என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

    2025 ஆகஸ்டு மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,71,627 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 2,24,246 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,13,759 பயணிகள் (Single journey Paper QR /Token 21,74,413; Static QR 3,10,521; Whatsapp - 6,12,757; Paytm 4,28,846; ONDC – 7,58,871; PhonePe – 3,45,562; CMRL Mobile App 1,82,789) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Bad Girl திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார்.

    மேலும் அந்த விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது " நான் 17-வயது இருக்கும் போது 3 காம புத்தகங்களை வாங்கி அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்தேன். என் அம்மா மார்க்கெட் சென்று வந்த பிறகு நான் காம புத்தகங்கள் படிப்பது என் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது அதை அவள் எடுத்து மேஜையின் மீது வைத்தாள். அப்பொழுது என் தாயை கடவுளாக பார்த்தேன். இதுவே அந்த 17 வயது சிறுவன் ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு தாய் அவளை அப்படி வளர்க்க மாட்டாள், நாம் பெண்ணிற்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லை." என கூறினார்.

    • அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல.
    • ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சங்கரன்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக-வை பொறுத்த வரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அமித் ஷாவுடன் பேசி கூட்டணி தலைவராக அறிவித்திருக்கிறோம். திமுக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

    நீங்கள் ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என கேட்கிறீர்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்து வருகிறார். ஆளுங்கட்சி என்றால் anti incumbency (ஆட்சிக்கு எதிர்ப்பு) 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் இருக்கும். ஆனால் 100 சதவீதம் anti incumbency இருக்கும் ஒரே கட்சி திமுக.

    அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல. ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கே நேரம் சரியாக இருக்கும். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றியாக அமைந்தது. அதேபோல் பூத் கமிட்டி மாநாடு வெற்றி பாதைக்கு நகர்த்தும். தேசிய ஜனநாயக கூட்டணில் தேமுதிக என்பது குறித்து இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடக்கும். பாஜகவின் கொள்கை அறிநிலைத்துறை வேண்டாம் என்பதுதான். கோவில் நகையை எடுத்து உருக்குவதாக சொல்கிறார்கள். எவ்வளவு உருக்கினார்கள். எவ்வளவு பெருக்கினார்கள் என்பது இல்லை.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    மேலும், திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளே என்ற கேள்விக்கு, காசு கொடுத்து எழுதச் சொன்னால் எது வேண்டுமென்றாலும் எழுதலாம். நாங்களும் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்துள்ளோம். அதில் 234 தொகுதிகளையும் என்.டி.ஏ. கூட்டணி ஜெயிக்கும் என வந்துள்ளது. அதை உங்களுக்கு காட்டட்டுமா?.

    • ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    • எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன். இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட்) இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார்.

    அவர், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் (ஆஸ்திரேலியாவில்) விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எல்லா வடிவங்களிலும் முழு அர்ப்பணிப்பு சாத்தியமில்லை. எனவே ஒயிட்-பால் கிரிக்கெட்டில் எனது திறனை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்கள் (முதுகு, கால்) காரணமாக உடல் முழுமையை பராமரிக்க இந்த இடைவெளி தேவைப்பட்டது.

    என ஜேமி ஓவர்டன் கூறினார்.


    • இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
    • 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.

    முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.

    அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
    • பேராசிரியர்களின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் முதலமைச்சர் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார். அப்போது பேராசிரியர் ஒருவர் முதலமைச்சரவை தமிழில் வரவேற்றார்.

    இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

    ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான #Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது #DravidianModel அரசு!

    அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

    சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த '#Cologne Library Visit' அமைந்தது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.
    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.

    மாதந்திர ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது. மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத்தில் ரூ.1.74 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.

    இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.5 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

    • போலீசார் விசாரணையின்போது காவலர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.
    • லாக்அப் டெத் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நகை திருட்டு போனதாக கூறப்பட்ட வழக்கில் மடப்புரம் அஜித்குமார் என்ற காவலியை போலீசார் விசாரித்தபோது, அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் பல குறைகள் இருப்பதாக மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. குறைகளை திருத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எம்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    டெண்டர் முறைகேடு குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதித்ததாக விஜிலெசன்ஸ் தெரிவித்துள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஹிபிஹாப் ஆதி மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

    இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழன் மேற்கொள்கிறார்.

    சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர். 

    • இடத்தை தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு.
    • 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவிப்பு.

    ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் டிட்கோ அறிவித்துள்ளது.

    • நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதியாகும்.

    குனார் மாகாணத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-வாக பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

    நகங்கா் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு- வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக கேட்டது.

    நிலநடுக்கத்தில் முதலில் 622 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதை தெரிவித்தார். 1,300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    குனார் மாகாணம்தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குதான் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    நூர்குல், சோகி, வாட்பூர் மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாக குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தளு்ளது.

    2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. பல இடங்க ளில் சாலைகள் கட்டிட இடிபாடுகளால் சூழப்பட்டு இருப்பதால் மீட்பு குழுவினர் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒரே மாகாணத்தில் அடுத்தடுத்து 3 கிராமங்கள் ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு உள்ள கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தைதொடர்ந்து நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்து இருந்த நிலையில் நில நடுக்கம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கி றது. இதனால் சாலை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.

    ×