என் மலர்tooltip icon

    உலகம்

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
    • உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சனா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வரும் அவர்கள் செங்கடல் பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை உடனே நிறுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஏமன் நாட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் இணைந்து கடுமையான வான் வெளி தாக்குதலில் ஈடுபட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் இருநாட்டு படைகளின் போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டது. இதில் 5 பேர் பலியானதாகவும். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் 2-வது நாளாக மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமனை சுற்றி வளைத்து இந்த தாக்குதல் நடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டு வீச்சுகள் நிகழ்ந்ததாகவும், இதனால் உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் தாக்குதலால் ஏமனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும் போது ஹவுதி கிளர்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்தி வரும் தாக்குதல் தன்னிச்சையான நடவடிக்கையாகும், இது சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதலை தொடர்ந்தால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஹவுதி மீதான தாக்குதலால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

    • எரிக்கா பைதுரி தியேட்டரில் உள்ள அனைத்து சீட்களையும் வாங்கி படம் பார்த்துள்ளார்.
    • அவர் தனது வசதியை காட்டிக்கொள்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவை சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. பணக்கார பெண்ணான இவர் டிக்-டாக் தளத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அதில், மினி தியேட்டரின் 10 வரிசையில் உள்ள 16 சீட்களையும் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பதுபோலும், தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.

    அந்த வீடியோவில், நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள் (தனிமை விரும்பி) என்பதால் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எரிக்கா பைதுரி தனது வசதியை காட்டிக் கொள்வதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிட்டி குரூப்பில் உலகெங்கும் 2,39,000 பேர் பணியாற்றுகிறார்கள்
    • காலாண்டு அறிக்கையில் $1.8 பில்லியன் நஷ்டத்தை சிட்டி அறிவித்தது

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி முதலீடு மற்றும் நிதி சேவைகளுக்கான நிறுவனம், சிட்டி குரூப் (Citigroup).

    இந்நிறுவனத்தில் உலகெங்கும் 2,39,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    இதன் காலாண்டு நிதி அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் அந்நிறுவனம் சுமார் $1.8 பில்லியன் தொகை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிட்டி குரூப், வரும் இரண்டாண்டுகளில் தனது பணியாளர்களில் 20 ஆயிரம் பேரை (10 சதவீதம் பேர்) பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

    சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேன் ஃப்ரேசர் (Jane Fraser), "2024 முக்கிய ஆண்டாக இருக்கும். நிறுவனத்தில் பல சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    "பணிநீக்க நடவடிக்கை ஒரு கடினமான செயல்தான். ஆனாலும், 2026 இறுதியில் 1,80,000 பேர் மட்டுமே பணியாற்றும் நிறுவனமாக சிட்டி குரூப் மாற்றப்படும்" என இதன் தலைமை நிதி அதிகாரி (CFO) மார்க் மேசன் (Mark Mason) தெரிவித்தார்.

    வங்கி துறையில் அமெரிக்காவின் பெரும் வங்கிகளில் முதல் 5 இடங்களில் உள்ளது சிட்டி.

    அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்குகள் 1.4 சதவீத சரிவை சந்தித்தன.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் பல துறைகளில் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் தனியார் வங்கி துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.

    • டிஜிட்டல் வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்டது நியூயார்க் டைம்ஸ்
    • இத்தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக டிரம்ப் வழக்கறிஞர் தெரிவித்தார்

    1851லிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times).

    உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை.

    2018ல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர்.

    2021ல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொனால்ட் டிரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

    ஆனால், அந்த 3 பேரையும், தி நியூயார்க் டைம்ஸையும், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

    நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ரீட் (Robert Reed) தனது தீர்ப்பில், டிரம்ப் $3,92,638 தொகையை வழக்கறிஞர் கட்டணமாக டிரம்ப் அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    குடும்ப தகராறில் தனது உறவுக்கார பெண் மேரி டிரம்ப், வாக்குறுதியை மீறி, அவர் வசம் வைத்திருந்த தனது வரி விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். மேரி மீதான அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ளது.

    இத்தீர்ப்பு குறித்து டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா (Alina Habba), "பத்திரிகையும், அதன் செய்தியாளர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது தங்கள் தரப்பிற்கு அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    சிகாகோ:

    அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.

    இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல நகரங்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    • தாய்லாந்தில் போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    பாங்காங்:

    தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    கஞ்சா வைத்திருந்தால் அபராதமும், சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்துதான். இதற்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தாய்லாந்தின் புதிய அரசாங்கம் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை தடை செய்ய அழுத்தம் கொடுக்கிறது; ஆனாலும், மருத்துவ நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது

    தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து தாய்லாந்து சில ஆண்டுக்கு முன் கஞ்சாவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    • பெரு நாட்டில் மிகவும் பிரபலமான திரை நட்சத்திரம் தைனா ஃபீல்ட்ஸ்
    • 24-வது வயதில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார்.

    பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

    இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஐஓடி எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

    தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மும்பைக்கு பயங்ரதீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியானார்கள்.தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அந்த அமைப்பின் பயங்ரவாதிகளை இந்தியா தேடி வருகிறது.

    இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும் லஷ்கர் இ தொய்பா நிறுவனர்களில் ஒருவருமான ஹபீஸ் அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானில் மரணம் அடைந்துவிட்டதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.

    77 வயதான அப்துல் சலாம் பட்டாவி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது மாரடைப்பால் இறந்ததாக ஐநா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    அப்துல் சலாம் பட்டாவியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக பாகிஸ்தானில் இவர் பல முறை கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு ஒரு வழக்கில்16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்ட சமயத்தில் அப்பொறுப்பை அப்துல் சலாம் பட்டாவி ஏற்றார் என்பது குறிப்பிடதக்கது.

    • அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.
    • ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறும் போது, சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.


    ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் 'செயின்ட் நிக்கோலஸ்' கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    • இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது
    • ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது. இது 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

    • செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • பலமுறை எச்சரித்தும் ஹவுதி தாக்குதலை தொடர்ந்ததால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கியது.

    பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போதிலும் ஹவுதி தாக்குதலை குறைக்கவில்லை. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தன.

    மேலும், செங்கடலில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதனுடன் இதற்கு மேல் எச்சரிக்கை விடுவிக்கப்படாது என கறாராக தெரிவித்திருந்தது.

    இருந்தபோதிலும் ஆளில்லா படகை அனுப்பி வெடிக்கச் செய்தது ஹவுதி. டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை ஒன்றிணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளன.

    இந்த ஒருங்கிணைந்த ராணுவ தாக்குதலில் போர்க்கப்பல், போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. டோமாஹாக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத சேமிப்பு கிடங்கு, வான் பாதுகாப்பு சிஸ்டம் போன்றவற்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து 27 முறை வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.

    ×