என் மலர்
விளையாட்டு
- இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்கள் எந்த வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர சுமார் 4 மாத காலம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
- நாட் ஸ்கைவர், மேத்யூஸ் ஆகியோர் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- கேப்டன் கவுர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதி டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி மும்பை அணி தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். பாட்டியா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட், மேத்யூஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
இருவரும் குஜராத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் களம் புகுந்த கேப்டன் கவுர் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது.
- ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும்.
- ரோகித் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார்.
மும்பை:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடர் நிறைவடைந்தவுடன் ரோகித் சர்மா, ஓய்வு பெற்று விடுவார் என யூகங்கள் கிளம்பின. ஆனால் கோப்பையை வென்றதும் பேட்டி அளித்த 37 வயதான ரோகித் சர்மா, இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என இது குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் 37 வயதானாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மாவின் வெற்றி சராசரி விகிதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவீதம். இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்த அவர் உச்சகட்ட அழுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கான நல்ல அடித்தளத்தைக் கொடுத்தார். எனவே ரோகித் ஓய்வு பெறுவதற்கும் விமர்சனங்களை சந்திக்கவும் காரணம் இல்லை. அதை அவருடைய சாதனைகள் பேசுகின்றன.
இது போக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. ஆனால் 2022-க்குப்பின் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அப்படி நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மாற்றுவது சிறந்த விஷயம் நீங்கள் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டு முன்னேறலாம்.
ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும். அவரது பயணம் எப்போதும் சீராக இருப்பதில்லை. வெவ்வேறு பார்மட்டில் வெவ்வேறு பார்மை கொண்டிருக்கும். அவர் மேடு பள்ளங்களைக் கடந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித்.
என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
- பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன்.
- மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் 2 லீக் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத அவர் 3-வது லீக் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன். மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
இப்படித்தான் என் திறனை அதிகப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன், நான் சொல்லாமலேயே அவர் அதைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அரீனா சபலென்கா (பெலருசியா) சோனய் கர்தல் (பிரிட்டிஷ்) ஆகியோர் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் மற்றும் குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர்.
பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை டோனா வெற்றி பெற்றார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் கீஸ் 9-7 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இதனால் 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
- சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்தியாவின் மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளில் ஆல்ரவுண்டராக முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அவரது காலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அபித் அலி, 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக, 1971இல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
83 வயதான சையத் அபித் அலி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் 1941 செப்டம்பர் 9-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்த அபித் அலி, 1967-68 -ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அடிலெய்டில் நடந்த தனது முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடர்ந்து சிட்னியில் நடந்த ஒரு மறக்க முடியாத போட்டியிலும் அவர் சிறந்த பங்களிப்பைத் தந்தார். 1975-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், அவர் 98 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் இன்னும் நவீன யுகத்தில் விளையாடியிருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்திருப்பார் என அவர் காலத்தைய ஜாம்பவான்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- அல்காரஸ் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.
- காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார்.
- பேட்டிங் செய்யலாம், பந்து வீசக் கூடாது என அறிவுறுத்தல்.
ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை தொடரில் இருந்து விலகினார்.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக மருத்துவ அனுமதியை பெற்றுள்ளார்.
ஆனால் பேட்டிங் மட்டும்தான் செய்ய வேண்டும். பந்து வீசக்கூடாது, முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் பீல்டிங் செய்யக் கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இம்பேக்ட் பிளேயராக மிட்செல் மார்ஷ் விளையாட முடியும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரண் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீசவில்லை என்றாலும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் மிட்செல் மார்ஷல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மிட்செல் மார்ஷ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பிக்பாஷ் லீக்கில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடினார். பின்னர் காயத்தின் தன்மை தீவிரமானதால் இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபில் இருந்து விலகினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் வருகிற 18-ந்தேதி மிட்செல் மார்ஷ் இணைய உள்ளார்.
- சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.
இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- எம்.எஸ். தோனி சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி வருகிறார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி சமீபத்தில் விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது, அவரிடம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.எஸ். தோனி எந்த பதிலும் தெரிவிக்காமல், கையை தேவையில்லை என்பது போல் செய்கை காண்பித்து அங்கிருந்து கடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு எம்.எஸ். தோனி பதில் அளிக்காமல் சென்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் பலரும் எம்.எஸ். தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த வீடியோவை பார்த்த பிறகு வருத்தமாக இருக்கிறது என கமென்ட் செய்துள்ளனர்.
- கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார்.
- அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"
"அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."
"தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.
- விளம்பர வருவாய் 58 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்பது மதிப்பீடாக உள்ளது.
- டி.வி. மூலமாக 45 சதவீத வருவாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் ஐ.பி.எல். தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் டி.வி, டிஜிட்டல் தளங்கள், அணி ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் கள விளம்பரங்கள் மூலம் ரூ.6,000 முதல் ரூ 7,000 கோடி விளம்பர வருவாயை ஈட்டும் என்று இத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். மூலமாக ரூ.3,900 கோடி வருவாயைப் பெற்ற நிலையில் நடப்பாண்டில் ஐ.பி.எல். தொடருக்கு முன்பைவிட அதிக வரவேற்பு காணப்படுவதால் விளம்பர வருவாய் 58 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்பது மதிப்பீடாக உள்ளது.
டிஜிட்டல் ஊடகத்திடம் இருந்து 55 சதவீத வருவாயும், டி.வி. மூலமாக 45 சதவீத வருவாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






