என் மலர்tooltip icon

    உலகம்

    • 2020ல் பரவிய கொரோனா பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது
    • கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியே புதிய திரிபிலிருந்தும் காக்கும் என்றார் டெட்ரோஸ்

    2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

    இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.

    2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.

    பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.

    இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.

    2022 தொடக்கம் முதல் இந்தியாவில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குறைந்தனர்.

    2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.

    மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.

    மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

    இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.

    • வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.
    • மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கனடா:

    கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது.

    பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.

    திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்தார்.

    போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அந்த வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிடாத போலீசார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை. இதனால் துபாய்க்குச் செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    • மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.
    • சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பீஜிங்:

    மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சீனா-மாலத்தீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலத்தீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது.

    மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவி ஏற்றதும் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டது.

    இவ்விவகாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று அந்த நாட்டுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மாலத்தீவுக்கு சீனாவில் இருந்து சுற்றுலாவாக அதிகம் பேர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மாலத்தீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
    • லண்டனில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

    லண்டன்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

    இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.

    கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
    • 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.

    மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

    25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

    இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.

    • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
    • டிரம்பிற்கு போட்டியிட உள்ள உரிமையை பறிப்பது அமெரிக்க குணம் அல்ல என்றார் ராபர்ட்

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால், கடந்த 2020ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட தனது ஆதரவாளர்களை அனுப்பி தேச துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பெயரை வாக்கு சீட்டிலிருந்து நீக்கவும், அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    டிரம்பை தீவிரமாக எதிர்த்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில், ஜூனியர் கென்னடி.

    டொனால்ட் டிரம்பிற்கு தடை விதிக்கப்படுவது குறித்து ஜூனியர் கென்னடியிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் டிரம்பின் ஆதரவாளனோ ரசிகனோ இல்லை. அதனால்தான் அவரை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குகிறேன்.

    ஆனால், அவரை சமநிலையற்ற ஆடுகளத்தில் வெல்ல விரும்பவில்லை.

    அமெரிக்க மக்களுக்கு ஒரு நேர்மையான தேர்தலை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. பல விவாதங்கள் நடைபெற்று, மக்கள் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஒருவரை தேர்ந்தெடுக்கும் நியாயமான ஜனநாயகத்தை கோர அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

    ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எந்த ஆதாரமுமில்லாமல் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுவது பெரும் தவறு. நம் நாட்டை ஒரு அறிவில்லாதவர்களின் நாடு போல் உலக அரங்கில் காட்டி விடும்.

    குறுகிய பார்வை கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டால், டிரம்ப் ஒரு கடவுளை போல் கொண்டாடப்படுபவர் ஆகி விடுவார்.

    இது அமெரிக்கர்கள் எடுக்கும் முடிவே அல்ல.

    இது தவறான திசையில் பயணிக்கும் முடிவு. மேலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கென்னடி ஜூனியர் கூறினார்.

    1961ல் அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவியேற்ற ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy), 1963ல் டெக்ஸாஸ் (Texas) மாநில டல்லாஸ் (Dallas) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    பிறகு 1968ல், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் கென்னடியின் சகோதரர், ராபர்ட் எஃப். கென்னடி, கலிபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    அந்த ராபர்ட் கென்னடியின் மகன்தான் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் (Robert F. Kennedy, Jr.) என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஹபீஸ் சயீத் முக்கிய பங்காற்றினார்.
    • அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    நியூயார்க்:

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    2008-ம் ஆண்டில் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் முக்கிய பங்காற்றினார் என்ற குற்றச்சாட்டுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது.

    இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள தேவையான ஆதாரங்களுடன் அவரை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு அவரை நாடு கடத்தவில்லை.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். 7 பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி செய்த குற்றங்களில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு 78 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தப் பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரிசெய்துள்ளது. 2008 மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தார்.

    இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

    • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
    • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

    95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

    ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

    இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

    மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு ருசிரா கூறினார்.


    • தைவானின் சுயாட்சியை சீனா அங்கீகரிக்கவில்லை
    • தைவானுக்கு ஆதரவான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றது சீனா

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan).

    சுயாட்சி பெற்ற தனி நாடாக தைவான் தன்னை அறிவித்து கொண்டாலும், சீனா இதை ஏற்க மறுத்து, தைவானை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இரு நாடுகளுக்குமிடையே இது பெரும் சச்சரவை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

    சமீப சில மாதங்களாக தைவானின் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில், சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதால், சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை அந்நாடு எடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. பல கட்டங்களாக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    ஆனால், 2022ல் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து சீனா அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது.

    கடந்த வருடம், இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க சம்மதித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடமான பென்டகனில் (Pentagon) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே தைவான் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் புற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவ துணை தலைமை அதிகாரி மைக்கேல் சேஸ் (Michael Chase) மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் சாங் யான்சாவ் (Major Gen. Song Yanchao) ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தைவான் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் சீனா தயார் இல்லை. தைவானுக்கு ராணுவ உதவி அளித்து வலுப்படுத்த முயலும் போக்கை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்துவதையோ, சச்சரவை தூண்டும்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அமெரிக்கா தொடர கூடாது.

    கடற்சார் பாதுகாப்பு விஷயங்களை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

    சர்வதேச அளவில் முக்கிய சிக்கல்களில் சீனாவின் அடிப்படை உரிமைகளுக்காக சீனா எடுக்கும் முயற்சிகளயும், சீனாவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீனா கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூடான் பாராளுமன்ற தேர்தலின் இறுதிச்சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 47 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி 30 இடங்களை கைப்பற்றியது.

    திம்பு:

    தெற்கு ஆசிய நாடான பூடானில் கடந்த 2008-ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது அங்கு 4-வது பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

    மொத்தம் 47 தொகுதிகள் கொண்ட பூடான் பாராளுமன்ற தேர்தலின் முதன்மை சுற்று தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    இதற்கிடையே, நேற்று இறுதிச்சுற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.இதில் முன்னாள் பிரதமர் டிசிரிங் டாப்கேயின் மக்கள் ஜனநாயக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    மக்கள் ஜனநாயக கட்சி 47 தொகுதிகளில் 30 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூடான் டெண்ட்ரல் கட்சி 17 இடங்களைப் பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

    மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளதால் 58 வயதான டிசிரிங் டாப்கே 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

    இந்நிலையில், பூடானில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள டிசிரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது.
    • இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.

    கடந்த 1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று நாசா தெரிவித்தது.

    இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது. இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026-ம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு (2025) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026-ம் ஆண்டுக்கு தள்ளி போயிருக்கிறது.

    ×