என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-பிரிட்டனின் ஜேமி முர்ரே உடன் மோதியது.
இதில் முதல் செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-2 என கைப்பற்றியது. 2வது செட்டை 6-4 என யூகி பாம்ப்ரி ஜோடி இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
- பிரக்ஞானந்தா செக் குடியரசு வீரர் டாய் வென்னை வீழ்த்தினார்.
- பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.
பிராக்:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, செக் குடியரசு வீரர் டாய் வென்னைச் சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். முதல் இரு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா டிரா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
- கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.தோனி, பரத் எனும் நான், கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'செர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.
அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட இருவரும் 2023-ம் ஆண்டு ஜெய்சால்மரில் திருமணம் செய்துகொண்டனர். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டு கடந்த நிலையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பதிவிட்ட கியாரா, "எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது" என கூறியுள்ளார்.
கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய தலைமையில் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, டெல்லி வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், அவர் டெல்லி ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவருடைய இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று நீண்டகாலத்திற்கு கையெழுத்திடப்படாமல் உள்ளது. இதனை விரைவுப்படுத்தும் நோக்கில் இருதரப்பும் முனைப்பில் உள்ளன. இந்தப் பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், உர்சுலா வான் டெர் லெயன் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.
அதன்பின், பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய குழுவினர் மற்றும் இந்திய அதிகாரிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகார மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிற மந்திரிகள் கலந்துகொண்டனர்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது.
- என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன என்றார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?
கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.
புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.
காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம்.
முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.
பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது.
என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.
பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.
கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.
விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால் மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.
மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
பேட்டி முடிந்ததும் காரில் வீடு புறப்பட்ட சீமான், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கிரீஸ் வீரர் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஹேலிசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிக்ஸ் ஆகர், சிட்சிபாஸ் உடன் மோதுகிறார்.
- உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா செல்லும் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்தார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.
- வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
- காவல்நிலையம் முன் தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்துள்ளனர்.
வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்வதற்காக பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கு அருகே தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 35 கேள்விகளை எழுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. விசாரணை நள்ளிரவு வரை தொடரலாம் என தெரிகிறது.
- முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். நட் சீவர் பிரண்ட் 18, அமெலியா கெர் 17 ரன் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் இருவரும்
அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜெமிமாவுடன் மேக் லேனிங் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேக் லேனிங் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
- சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடர் உருவாகி இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
- இந்த வெப் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.
விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் 'சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த வெப் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகமாக சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடர் உருவாகி இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளதைப் போல சிறு தெய்வ வழிப்பாடு, அஷ்ட காளி திருவிழாவை கதைக்களத்தில் கொண்டு 8 பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும் அந்த குற்றத்தை யார் செய்தது என்பதை பரப்பரப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடரை இயக்கியுள்ளனர்.
இளம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி இத்தொடர் பேசியுள்ளது. ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்துள்ளனர். இன்வஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்களுக்கு சுழல் 2 : தி வொர்டக்ஸ் வெப் தொடர் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது.
- தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோடானு கோடி உடன்புறப்புகளால்தான், மக்களால்தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் அமர்ந்த இடத்தில் என்னையும் அமர வைத்தது உடன்பிறப்புகள்தான்.
ஓயாமல் உழைக்கும்போது, பிறந்தநாள் விழாக்கள் சிறிது ஓய்வுக்கான ஸ்பீட் பிரேக்கர்கள் போன்றவை. கோபாலபுரம் பிறந்த இடமாக இருந்தாலும் என்னை வளர்த்தது தமிழ்நாடு.
தோழமைக் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து, உரிமைக் குரல் எழுப்பும் மேடை இது. தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒலிக்கும் மேடையாக இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கான மேடை மட்டுமல்ல, வெற்றி விழா மேடை. 2026 தேர்தல் வெற்றிக்கான தொடக்க விழா மேடை இது.
விரிசல் விழாதா என எண்ணிக் காத்திருப்பவர்கள் ஆசையில் மண் தான் விழும். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுபாடு வரும் ஆனால் விரிசல் வராது.
2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் தரை மட்டமாகி இருக்கும்.
தமிழ்நாட்டிற்கான எந்த நன்மையையும் மத்திய பாஜக அரசு செய்வதில்லை. தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு பார்த்து பார்த்து வஞ்சிக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை திணிப்பதை ஏற்க மறுப்பதால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு. பெயர்தான் தர்மேந்திர பிரதான், ஆனால் அவரிடம் தர்மமே இல்லையே.
தேவைப்பட்டால் நாங்கள் பல மொழியை கற்றுக் கொள்வோம் எங்கள் மீது இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி திணிப்பால் மைத்ரி, மகதி உள்ளிட்ட மொழிகள் அழிக்கப்பட்டது.
எங்களை எப்படி மிரட்டினாலும் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டினால் கூழைக் கும்பிடு போன நாங்கள் என்ன அடிமை அதிமுகவா ?
தமிழ்நாட்டின் தொகுதிகளை, பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. பிரச்சனை எழுப்பியவுடன் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாது என்கிறார்கள்.
மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்வது மகிழ்ச்சி. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மற்ற மாநிலங்களுக்கு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






