என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    சயத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பானு பனியா 134 ரன்கள் குவித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பரோடா அணியில் 3 பேர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    சிக்கிம் அணி தரப்பில் சுனில் பிரசாத் ரோஷன் குமார் 4 ஓவர்கள் பந்து வீசி 81 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காம்பியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் அடித்திருந்ததே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.
    • சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.

    மும்பை:

    இந்திய டென்னிஸ் சம்மேளனம் சார்பில் 6-வது சீசனுக்கான பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    முதல் போட்டியில் சென்னை ஸ்மாஷா்ஸ் 54-46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு எஸ்ஜி பைப்பா்ைச வீழ்த்தியது.

    சென்னை ஸ்மாஷர்ஸ் 2-வது ஆட்டத்தில் நேற்று ஐதராபாத் ஸ்டிரைக்கர்சை எதிர் கொண்டது. இதில் சென்னை அணி 45-55 என்ற கணக்கில் போராடி தோற்றது. சென்னை அணி 3-வது போட்டியில் ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர் கொள்கிறது.

    • ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை
    • கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் தாலிபான் அரசின் இந்த தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது.

    நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை

    • பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆன பிறகு பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்திலும் வென்று இருந்தது.

    முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அவருடன் தொடக்க வீரராக ஜெய்ஷ்வால் ஆடுவார். கே.எல்.ராகுல் 3-வது வரிசையில் களம் இறங்குவார். தேவ்தத் படிக்கல் கழற்றி விடப்படுவார்.

    பெர்த் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஷவால்-ராகுல் ஜோடியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

    துருவ் ஜிரல் நீக்கப்பட்டால் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் சுழற்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் இடம் பெற்றார். இதே நிலை 2-வது டெஸ்டிலும் நீடிக்குமா? என்று தெரியவில்லை.

    முதல் டெஸ்டில் ஜெய்ஷ்வால் (161 ரன்) விராட் கோலி சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), முகமது சிராஜ் (5), ஹர்சிக் ரானா (4) சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டு 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடி இந்தியா பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாகும்.

    பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 108 போட்டியில் இந்தியா 33-ல், ஆஸ்திரேலியா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 29 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

    நாளை டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரையிறுதியை எட்டின.

    அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 5 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி. யோதாஸ் அணி 8வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில் உ.பி. யோதாஸ் அணி 36-33 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 8வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.

    • கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதினார்.

    இதில் ரஜாவத் 22-20, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

    அடிலெய்டு:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அடிலெய்டில் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும்போது குறைந்தது 3,000 ரசிகர்கள் திரண்டு வந்தனர். இந்திய வீரர்களை தொந்தரவு செய்யும் வகையில் சில ரசிகர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக, சில ரசிகர்கள் ரோகித் சர்மாவையும், ரிஷப் பண்டையும் உடல் பருமனாக இருப்பதைக் குறிவைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதனால் வீரர்கள் ஒழுங்காக பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், இனி எந்த ஒரு பயிற்சி போட்டிக்கும் ரசிகர்கள் வந்துபார்க்க அனுமதி வழங்கப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் பிசிசிஐ தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் குகேஷுடனான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரென் வெற்றி பெற்றார்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 7 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 5 டிரா என 3.5 புள்ளிகள் பெற்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 8-வது சுற்றில் குகேஷ், டிங் லிரென் இடையிலான போட்டி மீண்டும் டிராவில் முடிந்தது.

    முதல் ஆட்டத்தில் டிங் லிரெனும், 3வது ஆட்டத்தில் குகேஷும் வெற்றி பெற்றனர். 2, 4, 5, 6, 7, 8-வது ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

    இதுவரை முடிந்துள்ள 8 போட்டிகளில் இருவரும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 7.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாரா டெண்டுல்கர் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
    • இவர் தனது தந்தையின் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இருந்து வருகிறார்.

    இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

    இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது மகள் சாரா டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார்.
    • இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 3 சதம், 7 அரை சதத்துடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நாளை மறுதினம் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதம், 7 அரை சதத்துடன் 58.18 சராசரி மற்றும் 72.52 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 214 ஆகும்.

    அதன்படி, காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேலும் 282 ரன்கள் தேவையாக உள்ளது.

    கடந்த 2010-ம் ஆண்டில் சச்சின் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரை சதத்துடன் 1,562 ரன்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார்.

    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள ஜெய்ஸ்வாலுக்கு தற்போது இந்த சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது. அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்சில் 1,788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    ×