என் மலர்
உலகம்
- பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள் விமர்சித்திருந்தனர்
- நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றார் முய்சு
சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதுமே மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.

ஆனால், பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்தனர்.
இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:
இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலத்தீவிற்கும் பங்கு உண்டு.
நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.
நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.
சீனா மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது.
இவ்வாறு முய்சு தெரிவித்தார்.
- இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.
- எங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. தற்போது போர் 100-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெலிவிஷனில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
எங்களை யாரும் தடுக்கமாட்டார்கள். வெற்றி பெறும் வரை போர் தொடரும். காசாவில் நடத்திய ராணுவ தாக்குதலில், பெரும்பாலான ஹமாஸ் படையினரை அகற்றிவிட்டோம். ஒரு சர்வதேச சட்டம் உள்ளது. அது ஒரு எளிய விஷயத்தைச் சொல்கிறது.
வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாது. எகிப்து- காசா எல்லையின் கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இது காசாவிற்கு ஒரு முக்கிய விநியோக பாதையாக உள்ளது. இந்தப் பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்தமாட்டோம் என தெரிவித்தார்.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நியூ ஜெர்சி இந்தியர்கள் கார் பேரணி ஒன்றை நடத்தினர்.
- இந்தப் பேரணி தொடங்குவதற்கு முன்பு, கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன.
வாஷிங்டன்:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதன்பின், நாளை மறுநாள் சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரை நடைபெறும்.
மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் ராமர் கோவில் கொண்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் நிறுவப்படுகின்றன. இந்த கதவு 12 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது. கோவிலில் மொத்தம் 46 கதவுகள் நிறுவப்படும். அவற்றில் 42 கதவுகளில் 100 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசப்படும்.
இந்த விழாவில் பங்கேற்க வரும்படி புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் எடிசன் பகுதியில் உள்ள இந்தியர்கள் கார் பேரணி ஒன்றை நடத்தினர். இதற்காக 350-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக அணிவகுத்தன.
அந்தக் கார்களில் இந்து சமயம் சார்ந்த கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பேரணி தொடங்கும் முன், கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
- 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.
நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
- டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
- அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- தைவானில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
- இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தைபே:
கிழக்கு ஆசியாவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனி நாடாக சீனா அங்கீகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனவும் சீனா கூறி வருகிறது.
இதற்கிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அங்கு ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து சீனா ஆதரவுபெற்ற தேசியவாத கட்சியின் ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜி வேட்பாளராக களமிறங்கினார்.
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான லை சிங் டி வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியானது. அவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
தைவான் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சீன ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
- சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.
அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:
ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.
இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.
- 'உலகின் சிறந்த விஸ்கி' என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்காட்ச், அமெரிக்கன் மற்றும் ஐரிஷ் விஸ்கியுடன் போட்டியிட்டு வெற்றி
2023 ஜான் பார்லிகார்ன் விருதுகளில், ரேடிகோ கைடனின் ராம்பூர் அசாவா உலகின் சிறந்த விஸ்கி என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், மிகவும் மதிப்புமிக்க ஜான் பார்லிகார்ன், சர்வதேச பானங்கள் போட்டி அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. நிபுணர்கள் குழு பிரெய்லி முறையில் பானங்களை ருசித்து தேர்வு செய்கிறார்கள். ஜான் பார்லிகார்ன் சொசைட்டி, சுவை, சந்தைப்படுத்தல், தொகுப்பு வடிவமைப்பு, மக்கள் தொடர்புகள், பத்திரிகை, சமூக ஊடகம், நிகழ்வு தயாரிப்பு மற்றும் பார் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பானத்துறை சிறப்பின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜான் பார்லிகார்ன் விருதுகளின் 2023 பதிப்பில் ராம்பூர் அசாவா 'உலகின் சிறந்த விஸ்கி' என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ராம்பூர் அசவா பல ஸ்காட்ச், அமெரிக்கன் மற்றும் ஐரிஷ் விஸ்கியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்த விஸ்கி 1943 இல் நிறுவப்பட்டது. உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு மதுபான உற்பத்தியாளரிடம் தயாரிக்கப்படுகிறது. ராம்பூர் அசவா சிங்கிள் மால்ட் இப்போது வரியில்லாமல் ரூ.9 ஆயிரத்து 390-க்கு கிடைக்கிறது.
இதை தயாரிக்கும் முறையானது அமெரிக்க போர்பன் பீப்பாய்களில் தொடங்கி இந்திய கேபர்நெட் சாவிக்னான் பீப்பாய்களில் முடிவடைகிறது. இதனால் தனித்துவமான மற்றும் அற்புதமான சுவை கொண்ட விஸ்கி தயாரிக்கப்படுகிறது. மேலும் ராம்பூர் அசவாவைத் தவிர, ராம்பூர் செலக்ட், ராம்பூர் பி.எக்ஸ். ஷெர்ரி கேஸ்க் மற்றும் ராம்பூர் டபுள் கேஸ்க் ஆகியவற்றை தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.
ஜான் பார்லிகார்ன் சொசைட்டி, சுவை, சந்தைப்படுத்தல், தொகுப்பு வடிவமைப்பு, மக்கள் தொடர்புகள், பத்திரிகை, சமூக ஊடகம், நிகழ்வு தயாரிப்பு மற்றும் பார் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பானத் துறையின் சிறப்பின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
- சாக்லேட் பார் மற்றும் ஓட்ஸ் வகை உணவு பொருட்களை குவேகர் விற்பனை செய்கிறது
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆய்வில் புகார் உறுதியாகவில்லை
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம், பெப்சிகோ (PepsiCo).
பல உலக நாடுகளில், பல வகையான குளிர்பானங்கள் மற்றும் உடனடியாக உண்ண கூடிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம், பெப்சிகோ.
பெப்சிகோவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், குவேகர் ஓட்ஸ் கம்பெனி (Quaker Oats Company).
தானியங்களில் சக்தி நிறைந்த ஒன்றாக கருதப்படும் ஓட்ஸ் தானியத்தை விற்பதில் குவேகர் முன்னணி வகிக்கிறது.
குவேகர், சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
சுமார் 24 பேருக்கு இவற்றை உண்டதால் உடல்நல குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (FDA) புகார்கள் வந்தன. சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா தொற்று குவேகர் தயாரிப்புகளில் இருப்பதாக புகார் எழுந்தது.
இவ்வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றினால் காய்ச்சல், குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது.
ஆனால், FDA அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதுவரை குவேகர் தயாரிப்புகளுக்கும் உடல்நிலை கோளாறுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதியாகவில்லை.
இருந்தும், தாங்கள் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவேகர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.

அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நிறுவனம் விற்பனை செய்த குவேகர் கிரானோலா பார், கேப்'ன் கிரன்ச் பார், கமேசா மரியாஸ் சீரியல், கேடோரேட் பீநட் பட்டர் சாக்லேட் புரோட்டீன் பார், மன்சீஸ் மன்ச் மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு தயாரிப்புகள் இவற்றில் அடங்கும்.
மேலும், இவற்றை முன்னர் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிறகு, கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பேரரசர் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டினோபில் எனும் புதிய நகரை நிர்மாணித்தார்
- ரோம் நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஸ்பெல்லோ நகரில் இத்தலம் உள்ளது
280 (கி.பி.) நூற்றாண்டிலிருந்து 337 (கி.பி.) நூற்றாண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர், பேரரசர் கான்ஸ்டன்டைன் (Emperor Constantine).
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரசரான இவர், ரோமானிய தலைநகரை கான்ஸ்டான்டினோபில் (Constantinople) எனும் புதிய நகரை நிர்மாணித்து அங்கு மாற்றியமைத்தார்.
தாங்கள் கடைபிடிக்கும் ஒரு திருவிழாவை வெகு தூரம் சென்று கொண்டாட வேண்டியுள்ளதால், அதனை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொண்டாட அனுமதிக்கும்படி பேரரசர் கான்ஸ்டன்டைனிடம் மக்கள் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த பேரரசர், அவரது மூதாதயரை நினைவு கூரும் விதமாக அவர்களுக்கு ஒரு வழிபாட்டு தலத்தை அமைத்து தரும்படி மக்களை கேட்டுள்ளார்.
இந்த பதில் கடிதம் "ரீ ஸ்கிரிப்ட்" (rescript) எனும் பெயரில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநில செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தை (Saint Louis University) சேர்ந்த வரலாற்று பேராசிரியர் டக்ளஸ் பாய்ன் (Prof. Douglas Boin) தலைமையில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.
ரீ ஸ்கிரிப்டை தீவிரமாக ஆய்வு செய்த பேரா. பாய்ன், ஒரு நீண்ட ஆராய்ச்சியை முன்னெடுத்தார்.
அதன் விளைவாக கான்ஸ்டன்டைன் நகர மக்கள், பேரரசரின் மூதாதையருக்கு அமைத்து கொடுத்த வழிபாட்டு தலம், தற்போது, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தலைநகர் ரோம் நகரிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில், ஒரு சிறு மலையில் உள்ள ஸ்பெல்லோ எனும் நகரில், ஒரு வாகன நிறுத்த இடத்திற்கு கீழே, பேரா. பாய்ன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் 1600 வருடத்திற்கும் முற்பட்ட இந்த பழமையான வழிபாட்டு தலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய நாகரீகத்தை காட்டும் வகையில் இத்தாலியில் உள்ள பல புராதன சின்னங்களின் வரிசையில் இந்த ஸ்பெல்லோ வழிபாட்டு தலமும் இடம் பெறும் என பேரா. பாய்ன் தெரிவித்தார்.
தற்போது 3 சுற்றுச்சுவர்களை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி குழுவினர், மீண்டும் கோடை கால விடுமுறை முடிந்ததும் முழுவதுமாக ஆராய்ச்சியை தொடர உள்ளனர்.
- நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






