என் மலர்tooltip icon

    உலகம்

    • 2008லிருந்து 2022 வரை தலைமை இயக்க அதிகாரியாக பணி புரிந்தார்
    • வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுவதாக ஷெரில் தெரிவித்தார்

    மெட்டா (முன்னர் ஃபேஸ்புக்) நிறுவன முன்னாள் தலைமை இயக்க அதிகாரி (Chief Operating Officer) ஷெரில் சாண்ட்பர்க்.

    தற்போது 54 வயதாகும் (Sheryl Sandberg) 2008லிருந்து 2022 வரை மெட்டா தலைமை இயக்க அதிகாரியாக பணிபுரிந்தார். அதற்கு பிறகு நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பேற்று நிறுவனத்தை வழிநடத்தினார்.

    வரும் மே மாதம், மெட்டா நிர்வாக இயக்குனர்கள் குழுவில் ஷெரிலின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஷெரில் மெட்டா நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

    தனது ஃபேஸ்புக் பதிவில் இது குறித்து ஷெரில், "வர்த்தக ரீதியாக மெட்டா சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படும். எனவே, இது பிறருக்கு வழி விட சரியான தருணம். மெட்டாவிற்கு ஆலோசனை கூற எப்போதும் தயாராக உள்ளேன். ஜுகர்பர்கிற்கும் பிற நிர்வாக இயக்குனர்களுக்கும் நன்றி" என பதிவிட்டார்.

    ஷெரில் முடிவிற்கு மெட்டா நிறுவனர், மார்க் ஜுகர்பர்க் (Mark Zuckerberg) "ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்நோக்குகிறோம்" என பதிலளித்தார்.

    சுமார் 12 வருட காலம் மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஷெரில், தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் 14 வருட காலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட்டா நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்த ஷெரில், ஃபேஸ்புக்கில் விளம்பர வருவாயை ஊக்குவிக்கும் தற்போதைய வடிவமைப்பை கொண்டு வந்தவர். ஃபேஸ்புக் தள உள்ளடக்கத்தில் பல சர்ச்சைக்குரிய சிக்கல்கள் எழுந்த போது அவற்றை சரி செய்து நிறுவன நற்பெயரை காப்பாற்ற பல முடிவுகளை எடுத்தவர்.

    ஷெரில் சாண்ட்பர்கின் நிகர சொத்து மதிப்பு, சுமார் $1.9 பில்லியன் என்கிறது பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

    • பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
    • பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் ஜெய்ஷ் உல் அடல் பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் ராணுவத்தின் புரட்சிப்படை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான வீடுகள் இடிந்தன. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.

    தங்கள் நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது. மேலும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

    இந்த தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொனசன் அமீர் அப்துல்லா ஹியன் கூறும்போது, "பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கினோம். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    இந்தநிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் ஈரானில் இருந்து செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டு பலூச் பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தானின் விமானப்படை ஈரான் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானுக்குள் உள்ள பலுச் பிரிவினைவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பிரிவினைவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலில் ஈரானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்லால் கூறும்போது, "இது ஈரானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

    தங்களது தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றார்.

    அதேவேளையில் பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.

    பாங்காக்:

    சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • மார்ச் மாதம் வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்.

    வேல்ஸ் இளவரசி இரண்டு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கெனிங்ஸ்டன் அரண்மனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார். தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

    • இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு.
    • 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் கனடா-விற்கு வருவாய் ஈட்டிய நிலையில் தற்போது குறையத் தொடங்கியது.

    இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது" என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்கள் 86 சதவீதம் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    இந்திய மாணவர்களின் வருகை காரணமாக கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் பொருளீட்டியதாக தெரிவித்த அமைச்சர், 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் வந்த நிலையில், அது தற்போது குறையத் தொடங்கியது எனக் கூறினார். இந்தியா - கனடா இடையேயான உறவில், ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் கனடா செல்வது குறைந்துள்ள அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா அரசு சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    • உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது
    • பிராந்திய அமைதி இஸ்ரேலின் அமைதியையும் உள்ளடக்கியது என்றார் ஃபர்ஹான்

    ஆண்டுதோறும், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் நடைபெறும்.

    இவ்வருட கூட்டம் ஜனவரி 15லிருந்து 19 வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறையை சேர்ந்த அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பங்கு பெறுகின்றனர்.

    இதில் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் (Prince Faisal bin Farhan) பங்கேற்றார்.

    அவரிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

    பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து தருவதில் இஸ்ரேலுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்று கொள்ள சவுதி அரேபியாவிற்கு எந்த தயக்கமும் இல்லை.

    பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு கிடைத்து அவர்கள் அமைதியாக வாழும் சூழல் ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

    அப்போது இஸ்ரேலை தனி நாடாக ஏற்க சவுதி அரேபியா சம்மதிக்கும்.

    தற்போது இஸ்ரேல், பிராந்திய அமைதியையும், பாதுகாப்பையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

    அப்பகுதியில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் வளமான எதிர்காலம் உருவாக அமைதிதான் ஒரே வழி. போர் நிறுத்தமே அமைதிக்கான முதல் படி.

    அதற்கு நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிக்கிறோம்.

    இவ்வாறு ஃபைசல் கூறினார்.

    பெரும்பாலும் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நிறைந்த சவுதி அரேபியா, அரபு நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது.

    கடந்த வருடம், பிராந்திய அமைதி ஏற்படும் வகையில் இஸ்ரேலுடன், சவுதி அரேபியா ஒரு ஒப்பந்தம் செய்ய இருந்தது.

    ஆனால், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அமைதிக்கான சூழல் மாறி விட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.
    • பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக கரன்சி கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது.

    கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது.

    அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து கரன்சி பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

    குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது.

    அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

    மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு₹ 83.10.

    ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்தது.
    • ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    நைஜீரியாவின் மிகப்பெரிய நகரங்களில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமானது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் இறந்தனர் மற்றும் 77 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் வெடிகுண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது.

    மேலும் விரிவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    கனிம வளம் மிக்க நைஜீரியாவில் சட்டவிரோத சுரங்கம் பொதுவானது. அதனால், அதிகாரிகள் மத்தியில் சம்மந்தபட்டவர்களை கைது செய்வது கடினம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஓயோ ஆளுநர் மகிந்தே, "வெடிபொருட்களை யார் பதுக்கி வைத்திருந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அதனால், கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.

    • 2015ல் "ஒரே குழந்தை" கட்டுப்பாட்டை சீனா விலக்கி கொண்டது
    • அதிகரிக்கும் விலைவாசியால் இளம் வயதினர் குழந்தை பெற்று கொள்ள தயங்குகின்றனர்

    உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இருந்து வந்தது சீனா.

    இதனால் சீனாவில் பல சிக்கல்கள் நிலவியதால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாடு பல சட்டங்களை கொண்டு வந்தது.

    2015ல், "ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை" எனும் சர்ச்சைக்குரிய தனது கொள்கையை விலக்கி, மக்களை அதிக குழந்தைகளை பெற்று கொள்ளும்படி வலியுறுத்த தொடங்கியது.

    வருமான வரி விலக்கு, அதிக விடுமுறை, வீடுகள் கட்டி கொள்ள பல சலுகைகள் என பல ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்தும் குழந்தை பெற்று கொள்வதில் திருமணமானவர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

    கடந்த 2022ல் முதல் முறையாக அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்தது. 1961ல் அங்கு ஏற்பட்ட "சீன கடும் பஞ்சம்" காலகட்டத்திற்கு பிறகு 2022ல்தான் முதல் முறையாக மக்கள் தொகையில் அந்நாடு சரிவை கண்டது.

    இந்நிலையில், 2023 வருட கணக்கெடுப்பில், மக்கள் தொகை 1.4 பில்லியன் என மேலும் குறைந்துள்ளது.

    இது மட்டுமின்றி சீனாவில் குழந்தை பிறப்பு விகிதமும் 1000 பேருக்கு 6.39 எனும் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022ல் 6.77 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதை தவிர, 2020ல் அந்நாட்டில் தோன்றி உலகையே உலுக்கிய கொரோனா வைரஸினால் பல லட்சம் பேர் பலியானதும் மக்கள் தொகை குறைய காரணம் என கூறப்படுகிறது.

    அந்நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் காரணமாக வாலிபர்கள் திருமணத்திற்கு தயக்கம் காட்டுவதாக கடந்த வருடமே செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய நாடான சீனாவில் முதுமை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்கள் தொகை வீழ்ச்சியடைவதும் தொடர்ந்தால் அது அந்நாட்டின் வளர்ச்சியை மட்டுமின்றி உலக பொருளாதாரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது.
    • குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டிலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    துருப்புக்களின் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காரணங்களை கொண்டு 2024-ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது. 2-வது இடத்தில் ரஷியாவும் 3-வது இடத்தில் சீனாவும் உள்ளது.

    இந்த தர வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

    அதேபோல் உலகில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது. மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

    குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

    • காசா பகுதி தாக்குதலில் சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
    • போர் தொடங்கி 100 நாட்கள் கடந்தும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது.

    பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.

    தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறியிருப்பதாவது:

    காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கத்தார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது.
    • விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர்.

    டோக்கியோ:

    ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.

    விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தென்கொரிய விமானத்தின் முன்பக்க இறக்கையில் சேதம் அடைந்தது. இதனால் கொரிய விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு வேறுவிமானம் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டனர். இதனால் அந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    அங்கு நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜப்பானின் சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

    ×