என் மலர்
உலகம்
- அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் கடற்படை ஜேஜு தீவுப்பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.
- இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.
சியோல்:
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தைக் காட்டிவருகிறது. இப்படி இருதரப்பினரும் தங்கள் வலிமையைக் காட்டி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.
சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும்.
இந்நிலையில், இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.
இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
- 3 வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் கணக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்
- முதலில் திரகோட்டிற்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ளது, சியாங் ராய் (Chiang Rai) பிராந்தியம். அங்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவருக்கும் ஆட்சியமைப்பில் பங்கு உண்டு.
தற்போது மஹா வஜிரலாங்கோர்ன் (Maha Vajiralongkorn) அரசராக உள்ளார்.
இப்பிராந்தியத்தில் ஆடைகள் விற்பனை தொழில் புரிந்து வந்தவர், மோங்கோல் திரகோட் (Mongkol Thirakot).
திரகோட், 3 வருடங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் கணக்கில், அந்நாட்டின் அரச பரம்பரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
அரச குடும்பத்தை குறித்த அவதூறு பரப்புதல் "லெஸ் மெஜஸ்டெ" (lese majeste) எனும் குற்றமாக அந்நாட்டில் கருதப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
திரகோட் மீது இக்குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அங்கு அவருக்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார், திரகோட்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், திரகோட்டிற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 28 வருட தண்டனையுடன், மேலும் 22 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டு, அவரது தண்டனை காலம் 50 வருடமாக அதிகரிக்கப்பட்டது.
திரகோட்டின் விமர்சனம் குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவில்லை. ஆனால், அவர் பதிவிட்டிருந்த ஓவ்வொரு விமர்சனத்திற்கும் தண்டனை அதிகரிக்கப்பட்டு, தற்போது 50 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கருதப்படும் "லெஸ் மெஜஸ்டெ" சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், அதை மாற்றவோ, நீக்கவோ முயன்றால் நாட்டின் அரசியலமைப்பு சிதைந்து விடும் என அந்நாட்டின் பழமைவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.
- இப்போரினால் காசா பகுதியில் சுமார் 25,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
- அமெரிக்காவிடம் தனது நிலைப்பாட்டை கூறி விட்டதாக நேதன்யாகு தெரிவித்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் 100 நாட்களை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவ படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.
போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.
இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.
சில தினங்களுக்கு முன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்து சிக்கலை தீர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஹமாஸ் அழிய வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணய கைதிகள் மீண்டும் ஓப்படைக்க பட வேண்டும்.
எங்களுக்கு முழு வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும். போர் இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம்.
ஜோர்டான் நதிக்கு (River Jordan) மேற்கே உள்ள நில பகுதி முழுவதிலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பாலஸ்தீனத்தையும் சேர்த்தே குறிக்கும்.
இஸ்ரேலின் எதிர்காலம் என்பது தனி பாலஸ்தீனத்திற்கு எதிரானதுதான்.
இந்த உண்மையை அமெரிக்க நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் என கூறி விட்டேன்.
இவ்வாறு நேதன்யாகு கூறினார்.
பணய கைதிகளை மீட்டு தனது நாட்டிற்கு கொண்டு வருவதற்குத்தான் நேதன்யாகு முன்னுரிமை தர வேண்டுமே தவிர, ஹமாஸை அழிப்பதில் காலம் கடத்த கூடாது என இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
- ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.
தெஹ்ரான்:
ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஈரானின் 7 இடங்களில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 9 பேர் பலியாகினர்.
தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் ராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே, நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம் என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் என்று ஈரான் அறிவித்துள்ளது. தாக்குதல் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
- எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்.
- மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.
உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம்.
ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த வீடியோக்களையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் வீடியோக்களை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் எக்ஸ் தளத்தின் அதிபரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை என கேள்வி கேட்டிறிந்தார்.
அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், "என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என தனது தயக்கத்தை கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுடன் அவரது பதிவில், எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.

அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் தனது பதிவை மறு பகிர்வு செய்து, மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது என கூறியிருந்தார்.
அவரது மிஸ்டர் பீஸ்ட்டின் வீடியோ மிகவும் வேடிக்கையாகவும், சுவராஸ்யமாகவும் இருந்ததாக பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவரது முதல் வீடியோவை 2.7 கோடி
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.
- தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே ஹவுதி இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது.
இந்தநிலையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தாக்குதலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2023 ஜனவரி மாதம் கூகுள் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது
- 2024 ஜனவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது
கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், கூகுள்.
2015 அக்டோபர் மாதம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை (51) நியமிக்கப்பட்டார்.
2023 ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.
"இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்று சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.
2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.
சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
நமது லட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்.
சில பணிகள் தேவைப்படாது; தேவைப்படாதவை நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.
இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை (layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டன.
சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.
இவ்வாறு சுந்தர் தெரிவித்துள்ளார்.
தனது சுற்றறிக்கையில் எங்குமே "லே ஆஃப்" அல்லது "ஜாப் கட்ஸ்" எனும் பணிநீக்கத்தை குறிக்கும் வார்த்தைகளை சுந்தர் பிச்சை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், புத்தாண்டு முதல் 2 வாரங்களிலேயே 45க்கும் மேற்பட்ட ஐடி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 7500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கிய நிலையில், இது தொடர்ந்தால் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என மென்பொருள் துறை ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.
- மேலாளர் நாற்காலியை எல்லியின் கைகளில் இருந்து பறித்தார்.
- மோதல் தொடர்பாக முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்ட்ஸ்பீல்ட்- ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தேநீர் கடை உள்ளது. இங்கு பணியாற்றும் ஷகோரியா எல்லி என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சக ஊழியருடன் சண்டையிட்ட புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எல்லி தேநீர் கடை மேலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எனது பொருட்களை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு கடையில் இருந்த 2 மேலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதில் எல்லி, மேலாளர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆவேசம் அடைந்த எல்லி அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து மேலாளர்களில் ஒருவரை தாக்க முயன்றார். அதற்குள் அந்த மேலாளர் நாற்காலியை எல்லியின் கைகளில் இருந்து பறித்தார்.
உடனே எல்லி மீண்டும் கடைக்குள் செல்ல முயன்றார். அப்போது சிவப்பு டி-சர்ட் அணிந்த மற்றொரு மேலாளர் அவரை தடுத்த நிறுத்தினார். இதனால் ஆவேசம் அடைந்த எல்லி வாடிக்கையாளர்கள் கண் முன்பு அவரை சரமாரியாக தாக்கி விட்டு தனது கோட் மற்றும் பேக்குடன் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். மோதல் தொடர்பாக முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தொழில்முறை பாடிபில்டரான அர்னால்ட் திரைத்துறையில் நுழைந்தார்
- பாதி தொகையை கரன்சியில் செலுத்த, அர்னால்ட் வங்கிக்கு சென்று வந்தார்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).
ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன.
தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர்.
ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள ஒரு சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை சுற்றுச்சூழல் மற்றும் பருவகால சிக்கல்களை எதிர்கொள்ள நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.
நேற்று, பயண திட்டப்படி லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து ஜெர்மனியின் மியூனிச் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினார்.
தென் கிழக்கு ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரம் மியூனிச் (Munich).
அர்னால்டின் உடைமைகளை பரிசோதித்த சுங்க இலாகா அதிகாரிகள், உடைமைகள் குறித்த பட்டியலில் இல்லாத கைக்கடிகாரம் ஒன்று அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம் சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.
"ஐரோப்பாவிற்கு உள்ளே கொண்டு வரப்படும் எந்த வெளிநாட்டு பொருள் குறித்தும் பயணிகள் முதலிலேயே கூற வேண்டும் என்பது விதிமுறை. யாராக இருந்தாலும் இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை" என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர். கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முன்வந்த அர்னால்டிடம் பாதி தொகையை கட்டாயமாக கரன்சியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதால் அர்னால்ட், வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்தார்.
சுங்க விதிப்படி, வங்கி அதிகாரிகளும் அவருடன் சென்று வந்தனர்.
அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மியூனிச் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் அவர் பயணம் தடைபட்டது.
- அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
- முன்னாள் அதிபரான அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:
டொனால்டு டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.
டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.
- புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்
- மருமகள் கேத்ரீனுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது
பிரிட்டிஷ் அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (King Charles III).
2022 செப்டம்பர் மாதம் சார்லஸின் தாயார், அரசி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) காலமானார்.
அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 73.
சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அடுத்த வாரம் இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டது. தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதை தொடர்ந்து, அரசர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
50 வயதை கடந்த பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என்றது பிரிட்டன் சுகாதார துறை,

முன்னதாக, வேல்ஸ் இளவரசி (Princess of Wales) என அழைக்கப்படும் அரசர் சார்லஸின் மருமகள், 42 வயதாகும் கேத்ரீன் (Catherine) இரு வார சிகிச்சைக்காக லண்டன் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அரண்மனை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வயிற்று பகுதி நோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது என அறிவித்திருந்த அரண்மனை செய்தி குறிப்பு, நோய் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
- ஈஸ்வரன் அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி-யை சேர்ந்தவர்
- உலகிலேயே சிங்கப்பூரில்தான் அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது
சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60).
கடந்த 2023 ஜூலை மாதம், அந்நாட்டின் ஆளும் கட்சியான பிஏபி (People's Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுக்கள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எஃப் 1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை ஆங் பெங் செங் (Ong Beng Seng) எனும் கோடீசுவரர் நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
தான் செய்த உதவிக்கு பதிலாக ஈஸ்வரன், பல விமான பயணங்கள், சுற்றுலா, உலகின் பெரும் நட்சத்திர ஓட்டல்களில் பல முறை இலவசமாக தங்கும் வசதி, இலவச ஃபார்முலா 1 கார் பந்தய டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை 1,60,000 சிங்கப்பூர் டாலர் மதிப்பிற்கு அந்த கோடீசுவரரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
27 குற்றச்சாட்டுகளிலும் "ஆங்" ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் தருவதில் உலகிலேயே சிங்கப்பூர் முதல் இடம் வகிக்கிறது.
அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும் அதிக ஊதியம் பெற்றால், ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக பணி புரிவார்கள் என அந்நாட்டில் நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை உள்ளது.
அந்நாட்டில் அமைச்சர்களின் தொடக்க மாத ஊதியமே 50,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் இருக்கும்.
1986ல் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவாகும் நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 37 ஆண்டுகள் கடந்து தற்போது ஈஸ்வரன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.






