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பூட்டிய வீட்டுக்குள் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் இறந்து கிடந்தார்.
- இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அதன்பின் 1970-களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இதையடுத்து, நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
- தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.
தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் மற்றும் டபாஸ்கோ இடையே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக டபாஸ்கோ அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தாக தெரிவித்தனர்.
தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக டபாஸ்கோ மேயர் ஓவிடியோ பெரால்டா கூறினார்.
- மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
- கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது. தேசிய காவல்படை மற்றும் ராணுவ லாரிகள் டெக்சாஸின் சியுடாட் ஜுவரஸ் மற்றும் எல் பாசோ இடையேயான பகுதியில் ரோந்து சென்றன.
சியுடாட் ஜுவாரெஸ் அருகே எல்லையில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய தேசிய காவல்படை துருப்புக்கள், தற்காலிக ஏணிகள் மற்றும் கயிறுகளை அகழிகளில் இருந்து அகற்றி லாரிகளில் ஏற்றினர். டிஜுவானாவுக்கு அருகிலுள்ள பிற எல்லைப் பகுதிகளிலும் ரோந்துகள் காணப்பட்டன.
அமெரிக்க அதிபர் மெக்சிகோ மீது கடுமையான வரி விதிப்பை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாமதப்படுத்த முடிவு செய்ததை அடுத்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஃபெண்டானில் கடத்தலை எதிர்த்துப் போராடவும் தேசிய காவல் படையை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இடம்பெயர்வு மற்றும் ஃபெண்டானில் ஓவர்டோஸ் குறிப்பிடத்தக்க சரிவை கண்டபோதிலும் அதிபர் டிரம்ப் எல்லை பகுதியில் அவசரநிலையை அறிவித்தார். இதற்கு பதிலடியாக, கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
- அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
- மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.
காம்போ சடங்கு
இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மார்செலாவுக்கு என்ன ஆனது?
சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.
மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- மெக்சிகோவில்மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,
வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை 19 வயதான ரியா சிங்கா வென்றார்.
- பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
மெக்சிகோவில் 73வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கிஜேர் கைப்பற்றினார்.
இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
2023 ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் விக்டோரியாவிற்கு பிரபஞ்ச அழகி பட்டம் சூட்டினார்.
2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் முதல் ரன்னர்-அப் ஆகவும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்ஷினா இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற 19 வயதான ரியா சிங்கா, இந்தியா சார்பில் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்ப சுற்றுகளில் ரியா சிங்கா அசத்தினாலும் முதல் 12 இடங்களை பிடிக்க முடியாததால் இறுதிசுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.
இப்போட்டியில் முதல் 12 இடங்களை பெற்ற இறுதிப் போட்டியாளர்களில் 7 பேர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
- நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
- சுற்றுலா சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
- இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.
மெக்சிகோ சிட்டி:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு சுற்றுலா பஸ் ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 24 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது.
- 115 துப்பாக்கிகள், பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மெக்சிகோ சிட்டி:
போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக தென் அமெரிக்காவின் மெக்சிகோ விளங்குகிறது. கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் இங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக நடைபெறும் இந்த போதைப்பொருள் கடத்தல் காரணமாக அந்த நாட்டின் அரசாங்கம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்களை அந்த நாட்டின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்த ஜோகின் குஸ்மான் என்கிற எல் சாப்போ என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்த எல் சாப்போவின் கைதுக்கு பின்னர் அவனுடைய தளபதியான 'மாயோ' ஜாம்பாடா மற்றும் எல் சாப்போவின் மகன்கள் தலைமையில் இயங்கி வரும் 'லாஸ் சபிடோஸ்' கும்பல், போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு மெக்சிகோவை ஆட்டி படைத்து வருகிறது.
இந்தநிலையில் மெக்சிகோவின் சினாலாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் இந்த இரு கும்பல்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதனை பயன்படுத்தி கும்பல்களின் கொட்டத்தை அடக்க போலீஸ் முடிவு செய்தது. இதனையடுத்து போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க திட்டம் வகுக்கப்பட்டது.
அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த சண்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்பட 30 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர். 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சண்டையில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 115 துப்பாக்கிகள், பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
- பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர்.
- சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம்... அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் வீடியோ அனைவரையும் ஒரு நொடி உறைய வைத்துள்ளது.
35 வினாடிகள் ஓடும் வீடியோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். பயத்தில் அவர்கள் குரல் எழுப்புகின்றனர்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






