என் மலர்tooltip icon

    உலகம்

    • பேரல் ஒன்றுக்கு 3 முதல் 4 டாலர் வரை தள்ளுபடியில் வழங்க ரஷிய முன்வந்துள்ளதாக தகவல்.
    • இந்த மாதம் கடைசியில் பேரல்கள் லோடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தகவல்.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. அதோடு மட்டுமல்லாமல் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. மொத்தமாக 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.

    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மேலும் தள்ளுபடி விலையில் விற்க ரஷியா முன் வந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. பேரல் ஒன்றுக்கு 3 அமெரிக்க டாலர் முதல் 4 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், இந்த கச்சா எண்ணெய் செப்டம்பர் கடைசி மற்றும் அக்டோபர் மாதத்தில் லோடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மூலமாக கிடைக்கும் பணத்தை, உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷியா ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வருகிறது.

    ரஷியா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது எனவும் அமெரிக்கா விமர்சனம் செய்து வருகிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு சீனாவில் நடைபெற்றது. அப்போது இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    • நெஸ்லே சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இவர் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் நெஸ்லே. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர் லாரன்ஸ் பிரெக்சி.

    விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் சி.இ.ஓ. ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. நிறுவனம் நடத்திய விசாரணையில் ஊழியர் உடனான ரகசிய உறவு தெரிய வந்தது.

    இந்நிலையில், சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, பிலிப் நவ்ராட்டில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
    • 20 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பேய்மழை கொட்டித் தீர்த்தது.

    இதுபோன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மழை வெள்ள அபாய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் எனக்கூறியது விசித்திரமாக உள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், செய்தி சேனலுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

    வெள்ள அபாயம் போன்ற சூழ்நிலைக்கு எதிராக போராடும் மக்கள், மழை வெள்ளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்தை மழைநீர் வடிகால் கால்வாயில் விடுவதற்குப் பதிலாக கண்டெய்னர், தொட்டிகளில் சேமிக்க வேண்டும். மக்கள் வெள்ளத்தை ஆசீர்வாதமாக (Blessing) பார்த்து, சேமித்து வைக்க வேண்டும்.

    10 முதல் 15 வருட பெரிய திட்டங்களை விட, சிறிய அணைகளை கட்ட வேண்டும். சிறிய அணைகள் கட்டும் வேலைகள்தான் உடனடியாக முடிவடையும். நீரை கால்வாயில் விட்டுக்கொண்டிருக்கிறோம். அதை நாம் கட்டாயம் சேமிக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    பஞ்சாப் மாகாணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 854 பேர் மழைக் காரணமாக உயிரிழந்துள்ளனர். 1,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இன்றைக்குள் முல்தான் மாவட்டத்தை வெள்ளம் சென்றடைந்து, ராவி ஆற்று நீருடன் கலக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றனர்.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணம் மலைகள் நிறைந்த இடமாகும். இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை.

    நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான் கருத்து.
    • பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டு அதிபர் பேசியதாக செய்தி வெளியானது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அஜர்பைஜான் இந்த அமைப்பின் முழு உறுப்பினராகும் முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியது.

    ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியா பழிவாங்க முயல்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.

    மாநாடு நடைபெற்ற இடத்தில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ சந்தித்தார். அப்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் நடவடிக்கை இருந்தபோதிலும், அஜர்பைஜான் பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.

    • கிம் ஜாங் உன் கடைசியாக 2023ஆம் ஆண்டு ரஷியா சென்றிருந்தார்.
    • 2019ஆம் ஆண்டுக்குப்பின் தற்போது சீனா சென்றடைந்துள்ளார்.

    வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இவரது தலைமையில் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார். அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.

    அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வெளியில் காண்பது அரிதாகும். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் அரிது. ரஷியா அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு மட்டும் எப்போதாவது சுற்றுப் பயணம் மேற்கொள்வது உண்டு.

    இந்த நிலையில் இன்று கிம்ஜாங் உன் சீனா சென்றடைந்துள்ளார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்டு இன்று சீனா சென்றடைந்துள்ளார். குண்டு துளைக்காத பிரத்யேக ரெயில் மூலம் சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் ராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    2023ஆம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து, புதினை சந்தித்து பேசினார். அதன்பின் இதுதான் அவருடைய வெளிநாட்டு பயணம். இதற்கு முன்னதாக 2019-ல் கிம் ஜாங் உன் சீனா சென்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதுடன், வீரர்களும் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.
    • சீன அதிபர், ரஷிய அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்தார்.

    ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேசியதை உலகின் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜான் பால்டன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவையும், ரஷியாவையும் மீண்டும் ஒன்றிணைத்து விட்டது. இந்தியா-ரஷியாவை பிரிக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா செய்த முயற்சிகளை டிரம்ப் சீரழித்து விட்டார். டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன. அவரது தவறான பேரழிவு வரி கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவரது இந்த முடிவால் கிழக்கு ஆசியாவில் சீனா நிலைமையை மறு வடிவமைக்க அனுமதித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
    • நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.

    சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்த வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன.
    • அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.

    சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற அமெரிக்கா மற்றும் பல்வேறு நாட்டின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் கூட அங்கு பயன்பாட்டில் இல்லை.

    உள்நாட்டை சேர்ந்த வெய்போ என்ற சமூக வலைதளம் மட்டுமே அங்குள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சீனா சென்ற பிரதமர் மோடி பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வெய்போ தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    கடந்த 2 நாட்களாக வெய்போ தளத்தில் பிரதமர் மோடி தான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளார்.

    7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றதால் இந்த ஆண்டு ஷாங்காய் உச்சி மாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் பிரதமர் மோடி பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன.



    இந்த நிலையில் சீனாவின் வெய்போ சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஒன்றாக கலந்துரையாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    மேலும் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்த வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன. பிரதமர் மோடியின் நடை, உடை, பாவனைகள் மற்றும் துணிச்சலான முடிவுகள் குறித்து சீனர்கள் அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.

    இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

    நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.

    • இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது.
    • இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தார். இதையொட்டி அவர் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கிருந்து நெடுந்தீவு சென்றார்.

    நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவுக்கு அவர் சென்றார். அங்கு கச்சத்தீவை பார்வையிட்டார்.

    பின்னர் அங்கு கடற்கரையோரம் மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து சிறிது நேரம் பேசினார். தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் புறப்பட்டு வந்தார்.


    கச்சத்தீவு சென்ற இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே, அந்நாட்டு அதிகாரிகள், கடற்படையினருடன் ஆலோசனை நடத்திய காட்சி.

    இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடப்பதால் கச்சத்தீவை திரும்ப பெற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இலங்கை அதிபரின் கச்சத்தீவு வருகை பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
    • பாகிஸ்தான் 144வது இடத்தில் உள்ளது.

    2025 உலக அமைதி குறியீடு (GPI) உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    சுமார் 163 நாடுகளில் இராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை மற்றும் பயங்கரவாதம் போன்ற 23 அம்சங்களை ஆராய்ந்து GPI இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

    அதன்படி, பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு ஐஸ்லாந்து. 2008 முதல் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து தற்போது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மற்ற நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், போர்ச்சுகல், டென்மார்க், ஸ்லோவேனியா மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையில், இந்தியா இந்த பட்டியலில் 115வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான்  144வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் (163வது இடத்தில்) ரஷ்யா இடம்பெற்றுள்ளது.    

    ×