search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்- ஈரான் கடும் கண்டனம்
    X

    ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்- ஈரான் கடும் கண்டனம்

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
    • உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சனா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்து வரும் அவர்கள் செங்கடல் பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை உடனே நிறுத்துமாறு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கப்பல்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஏமன் நாட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் இணைந்து கடுமையான வான் வெளி தாக்குதலில் ஈடுபட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் இருநாட்டு படைகளின் போர் விமானங்கள், போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஈடுபட்டது. இதில் 5 பேர் பலியானதாகவும். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் 2-வது நாளாக மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமனை சுற்றி வளைத்து இந்த தாக்குதல் நடந்தது. கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டு வீச்சுகள் நிகழ்ந்ததாகவும், இதனால் உயிர் இழப்புகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்கலாம் என்றும் ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் தாக்குதலால் ஏமனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறும் போது ஹவுதி கிளர்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்தி வரும் தாக்குதல் தன்னிச்சையான நடவடிக்கையாகும், இது சர்வதேச சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதலை தொடர்ந்தால் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஹவுதி மீதான தாக்குதலால் கச்சா எண்ணை விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

    Next Story
    ×