என் மலர்
உலகம்
- வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன.
- ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று, உணவுக்காக காத்திருந்தவர்கள் உட்பட 44 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்றன. காசா நகரில் மட்டும் 33 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காசாவில் கடுமையான தாக்குதல்களும் தொடர்கின்றன. ஷேக் ரத்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் காசாவில் ஆறு பாலஸ்தீனியர்கள் நேற்று ஒரே நாளில் பட்டினியால் இறந்தனர்.
இதற்கிடையே, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய எல்லைக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் இருந்த இடத்திற்கு அருகே இஸ்ரேல் ராணுவம் டிரோன்கள் மூலம் 4 கையெறி குண்டுகளை வீசியுள்ளது. சாலைத் தடையை அமைதிப்படையினர் அகற்றும் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
- ஊழியர்கள் எல்லாவற்றையும் கவனமாக அழித்துவிட்டனர். கிம் அங்கு இருந்த்ததற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்கவில்லை.
- அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது சிறுநீர் மற்றும் மல மாதிரிகளை சிறப்பு சீல் வைக்கப்பட்ட சூட்கேஸ்களில் சேகரிக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு தனது பிரத்யேக குண்டு துளைக்காத ரெயிலில் வந்திருந்தார்.
பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து கிம் ஜாங் உன் உரையாடினார். இந்நிலையில் புதினுடனான உரையாடலுக்கு பின் அறையில் இருந்து கிம் ஜாங் உன் வெளியேறியதும் அவரது உதவியாளர்கள் அந்த அறையை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.
கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை, அதன் கைப்பிடி, அவர் தொட்ட இடங்கள், மேசை மற்றும் பொருட்களை அவசர அவசரமாக துடைத்தனர். அவர் குடித்து வைத்த கண்ணாடி கோப்பையை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர்கள் சில இரசாயனங்களை பயன்படுத்தி இதை செய்ததாக நம்பப்படுகிறது.
ரஷ்ய பத்திரிகையாளர் அலெக்சாண்டர் யுனாஷேவ் பேசுகையில் "பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஊழியர்கள் எல்லாவற்றையும் கவனமாக அழித்துவிட்டனர். கிம் அங்கு இருந்த்ததற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்கவில்லை" என்று கூறினார்.
எதிரி உளவாளிகள் கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ உள்ளிட்ட உயிரியல் தடயத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அவரது தலைமுடி, தோல் அல்லது உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ சேகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், அவரது உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதை தடுப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கிம் மட்டும் இத்தகைய தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்லும்போது, அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது சிறுநீர் மற்றும் மல மாதிரிகளை சீல் வைக்கப்பட்ட சூட்கேஸ்களில் சேகரிப்பதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவை பாதுகாப்பாக மாஸ்கோவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தனது உடல்நல ரகசியங்கள் வெளிப்படுவதைத் தடுக்க புதின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று இராணுவ அணிவகுப்பை நடத்தியது.
- சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார் என்று டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுதொடர்பாக டிரம்ப், "நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று கிண்டலாக பதிவிட்டார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியதாகவும், ஜின்பிங் அரசாங்கம் அந்த தியாகங்களை மதிக்கிறதா என்றும் டிரம்ப் வினவினார்.
சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும், சீனா அவர்களின் தைரியத்தையும் தியாகங்களையும் நினைவில் கொள்ளும் என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
- சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
- அதிபர் ஜி ஜின்பிங் தியான்மென் சதுக்கத்தில் நடந்துசென்று வீரர்களுடன் கைகுலுக்கினார்.
பீஜிங்:
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தியான்மென் சதுக்கத்தில் நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தியான்மென் சதுக்கத்தில் நடந்து சென்று வீரர்களுடன் கைகுலுக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மியான்மர், ஈரான், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், நேபாள பிரதமர், மாலத்தீவு அதிபர், மலேசியா, இந்தோனேசியா, ஜிம்பாப்வே, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் உள்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டனர்.
சீனா முதல் முறையாக நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. போர் விமானங்கள், பிரமாண்டமான போர் டாங்கிகள், அதிவேக ஏவுகணைகள், ரோபோ டிரோன்கள் உள்ளிட்டவைகளின் அணிவகுப்பு நடந்தது. சீனா தனது ராணுவ ஆயுத பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.
- பலுசிஸ்தானில் ஏராளமானோர் கலந்துகொண்ட ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது.
- அப்போது அங்கு நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் கட்சி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், பலுசிஸ்தானில் மற்றொரு இடத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப்படை தலைமையகத்தைக் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ தலைமையகத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- கடும் நிலநடுக்கத்தால் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடுபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா 21 டன் நிவாரண உதவிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், நீர் சேமிப்பு டேங்குகள், ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், சிறிய நீர் சுத்திகரிப்பான்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் உள்ளிட்டவைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா தொடர்ந்து அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறது. வரும் நாட்களில் கூடுதலாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
- பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் சீனாவிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்தது. ஜெர்மனி, பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய புதின், "ரஷ்யா ஒரு நாள் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் என பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை தான் எப்போதும் எதிர்த்ததில்லை" என்று தெரிவித்தார்.
- கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
- கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 46,473 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
இலங்கையின் முக்கிய வருவாயாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட அதிகமாகும். அதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவர். பிரிட்டன் (17,764) ஜெர்மனி (12,500) சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
- பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.
- இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா விழா எடுக்கிறது.
இந்தியாவுடனான ரஷியாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.
அப்போது, "டெல்லியுடனான மாஸ்கோவின் உறவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஷெபாஸ் ஷெரீப் புதினிடம் கூறியுள்ளார்.
மேலும், "நாங்கள் உங்களுடன் மிகவும் வலுவான உறவுகளை விரும்புகிறோம். இந்த உறவு இந்த பிராந்தியத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு பரஸ்பரம் பயனளிக்கும்" என்று அவர் புதினிடம் கூறினார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சீனா ஏற்பாடு செய்துள்ள மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க புதினும் ஷெரீப்பும் பெய்ஜிங்கிற்கு வந்திருப்பது குறிபிடத்தக்கது.
- பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
- அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பேரணியில் கலந்து கொண்ட அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
- பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்தது 6.0, 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
பாகிஸ்தானை ஒட்டிய இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் அவை இடிந்து விழுந்தன.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
மீட்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிக்கைபடி, இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் இன்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
குனார் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் ஊடகங்களிடம் பேசுகையில், .இந்த புதிய நிலக்காடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.






