என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது.
    • ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்க வந்தார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது. ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்கவந்தார். அப்போது படத்தில் அடுத்தடுத்து நிகழ போவதை மனைவியிடம் ஆஷிக் கூறி கொண்டே வந்தார்.

    ஆஷிக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபிஷேக் என்பவர் படத்தின் Spoiler-களை கூறாதீர்கள் என்று எச்சரித்தார். அனால் அதனை பொருட்படுத்தாமல் ஆஷிக் தனது மனைவியிடம் படத்தின் Spoiler-களை கூறி வந்தார்.

    பலமுறை கூறினாலும் சத்தமாக Spoiler-களை ஆஷிக் கூறி வந்ததால் அவருக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகி உள்ளது. படத்திற்கு இடையே இருவரும் தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
    • கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    DQ41 திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.

    துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் DQ 41.

    துல்கர் சல்மான் அவரது 41 வது திரைப்படத்தில் DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைந்துள்ளார்.

    சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில், சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். DQ41 திரைப்படம் எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் பத்தாவது திரைப்படம் ஆகும்.

    இப்படத்திற்கு அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

    இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்' நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், DQ41 படத்தின் இதயம் அறிமுகம் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளத.

    துல்கர் மற்றும் பூஜாவின் கெமிஸ்ட்ரி பெரிய திரையில் மேஜிக்கலாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    • அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை 257,815 ரூபாய் ஆகும்.
    • குறைந்தபட்ச விலை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.

    கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முதன்மையாக இருப்பது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியாகும். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் உள்ளதால் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எங்கு நடைபெற்றாலும், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு டிக்கெட் விற்பனை தொடங்கிய உடன், அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்று தீர்ந்து விடும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், தற்போது வரை இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் முழுமையாக விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

    VIP Suites East பகுதிக்கான டிக்கெட் (இரண்டு) விலை 257,815 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு அளவில்லா உணவு மற்றும் டிரிங்ஸ், ஓய்வறை வசதி, தனி நுழைவாயில், பிரத்யேக கழிப்பறைகள் போன்ற வசதிகள் உண்டு.

    அடுத்து Royal Box பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 2,30,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.

    Sky Box East பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 167,851 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Platinum டிக்கெட் 75,659 ரூபாயாகவும், Grand Lounge டிக்கெட் 41,153 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. General East-க்கான டிக்கெட்தான் மிகவும் குறைந்த விலையாகும். இதன் விலை 10 ஆயிரம் ரூபாயாகும். இது விற்று தீரும் நிலையில் உள்ளது.

    டிக்கெட் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • இப்படத்தில் ஆர்யா ஒரு ஸ்பை அதிகாரியாக நடித்துள்ளார்.
    • இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்

    F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்தியாவிற்காக வேலை செய்த ஸ்பை அதிகாரி அமைப்பை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆர்யா ஒரு ஸ்பை அதிகாரியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் பிறந்தநாளை முன்னிட்டு, Mr.X படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    • இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
    • இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கூகுளின் Gemini Al தளம் மூலம் உருவக்கப்படும் 3D சிலை வடிவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Gemini 2.5 Flash Image Tool மென்பொருளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை ஜெமினி நொடிகளில் உருவாக்கித் தருகிறது.

    Nano Banana என அழைக்கப்படும் இந்த புதிய ட்ரெண்ட்-ல் இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை ஜெனரேட் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கீழ்கண்ட PROMT- ஐ பயன்படுத்தி இத்தகைய புகைப்படங்களை Gemini Al இல் உருவாக்கி கொள்ளலாம்

    "A realistic 1/7 scale figurine of the pictured characters stands on a clear acrylic base atop a sleek wooden desk. The desk is tidy, with a monitor displaying the ZBrush sculpting process: showing wireframes, textures, and fine details. Beside it, a BANDAI-style toy box features vibrant 2D illustrations matching the figurine. Natural light from a nearby window casts soft shadows, highlighting the model's textures and craftsmanship."

    • ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
    • தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

    இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

    இந்நிலையில், திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் தவெகவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

    இதைதொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு துணை ஆணையர், பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்தார்.

    விஜய், வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிரிங்ஸ் பார்ட்டியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தகராறின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரித்வி ஷா மீது குற்றச்சாட்டு.

    இந்திய அணிக்காக விளையாடியவர் மும்பை கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டபோது இவருக்கும், சப்னா கில் என்ற பெண்ணின் நண்பருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சப்னா கில்லின் நண்பர், பிரித்வி ஷாவுடன் செல்பி எடுக்க கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தில் இருந்து வெளியேறும்போது, தகராறு முற்றி அடிதடியில் முடிவடைந்துள்ளது. பிரித்வி ஷா காயமின்றி தப்பினார். ஆனால், சப்னா கில் நண்பன் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சப்னா கில் மற்றும் அவருடன் மேலும் சிலர் பிரித்வி ஷாவின் நண்பரை பின்தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனடிப்படையில் புகார் அளிக்க சப்னா கில்லை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இதற்கிடையில் பிரித்வி ஷா தனக்கு உடல் ரீதியாக பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக சப்னா கில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் சப்னா கில் முறையீடு செய்தார்.

    சப்னா கில் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மும்பை செசன்ஸ் கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் பிரித்வி ஷா பதில் அளிக்காமல் இருந்தார். கடந்த விசாரணையின்போது இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி இருந்தும் பிரித்வி ஷா விளக்கம் அளிக்கவில்லை.

    இதனால் நீதிமன்றம் பிரித்வி ஷாவுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், அடுத்த விசாரணையின்போது கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    • விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
    • பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றம், அரசு கட்டிடங்களைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டல் முழுவதும் தீக்கிரையானது. தொடர்ந்து அப்பகுதியில் எரிக்கப்பட்ட கட்டிடத்தின் இருந்து புகை சூழ்ந்து காணப்படுகிறது.

    • நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
    • வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்.

    கோவை அரசு மருத்துவமனையில் வெகு நேரமாகியும் நோயுற்ற ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்காததால், அவரது மகன் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

    மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
    • திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    குறிப்பாக, சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

    சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், பாரிமுனையில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மேக மூட்டமாக காணப்படுகிறது.

    சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×