என் மலர்
உலகம்
- செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
- பலமுறை எச்சரித்தும் ஹவுதி தாக்குதலை தொடர்ந்ததால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை.
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கியது.
பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போதிலும் ஹவுதி தாக்குதலை குறைக்கவில்லை. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செங்கடலில் வணிக கப்பல்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தன.
மேலும், செங்கடலில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அதனுடன் இதற்கு மேல் எச்சரிக்கை விடுவிக்கப்படாது என கறாராக தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும் ஆளில்லா படகை அனுப்பி வெடிக்கச் செய்தது ஹவுதி. டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை ஒன்றிணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராணுவ தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த ராணுவ தாக்குதலில் போர்க்கப்பல், போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. டோமாஹாக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுத சேமிப்பு கிடங்கு, வான் பாதுகாப்பு சிஸ்டம் போன்றவற்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து 27 முறை வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
- ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.
என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.
- எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
- 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.
1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.
இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.
விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.
நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.
இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.
அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.
மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.
- கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம்.
- ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுக அனுமதி.
சமீபத்தில் நடைபெற்ற ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகள் உலகளாவிய 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கின்றன. இதனால், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த 6 நாடுகளும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக ஜப்பானும் சிங்கப்பூரும் தொடர்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும், இந்த காலாண்டின் தரவரிசை ஐரோப்பிய நாடுகள் முன்னேறி வருவதை காட்டுகிறது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் தென் கொரியாவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகள், 193 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான அனுமதியை வழங்குகின்றன.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 192 இடங்களுக்கு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா தனது தற்போதைய தரவரிசையை உஸ்பெகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் 101 வது இடத்தில் உள்ளது.
பட்டியலில் 166 கூடுதல் நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் பாக்கியத்தை முதல் தரவரிசையில் உள்ள நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தான் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே அணுகக்கூடியது. 29 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் அணுகக்கூடிய சிரியா இரண்டாவது மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் 31 மற்றும் பாகிஸ்தான் 34 இடங்களைப் பிடித்துள்ளது.
- பஞ்சாப் மாகாணத்தில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகளுக்கு நிமோனியா வேகமாக பரவுகிறது.
- கடந்த வருடம் 990 பேர் உயிரிழந்ததால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்.
பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருகிற 31-ந்தேதி வரை பள்ளிகளில் காலை கூட்டத்திற்கு (morning assemblies) தடைவிதிக்கப்பட்டுள்ளது. நர்சரி குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டள்ளது.
மேலும் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும். இவைகள் நிமோனியா தொற்றிக் கொள்வதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 10-ல் 8 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பஞ்சாப் மாகாணத்தில் 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ? என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி, மூத்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
- சிறிய நாடான புருனே மக்கள் தொகை சுமார் 4,50,000
- அனிஷா அரச குடும்பத்தை சாராத சாதாரண குடும்பத்து பெண்
தென்மேற்கு ஆசியாவில் தெற்கு சீன கடல் மற்றும் மலேசியாவால் சூழப்பட்ட மிக சிறிய இஸ்லாமிய நாடு, புருனே (Brunei). இதன் தலைநகரம், பந்தர் செரி பெகவான் (Bandar Seri Begawan).
1984ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுமுறை பெற்ற சுதந்திர நாடான புருனேயில் அரச குடும்ப ஆட்சிமுறை பின்பற்றப்படுகிறது. அங்கு எண்ணெய் வளம் மிக அதிகம். அதன் மக்கள் தொகை சுமார் 4,50,000.
உலகிலேயே பணக்கார நாடுகளில் முன்னிலையில் உள்ள நாடான புருனேயின் மன்னர் சுல்தான் ஹஸ்ஸனல் பொல்கியா (Sultan Hassanal Bolkiah).
சுல்தானின் 10-வது மகன் இளவரசர் அப்துல் மதின் (32).
மதின், தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னா (Yang Mulia Anisha Rosnah) என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.
அரச குடும்பத்தை சாராத 29 வயதானவரான அனிஷா, சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். மதினின் தந்தையின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரின் பேத்தி.
இளவரசர் மதின், அந்நாட்டு ராணுவத்தில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணிபுரிகிறார். அனிஷா ஃபேஷன் துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
அந்நாட்டின் தங்க குவிமாடம் கொண்ட மசூதியில் இத்திருமணம் நடைபெறுகிறது.
திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் பிரமாண்ட விழாவுடனும், திருமணத்திற்கு பிறகு பெரும் ஊர்வலத்துடனும் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைகிறது.
உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
மிக பிரமாண்டமாக நடக்கவுள்ள திருமண ஊர்வலத்தையும் மணமக்களையும் நேரில் காண அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
- உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.
- பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவரும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில் மாடுகளை வளர்க்க தொடங்கி உள்ளேன். உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்கின் பண்ணையில் மாடுகளுக்கு மக்காடாமியா உணவுகளை சாப்பிட கொடுப்பதாகவும், குடிப்பதற்கு பீர் வழங்குவதாகவும் கூறி உள்ளார். மேலும் மாடுகளுக்கான பீர் பண்ணையிலேயே உருவாக்கப்பட்டு கொடுக்கப்படுவதாகவும், பண்ணையில் மரங்களை நடுவதற்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் எனது மகள்கள் உதவுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை என சீனா திட்டவட்டமாக கூறி விட்டது
- சீனாவில் இருந்து தினமும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடப்பதாக தைவான் கூறியது
செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு, தைவான் (Taiwan).
வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான், தன்னை சுயாட்சி பெற்ற தனி நாடாக அறிவித்து கொண்டாலும், அதை ஏற்க மறுக்கும் சீனா, அந்நாட்டை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து அதன் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால், தைவானின் சுயாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.
சீனாவுடன் இது குறித்து அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என திட்டவட்டமாக சீனா தெரிவித்தது.
இதையடுத்து எப்போது வேண்டுமானாலும், சீனா தைவானை ஆக்ரமிக்கலாம் எனும் அச்சம் தைவான் நாட்டில் தோன்றியுள்ளது.
இதை தொடர்ந்து பல மக்கள் தங்கள் வெளியுலக தொடர்புகளை குறைத்து கொண்டுள்ளனர். அலுவலகம் செல்ல தயக்கம் காட்டி பலர், வீட்டிலிருந்தே பணிபுரிய தொடங்கி உள்ளனர். இணயவழி செயல்பாடுகள் குறைந்துள்ளதால், வங்கி சேவைகள் முடங்கி விட்டது.
ராணுவ தாக்குதல் மட்டுமின்றி இணைய வழியாகவும் சீனாவால் தாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருப்பதாக தைவான் அஞ்சுகிறது. இதனால் தைவானின் ராணுவ கட்டமைப்புகளில் மென்பொருள் பாதுகாப்பை அந்நாடு வலுப்படுத்தி கண்காணித்து வருகிறது.
தினந்தோறும் 5 மில்லியன் சைபர் தாக்குதல்கள் சீனாவினால் தைவான் நாட்டின் தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித்துறை கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக தைவான் அரசு தெரிவித்தது.
சீனாவிற்கு வெளியிலிருந்து இயங்கும் சீன சைபர் தாக்குதல் குழுவான "ஃப்ளாக்ஸ் டைஃபூன்" (Flax Typhoon) தைவான் நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்பை இணையவழியாக ஆக்ரமிக்க முயல்வதாக கடந்த வருடமே, மைக்ரோசாப்ட், எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
- பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதால், போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.
காசா முழுவதிலும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. போரில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை இஸ்ரேல் மறுத்து வந்தது.
இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச கோர்ட்டில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும், உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் தொடங்குகிறது. இதில் இஸ்ரேல் ஈடுபடுவது போர் இனப்படுகொலைகள் என தென் ஆப்பிரிக்கா வாதிடவுள்ளது. மேலும் போர் நடவடிக்கைகளுக்கு கோர்ட்டு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கை குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை இஸ்ரேல் அனுப்பி உள்ளது.
இவ்வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. காசா முழுவதும் இஸ்ரேல் ஏவுகணை, குண்டுகளை வீசிவருகிறது.
- உலகளவில் மக்களிடம் "வாங்கும் சக்தி" குறைந்து விட்டது
- கடந்த ஆண்டே கூகுள் மற்றும் அமேசான் பல ஊழியர்களை நீக்கின
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
உலகளவில் பெரும்பான்மையான மக்களிடம் "வாங்கும் சக்தி" (purchase power) குறைந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் குறைந்துள்ளது. நிறுவனங்களின் விற்பனையில் தேக்க நிலையையும், வீழ்ச்சியும் அதிகரித்து வருகின்றன.
2022 மார்ச்சில் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் மற்றும் 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் நீடிக்கும் சிக்கல், சீனாவில் சரிய தொடங்கியுள்ள உள்நாட்டு பொருளாதாரம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணங்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த வருடம் முதல் இதன் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலும் எதிரொலிக்க தொடங்கியதால், உலகின் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்க ஆட்குறைப்பை தொடங்கின.
"லே ஆஃப்" (layoffs) அல்லது ஜாப் கட்ஸ் (job cuts) என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டே அமேசான், மைக்ரோசாப்ட், காக்னிசன்ட் மற்றும் கூகுள் உட்பட பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
தற்போது அடுத்த சுற்றில் மேலும் பல ஊழியர்களை அமேசான் மற்றும் கூகுள் நீக்கியுள்ளது.
அமேசான், முன்னரே ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் யூனிட்டில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது ப்ரைம் வீடியோஸ் (Prime Videos) மற்றும் எம்ஜிஎம் ஸ்டூடியோ (MGM Studios) கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை நீக்கியது.
கூகுள், செலவினங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் அசிஸ்டன்ட், ஏஆர் (ஆக்மென்டட் ரியாலிட்டி), மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றியவர்களை நீக்கியது.
பொருளாதார மந்தநிலை நீடித்தாலோ, மேலும் நலிவுற்றாலோ இத்தகைய பணிநீக்கங்கள் கடுமையாக அதிகரிக்கும் என மனிதவள நிபுணர்கள் எச்சரிப்பதால் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் கவலையில் இருக்கின்றனர்.
- 2020ல் பரவிய கொரோனா பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது
- கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியே புதிய திரிபிலிருந்தும் காக்கும் என்றார் டெட்ரோஸ்
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.
2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.
பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.
இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.
2022 தொடக்கம் முதல் இந்தியாவில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குறைந்தனர்.
2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.
மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.
இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.
- வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.
- மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கனடா:
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது.
பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.
போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அந்த வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிடாத போலீசார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.






