என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேபாளத்தில் நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார் பிரதமர் பிரசந்தா.
    • பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் 4-வது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

    இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.

    நேபாளத்தில் உள்ள உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு மே 13 அன்று பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெற்றது.

    இந்நிலையில், நேபாளத்தில் நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார் பிரதமர் பிரசந்தா. மே 20 அன்று பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பிரசந்தா பிரதமர் ஆனபிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும்.

    • முன்பதிவு செய்பவர்களுக்கு தேவையான வசதி மிதக்கும் நாற்காலியுடன் ஊழியர் ஒருவர் உதவிக்கு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
    • வசதியின் காரணமாக இந்த கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    சார்ஜா:

    அல் ஹம்ரியா நகராட்சியின் இயக்குனர் முபாரக் ராஷித் அல் சம்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளும் நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இதன் காரணமாக அமீரகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கடலில் நீந்துவதற்கு அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சார்ஜா கடற்கரை பகுதிகளிலும், சார்ஜா அல் ஹம்ரியா உள்ளிட்ட இடங்களிலும் நீச்சல் செய்வதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நீச்சல் அடிப்பவர்களை கண்காணிக்கும் வகையில் கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடலில் அதிகமான அலை ஏற்பட்டால் அந்த சமயத்தில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் எச்சரிக்கை கொடி ஏற்றப்படுகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக நீச்சல் அடிக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    அல் ஹம்ரியா பகுதிக்கு சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து அங்குள்ள கடற்கரையில் நீச்சல் அடித்து வருகின்றனர். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கடலில் நீந்தி வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். எனினும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வயதானவர்கள் கடலில் நீச்சல் அடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அவர்கள் கடல் நீரில் மிதக்கும் வகையில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக 'மிதக்கும் நாற்காலி' வசதி செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளி, வயதானவர்களை மிதக்கும் நாற்காலியில் அமர வைத்து கடல் பகுதியில் வலம் வருகின்றனர்.

    இந்த வசதி மூலம் அவர்கள் கடல் நீரில் மிதப்பது போன்றதொரு வசதியை பெற்று வருகின்றனர். இந்த சிறப்பு வசதியை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெற முடியும். இந்த வசதியை பெற பொதுமக்கள் 056 9920099 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

    முன்பதிவு செய்பவர்களுக்கு தேவையான வசதி மிதக்கும் நாற்காலியுடன் ஊழியர் ஒருவர் உதவிக்கு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இந்த வசதியின் காரணமாக இந்த கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.
    • வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    சான் பிரான்சிஸ்கோ:

    அமெரிக்கா பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி. கடந்த 2022-ம் ஆண்டு இவர் பதவியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் நான்சி பெலோசியின் வீடு புகுந்து அவரை கொலை செய்ய முயற்சித்தார். இதனை தடுக்க வந்த அவருடைய கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பால் பெலோசி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பின்னர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் டேவிட் டீபாபே என்பதும், டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த அவர், ஆளுங்கட்சியினர் செயல்பாடுகளால் வெகுண்டெழுந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பான வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் முன்னாள் சபாநாயகரின் வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட டேவிட் டீபாபேவுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    • பிரபலமான சுற்றுலா இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    • பலி எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

    மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேரந்தவர்கள். துப்பாக்கிச்சூடு பிரபலமான சுற்றுலா பகுதியில் நடைபெற்றது.

    இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும். பொறுப்பேற்கவில்லை.

    உயிரிழந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் வெளியிடாத நிலையில், ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

    காயம் அடைந்தவர் காபுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    தலிபான் அரசுக்கு எதிரான குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியது.

    • பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது.
    • ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஒய்எஸ்ஆர்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐந்து மாதங்களாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது. தேர்தலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் விஸ்ட்ஜெட் மூலம் புறப்பட்ட நிலையில் இன்று லண்டன் சென்றடைந்தார்.

    முதலமைச்சருடன் அவரது மனைவி ஒய்.எஸ். பாரதி மற்றும் மகள்கள் ஹர்ஷா மற்றும் வர்ஷா உள்ளனர்.

    லண்டனை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்குச் செல்கின்றனர்.

    நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 1 ஆம் தேதி அன்று நாடு திரும்புகிறார்.

    • தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது.

    சிங்கப்பூரில் மீண்டும் புதிய கோவிட் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    இதுபற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பேசுகையில், நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

     

    கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த வாரம் 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொலாத பட்சத்தில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

     

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

     

    • வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    பிஷ்கெக்:

    மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கும் எகிப்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
    • பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கிடையே போர் நிறுத்தம் காரணமாக 130 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் பிணைக்கைதிகள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் இசை விழாவில் கொல்லப்பட்ட 22 வயதான ஷானி லூக் மற்றும் அமித் புஸ்கிலா (வயது 28), இட்சாக் கெலரென்டர் (56) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • இந்தியாவை விட உலகில் பல துடிப்பான ஜனநாயகங்கள் இல்லை.
    • கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா-அமெரிக்க உறவு வலுப்பெற்றுள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவை விட உலகில் பல துடிப்பான ஜனநாயகங்கள் இல்லை. இந்திய மக்கள் வாக்களிக்கும் திறனைப் பயன்படுத்தியதற்காகவும், எதிர்கால அரசாங்கத்தில் குரல் கொடுப்பதற்காகவும் நாங்கள் அவர்களைப் பாராட்டுகிறோம்.

    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா-அமெரிக்க உறவு வலுப்பெற்றுள்ளது.இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. அனைத்து வகையான புதிய முயற்சிகளையும் நாங்கள் தொடங்கினோம். முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக பணிபுரிகிறோம். இது மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான கூட்டாண்மை. பிரதமர் மோடியின் தலைமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றார்.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும்.
    • கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    மாட்ரிட்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்புகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பெல்ஜியத்துடன் இணைந்து இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

    சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி, டென்மார்க் கொடியுடன் மரியான் டானிகா என்ற கப்பல் இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கப்பல் ஸ்பெயின் நாட்டு துறைமுகத்துக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் கூறும்போது, சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் எந்தவொரு கப்பலுடனும் இதே நிலை கடைபிடிக்கப்படும். மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக ஆயுதங்கள் தேவையில்லை, அதற்கு அதிக அமைதி தேவை என்றார்.

    கப்பலில் 27 டன் வெடிபொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஏற்று மதிக்கு தடை செய்யப்படாத பொருட்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×