என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    இப்படத்தின் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ரெஞ்சி பானிக்கர் தமிழில் நடிகராக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர்.

    திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. மிகவும் நகைச்சுவையான காதல் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. விளையாட்டுத்தனமான காதலன் எதிர்பாராமல் காதலி பிரக்னண்ட் ஆகிறாள். இதற்கு என்ன ஆனது போல் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளது.

    ஜோ திரைப்படத்தை தொடர்ந்து ரியோவிற்கு இப்படமும் வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மத்திய அரசுக்கான வருமானம் முழுவதும் மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது.
    • மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை குறைக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 40% ஆக குறைக்க வேண்டும் என்று 16-ஆம் நிதி ஆணையத்தைக் கேட்டுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் முடிவால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ.35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும். மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான மத்திய இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், அதன்பின் மத்திய அரசின் முடிவு அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசின் வரு வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்.

    மத்திய அரசுக்கு மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு மிகவும் குறைவாகும். எடுத்துக்காட்டாக, மத்திய அரசுக்கு வரிகள் மூலம் ரூ.100 வருமானம் கிடைத்தால், அதில் இதுவரை 41 ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் 41 ரூபாயில் தமிழகத்திற்கு வெறும் 4.09% மட்டுமே, அதாவது ரூ.1.64 மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் வரி வருவாய்க்கு தமிழ்நாடு ரூ.7 முதல் 8 வரை பங்களிக்கும் நிலையில், அதில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

    வரி வருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கு 40% ஆக குறைக்கப்பட்டால், இப்போது தமிழகத்திற்கு கிடைத்து வரும் ரூ.1.64 இனி ரூ.1.60 ஆக குறைந்து விடும். இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அதை 40% ஆக குறைக்க மத்திய அரசு முயல்வது நியாயமல்ல.

    மத்திய அரசுக்கான வருமானம் முழுவதும் மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை குறைக்கக் கூடாது. எனவே, வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கை 40% ஆக குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அத்தகைய பரிந்துரையை அளித்தாலும் அதை நிதி ஆணையம் ஏற்கக் கூடாது. மாறாக, மாநிலங்களுக்கான பங்கை 50% ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.



    • ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
    • பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

    இந்நிலையில், இந்த தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது.

    இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி கடந்த புதன் கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக நேற்றைய தினம் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    ஓய்வு நாளில் வீரர்கள் ஓட்டல் அறையில் இருப்பது, வெளியில் செல்வது என பொழுதை கழிக்கலாம். எனினும், இந்திய வீரர் சுப்மன் கில மட்டும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வீரர்கள் ஓய்வு எடுத்த நிலையில், சுப்மன் கில் மட்டும் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. சுப்மன் கில் பயிற்சி செய்ய அணியின் பயிற்சியாளர் குழுவில் சிலர் அவருக்கு உதவியதாக தெரிகிறது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில் வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 101 ரன்களை குவித்தார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 46 ரன்களை சேர்த்தார். வலுவான நிலையில் காணப்படும் சுப்மன் கில் தனது ஃபார்மை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.
    • இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.

    எட்டு அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.

    பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறி உள்ளது. இந்த பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே அரைஇறுதி சுற்றுக்கான போட்டி நிலவுகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    கராச்சியில் நாளை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி எஞ்சி உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.

    இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். அத்துடன் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றால், நாளைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டால் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகள் பெறும். அப்படி நடக்கும்பட்சத்தில் 3 புள்ளிகளுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்-ரேட் ஆப்கானிஸ்தானை விட நல்ல நிலையில் இருப்பதால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.

    இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். அப்படி நடக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவுக்காக ஆஸ்திரேலியா காத்திருக்க வேண்டும்.

    நாளைய போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் தென் ஆப்பி ரிக்காவுக்கு சவால் காத்து இருக்கிறது.

    • பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.
    • அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை எனில் அவர் தானாகவே நடிக்க சென்றுவிடுவார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் தனது பாணியில் விஜயை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

    கட் அவுட் மட்டும் வைத்து நடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்று கெட் அவுட் என்று சொல்கிறார்கள். தி.மு.க.வை அவர் கெட்அவுட் என்று சொல்லலாம். ஏன் என்றால் அவரது கட்சி தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர் கெட் அவுட்-ன்னு தி.மு.க.வை சொல்லலாம். பா.ஜ.க. பல மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. மத்தியில் அரசு செய்கிறது. அதை எப்படி கெட் அவுட்-ன்னு சொல்ல முடியும். அதனால விஜய் கெட் அவுட்-ன்னு சொல்றது தி.மு.க.வைதான்.

    கட் அவுட் வைத்துக்கொண்டு தமிழக மக்களை பற்றி கவலைகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தவர்கள் கட் அவுட் இன்றைக்கு கெட் அவுட் என்று சொல்கிறது. மக்கள் அவர்களை கெட்அவுட் என்று சொல்லிவிட்டு நீங்கள் கட் அவுட் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கெட் அவுட்-க்கு எல்லாம் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அரசியலில் முக்கியத்துவம் பெறவில்லை எனில் அவர் தானாகவே நடிக்க சென்றுவிடுவார் என்றார்.

    • நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.
    • தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

    தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு! என்று கூறியுள்ளார். 



    • அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர்.
    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம்.

    சேலம்:

    அடுத்த 62 வாரங்களுக்கு தாங்கள் தான் எதிர்க்கட்சி என த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026-ல் ஆளுங்கட்சியாக இருப்போம்.

    வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும். அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம் என்றார்.

    • மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம்.
    • மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பயணிகள் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம். மேலும் மெட்ரோ கார்டுகளில் ரீசார்ஜ் செய்தும் பயணம் மேற்கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி (1.3.2025) முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகCMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
    • கலைஞர் அரங்கம் சென்று ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 72-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

    இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்டு அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

    அதைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு அறிவாலயத்தில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

    அதன் பிறகு அங்குள்ள கலைஞர் அரங்கம் சென்று ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் அறிவாலயம் வருவார்கள் என்பதால் கலைஞர் அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரையும் அங்கு சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.

    நிர்வாகிகள் ஏராளமான பிறந்தநாள் பரிசு பொருட்கள் சால்வைகள், புத்தகங்கள், பழங்கள் வழங்குவார்கள் என்பதால் அவற்றை வாங்கி வைப்பதற்கும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தொண்டர்களிடம் வாழ்த்து பெற்ற பிறகு கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெறுகிறார். சி.ஐ.டி. காலணி இல்லத்திற்கும் சென்று ராஜாத்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

    அதன் பிறகு மாலையில் கொட்டிவாக்கத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷம் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற நாள் முதல், மக்கள் நலனில் பெரிதும் நாட்டங்கொண்டு 'நான் முதல்வன்' 'பசுமைத் தமிழ்நாடு இயக்கம்' 'புதுமைப் பெண்' 'காலை சிற்றுண்டித் திட்டம்' முதலிய பல்வேறு திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல்படுத்தி வரும் முதல்வரின் பணிகள் யாவும் மேலும் சிறக்க வாழ்த்துவதுடன், தமது வாழ்வில் அவர் பன்னலம் துய்த்து, பல்வளம் பெருக்கிப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்கவெனவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.
    • 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று தான் சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையமானது 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.

    34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்
    • மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

    புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

    இன்று இன்வென்டிவ் (Inventive) 2025 என்ற தலைப்பில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

    இந்நிலையில், சென்னை ஐஐடிக்கு வருகை தந்த ஒன்றிய இணை அமைச்சர் மஜூம்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ×