என் மலர்
உலகம்
- மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என மாலத்தீவு அதிபர் திட்டவட்டம்.
- சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, இந்திய ராணுவம் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவியேற்றார்.
சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார். மேலும், மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீன பயணம் மேற்கொண்ட முகமது முய்சு, சீன அதிபர் சீ சின்பிங்-யை சந்தித்து பேசினார். சீன அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியா மாலத்தீவு இடையிலான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
சுமார் 70-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும், கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.
சீன ஆதரவாளர் முகமது முய்சு, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
- சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
- எரிமலை வெடிப்பினால் அருகில் உள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை இன்று மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மராபியின் சிகரத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றங்கரைக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எரிமலை ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு தங்குமிடம் அந்நாட்டு அரசாங்கத்தால் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.
- "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" முழக்கத்தை டிரம்ப் முன்னெடுத்துள்ளார்
- "விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு எதிரணிக்கு அளிக்கும் வாக்கு" என்றார் டிரம்ப்
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக போட்டியிடுகிறார்.
2016 தேர்தலில் "மாகா" எனப்படும் (Make America Great Again) "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்று" எனும் முழக்கத்தை முன்னெடுத்து பெரும் வெற்றி கண்ட டிரம்ப், 2026 தேர்தலிலும் அதையே தன் பிரசாரங்களில் முன் வைக்கிறார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அவர் அதிபராவது கேள்விக்குறியாக உள்ளது.
குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு வேட்பாளரான தொழிலதிபர் விவேக் ராமசாமி, தனக்கு தீவிரமாக ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகிறார்.
தனது பிரசாரங்களில் விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பை புகழ்வதுடன் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை விமர்சித்து "டிரம்ப் குற்றமற்றவர்" என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், இன்று டொனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" (Truth Social) கணக்கில் விவேக் ராமசாமியை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதில், "விவேக் என் ஆதரவாளரை போல் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால், தற்போது பிரசார யுக்திகளில் ஆதரவை தந்திரமாக மறைத்து விடுகிறார். நீங்கள் விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு, எதிரணிக்கு அளிக்கும் வாக்காகும். அவர் பேச்சில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். "மாகா" கனவை நனவாக்க விவேக் ஏற்றவர் அல்ல" என பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் விவேக் ராமசாமி எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நான் டிரம்பின் பதிவை கண்டேன். அவரது தேர்தல் பிரசார ஆலோசகர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அவருக்கு அளித்துள்ளனர். 21-வது நூற்றாண்டின் சிறந்த அதிபர் டிரம்ப்தான். என்னை அவர் விமர்சித்ததற்காக நான் அவரை தவறாக விமர்சிக்க போவதில்லை. ஆனால், தற்போது நாட்டில் உள்ள சூழல், அவரை அதிபராக அனுமதிக்காது என என்னை போல் பலர் நம் நாட்டில் நம்புகின்றனர். நாட்டிற்காகவும், டிரம்பிற்காகவும் நான் கவலைப்படுகிறேன். நான் அவர் ஆதரவாளன்.
இவ்வாறு விவேக் பதிவிட்டுள்ளார்.
- விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.
- விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.
இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு உருவாகி, போயிங் 737-800ன் வால் பகுதியை கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறப்பட்டபோது, "பயணிகள் ஏதோ எரியும் வாசனையை உணர்ந்ததால், பணியாளர்கள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்குமாறு கட்டாயப்படுத்திவுள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீப்பிடிப்பதையும், வெடிப்பதையும் படம் பிடித்துள்ளார் மற்றும் தரையில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு காட்சியில், புகைபிடித்த விமானம் விமான நிலையத்தை நோக்கி வேகமாக இறங்கியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பீட்சாவில் 940 வகையான பிரஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் இடம்பெற்றுள்ளன.
- பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு ‘பீட்சா’வை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
புதுப்புது உணவு வகைகள் சமைப்பதிலும் சமையல் நிபுணர்கள் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு 'பீட்சா'வை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்த பீட்சாவில் 940 வகையான பிரஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் இடம்பெற்றுள்ளன. இந்த 'பீட்சா' குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தைவானின் சுதந்திர உரிமையையும், தன்னாட்சியையும் சீனா ஏற்க மறுக்கிறது
- தைவான் மக்கள் ஜனநாயகத்தை நம்புவதை உறுதி படுத்தினர் என அமெரிக்கா பாராட்டியது
கிழக்கு ஆசியாவில், வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).
தன்னை முழு சுதந்திர நாடாக தைவான் பிரகடனப்படுத்தி கொண்டாலும், சீனா அதனை ஏற்க மறுத்து, தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாகவே கருதி அந்நாட்டை ஆக்கிரமிக்க வான்வழியாகவும், கடல் வழியாகவும் பல ராணுவ அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தைவானின் தன்னாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டை சீனா விரும்பவில்லை.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே சச்சரவு நிலவி வருகிறது.
இது குறித்து அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க-சீன ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், 2024 ஜனவரி 13 அன்று அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகளில், ஜனநாயக வளர்ச்சி கட்சியை (PDP) சேர்ந்த லாய் சிங்-டெ (Lai Ching-te), குவோமின்டாங் (Kuomintang) கட்சியை சேர்ந்த ஹவ் யூ-ஹி (Hou Yu-ih) பெற்ற வாக்குகளை விட 9,00,000 வாக்குகள் அதிகம் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லாய் வெற்றி பெற்றதற்கு தைவான் மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதில், "தங்கள் நாட்டின் வலிமையான ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் வழிமுறைகளின் மீதும் தைவான் நாட்டு மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது" என தெரிவித்தது.
ஆனால், இதனை விரும்பாத சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சீன செய்தி தொடர்பாளர், "தைவானின் சுதந்திரம் எனும் பெயரில் அங்கு போராடும் பிரிவினை அமைப்புகளுக்கு அமெரிக்காவின் பாராட்டு, தவறான செய்தியை அளிக்கும். சீனா இதனை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்க்கவும் செய்கிறது. அமெரிக்க தரப்பிற்கு எங்கள் எதிர்ப்பு குறித்து தெரிவித்து விட்டோம். வாஷிங்டனின் இந்த அறிக்கை, ஒரே சீனா எனும் எங்களின் கோட்பாட்டிற்கு எதிரானது. அதிகாரபூர்வமாக தைவானுடன் அமெரிக்கா உறவு கொண்டாடுவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்துகிறது" என கூறினார்.
- தாயும் மகளும் பயணித்த எகானமி வகுப்பில் வேறு பயணிகள் யாரும் இல்லை.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள செஷல்ஸ் தீவில் இருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்காக ஹிம்மி ஷேத்தல் என்ற பெண்ணும் அவரது மகளும் விமானத்தில் ஏறி உள்ளனர்.
அந்த விமானத்தில் அவர்களை தவிர முதல் வகுப்பில் 4 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். தாயும் மகளும் பயணித்த எகானமி வகுப்பில் வேறு பயணிகள் யாரும் இல்லை. இதனால் தாயும் மகளும் மட்டுமே விமான ஊழியர்களுடன் ஜாலியாக பாட்டுபாடி, நடனமாடி உள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்து தங்களது வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.
மேலும் பணிப்பெண்கள் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பல இடங்களுக்கும் தங்களை அழைத்து சென்றதாக ஹிம்மி ஷேத்தல் கூறி உள்ளார். இந்த பயணம் தங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- லண்டன் நகர மேயர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்
- மூவரை தவிர 8 பேர் மேயர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.
மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.
இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.
தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
"தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.
ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.
2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
- வீட்டு நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச மாணவர்களுக்கு வரம்புகளை அமைக்க கனடா திட்டமிட்டுள்ளது.
- சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம் வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது.
ஒட்டாவா:
கனடாவின் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார். ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு 4,85,000 புதிதாக குடியேறியவர்களும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 5,00,000 பேர் புதிதாக வருபவர்கள் உள்ளடங்கும். அந்த நாட்டின் இலக்குகளுக்காக மத்திய அரசு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு முன்பு அரசாங்க ஊழியர்கள் இந்தக் கொள்கைகளால் வீடு வாங்கும் விலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர். மேலும், சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற தற்காலிக குடியிருப்பாளர்களால் வீட்டுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் பாதியில் மட்டுமே 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர். எனவே சர்வதேச மாணவர் வரம்பு பற்றிய அரசாங்கத்தின் திட்டம் வீட்டுப் பிரச்சனையை எளிதாக்க முயற்சிக்கிறது.
- போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
- போர் தாக்குதலில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகிவிட்டது.
காசா:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தாக்குதல் நடத்தினர். இதை யடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணை, குண்டுகள் தொடர்ந்து வீசப்படு கின்றன. மேலும் தரை வழிதாக்குதல் நடந்து வருகிறது. இந்த போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.
போரை உடனே நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் அதை ஏற்க மறுத்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 100-வது நாளை தாண்டி உள்ளது. இந்த போர் தாக்குதலில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகிவிட்டது. அந்த பகுதி, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய, தெற்கு காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால் காசாவில் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதியடைந்து உள்ளனர்.
காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, "எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இஸ்ரேல் கருதாது. தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக ராணுவ உபகரணங்களும் பிற கொடிய ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகிறது.எனவே அதை நிச்சயமாக நாங்கள் மூட வேண்டும்" என்றார்.
எகிப்துடனான எல்லை பகுதியான ரபா நகரத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி, இஸ்ரேலால் கட்டுப் படுத்தப்படாத பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராக்கெட்டில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, செயற்கைக்கோளில் சிறு வெடிப்பு ஏற்பட்டது.
- நிலவை நோக்கிச் செல்லும் போதே, அது வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்து ஆய்வு செய்யக் கடந்த 8-ந் தேதி வல்கன் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்பியது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, செயற்கைக்கோளில் சிறு வெடிப்பு ஏற்பட்டது.
அதில் கணிசமான பாகங்களை இழந்தது. இதனால் பெரெக்ரைன் லேண்டர் நிலவில் முறையாகத் தரையிறங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும் நிலவை நோக்கிச் செல்லும் போதே, அது வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, விண்கலம் தற்போது பூமியை நோக்கி வருகிறது. ஆனால், விண்கலத்தால் பூமியில் தரையிறங்க முடியாது. அதற்கு முன்பாக அது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். தற்போது எங்களுக்கு இருக்கும் மற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
- பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள் விமர்சித்திருந்தனர்
- நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றார் முய்சு
சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதுமே மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.

ஆனால், பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்தனர்.
இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:
இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலத்தீவிற்கும் பங்கு உண்டு.
நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.
நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.
சீனா மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது.
இவ்வாறு முய்சு தெரிவித்தார்.






