என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க மாட்டோம் என்றார் கிம்
    • பன்மடங்கு வலிமையுடன் தாக்குவோம் என்கிறது தென் கொரியா

    வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un).

    "சுப்ரீம் பீபிள்'ஸ் அசெம்பிளி" எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது கிம் கூறியதாவது:

    தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க கூடாது.

    தென் கொரியாவுடன் இணைப்புக்கு இனி சாத்தியமில்லை.

    வட கொரியாவிற்கு பிரதான எதிரி தென் கொரியாதான் என வலியுறுத்தும் வகையில் வட கொரிய மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

    இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியான முறையில் வரையறுக்கப்பட வேண்டும்.

    நாம் போரை விரும்பவில்லை; ஆனால், தேவைப்பட்டால் ஈடுபட தயங்கவே கூடாது.

    தென் கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க வட கொரியா தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நமது உடன்பிறப்புகள் அல்ல.

    இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முனைந்து வந்த 3 அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கிம் தடை விதித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, "வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால், பல மடங்கு வலிமையுடன் எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்" என தென் கொரியா தெரிவித்தது.

    தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுப்பெற்று வரும் உறவை கண்டு கிம் அச்சப்படுவதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் சிறப்புமிக்க ஈகோட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்
    • ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களின் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்

    பிரபல இங்கிலாந்து இசை கலைஞர் எல்டன் ஜான் தனது  "எல்டன் ஜான் லைவ்,  ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் வீடியோக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.

    இந்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற கலைஞர் இருக்கும் வரிசையில் இணைகிறார் எல்டன் ஜான்.

    1995 மற்றும் 2020 ஆண்டுகளில் "ராக்கெட்மேன்" மற்றும் "தி லயன் கிங்" போன்ற படங்களின் இசைக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் அவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். 2000 ஆம் ஆண்டில், ஜான் "ஐடா" நாடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் பாடலுக்கான டோனி விருதைப் பெற்றார். மேலும் ஆறு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராக் ஸ்டார் 2022 "டோட்ஜர் ஸ்டேடியம்" ஸ்பெஷலுக்கான சிறந்த பிரிவில் அவரது ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் என்ற லைவ் வீடியோ விருதை பெற்றுள்ளது. எம்மிஸ் விழாவில் ஜான் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் " திறமையான குழுவில் நானும் சேர்த்து இருப்பது நம்பமுடியவில்லை. இந்த இடத்தை சேர்த்தது எனது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உலகளவில் எனது ரசிகர்களின் உறுதியற்ற ஆதரவால் சாத்தியம் ஆகியிருக்கிறது. எனது வாழ்க்கை முழுவதும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • உடல் எடை குறைப்பு இன்ஃப்ளுயன்சராக பெரும் புகழ் அடைந்தார், மிலா
    • மிலா, எடை குறைப்புக்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையை படங்களாக பதிவிட்டார்

    சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".

    முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார்.

    அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார்.

    மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.

    தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.

    மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

    தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    • 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
    • தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.

    ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).

    பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.

    இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.

    ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.

    இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

    விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • அன்டார்க்டிகா பனிப்பாறைகளிலேயே மிக பெரியது ஏ23ஏ
    • ஏ23ஏ உருகும் போது அழகான வளைவுகள், குகைகள் தோன்றி உள்ளன

    தென் துருவத்தில் உள்ள, முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த கண்டம், அன்டார்க்டிகா (Antarctica).

    இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று வருவது வழக்கம்.

    இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a).

    1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.


    சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

    அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கி உள்ளது.


    பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

    தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

    எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது. நேற்று நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

    அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.
    • அயோவா மாகாணத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் தொடங்கியது. இத்தேர்தல் பாரம்பரியமாக அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

    அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அயோவா மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளார்.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் சென்றுள்ளார்.
    • ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெஹ்ரான்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் அதிபர் சையத் எப்ராகிம் ரைசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.
    • செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

    சனா:

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

    அதேவேளை, காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100 நாட்களை எட்டிய போர், நிற்பதற்கான அறிகுறி இல்லை
    • பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றார் பர்கட்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    போர், 100-வது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது.

    இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

    அப்போது பர்கட் கூறியதாவது:

    இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது.

    எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது.

    எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது.

    எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு பர்கட் கூறினார்.

    "வெற்றி பெறும் வரை போர் தொடரும்" என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்ஸ்ஃபேம் "இன்ஈக்வாலிட்டி இங்க்." எனும் பெயரில் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும்
    • இது தொடர்ந்தால் 229 வருடங்களுக்கு வறுமை ஒழியாது என எச்சரிக்கிறது ஆக்ஸ்ஃபேம்

    ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.

    பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து "இன்ஈக்வாலிட்டி இங்க்." (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.

    இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, ஆக்ஸ்ஃபேம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாண்டு அறிக்கையில் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்ததாவது:

    2020க்கு பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள், தங்கள் சொத்து மதிப்பை 2 மடங்கிற்கும் மேல் பெருக்கி உள்ளனர்.

    அந்த 5 பேரும் $3.3 ட்ரில்லியன் மதிப்பிற்கு மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.

    பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), வாரன் பஃபே (Warren Buffet), லேரி எலிசன் (Larry Ellison) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய அந்த 5 பேரின் நிகர மதிப்பு தற்போது $869 பில்லியன் என அதிகரித்துள்ளது.

    கடந்த 4 வருடங்களாக இவர்களின் சொத்து மதிப்பு, மணிக்கு சுமார் $14 மில்லியன் என அதிகரித்து வந்திருக்கிறது.

    இதே காலகட்டத்தில் 5 பில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 229 வருடங்களுக்கு உலகில் வறுமையை ஒழிக்க முடியாது.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    "பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, வரிகளை கட்டாமல் தப்பிப்பது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பருவகால மாற்றங்களை தொடர செய்வது ஆகியவற்றால் அசுரத்தனமான பணக்காரர்களை உருவாக்கத்தான் கார்ப்பரேட் அமைப்புகள் இயங்குகின்றன" என ஆக்ஸ்ஃபேம் செயல் இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) தெரிவித்தார்.

    1792லிருந்து 1822 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர், பெர்சி பைஷ் ஷெல்லி (Percy B. Shelley) "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்" என கூறியதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் விவாதிக்கின்றனர்.

    • தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
    • கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது

    2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.

    நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:

    கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.

    இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.

    2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

    அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.

    அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.

    இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

    தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×