என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.
    • தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    சென்னை:

    உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 11-8, 11-8, 11-9 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிகோலஸ் லுமை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சரத்கமல்-சினேஹித் சுரவஞ்ஜிலா ஜோடி அரை இறுதியில் போராடி தோற்றது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜொங் ஹூன்-ஆன்கே ஹியூன் ஜோடியிடம் 11-9, 8-11, 9-11, 6-11 என்ற கணக்கில் தோற்றது.

    பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா 7-11, 10-12, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூ ஜியிடம் (சீனதைபே) அதிர்ச்சி தோல்வி கண்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 6-11, 9-11, 11-6, 11-4, 7-11 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான கிருத்விகா ராய்யிடம் சரண் அடைந்தார்.

    • முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது.
    • கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன்- ஜூலையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ஜூன் 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறது.

    முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது. அதே மைதானத்தில் ஜூன் 6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சுடன் மோதுகிறது.

    கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதி திண்டுக்கல்லில் அரங்கேறுகிறது.

    • நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம்.
    • சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்.சி.பி. அணி வீழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், போட்டிக்கு பின்பு சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது மற்ற அணிகள் பெரிய ஸ்கோரை அடிக்கும்போது சிஎஸ்கே அணி பேட்டிங்கில் குறைவான ரன்களை அடிக்கும் முறை காலாவதியாகி விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? என்று செய்தியாளர் எழுப்பினார்.

    இதற்கு கோபத்துடன் பதில் அளித்த பிளெமிங், "நீங்கள் ஃபயர்பவரைப் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடம் ஃபயர்பவர் முழுமையாக உள்ளது. இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. தொடரின் முடிவில், யார் வெற்றி பெறுவார்கள் என்று பாருங்கள். நாங்கள் பாசிடிவ் பிராண்ட் கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

    நீங்கள் கேட்டது ஒருவிதத்தில் முட்டாள்தனமான கேள்வி. நாங்கள் பல ஆண்டுகளாக உங்களிடம் கூறிவருகிறோம். சேப்பாக்கத்தில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. சேப்பாக்கத்தை விட வேறு மைதானங்களில் நாங்கள் பலமுறை வென்றுள்ளோம்

    கடந்த 2 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இது [பழைய] சேப்பாக்கம் மைதானம் இல்லை. பழைய சேப்பாக்கம் மைதானத்தில் 4 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கலாம். ஒவ்வொரு மைதானத்தின் தன்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 244 ரன் இலக்கை தூரத்திய குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்த அந்த அணி 'இம்பேக்ட்' வீரர் விஜய்குமார் வைஷாக்கின் 'யார்க்கர்' பந்து வீச்சில் போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது தோல்விக்கு வழிவகுத்தது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (3 விக்கெட்) தவிர மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், ரபடா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் அதிக ரன் கசியவிடுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (31 ரன்), சூர்யகுமார் யாதவ் (29) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் உள்ளிட்ட மற்ற பவுலர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை.

    கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் 3 முறை சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவர் களம் திரும்புவது அந்த அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும்.

    முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு அல்லது கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷித் கான், கசிகோ ரபடா, முகமது சிராஜ்

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், சத்யநாராயணா ராஜூ.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்.
    • கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 8-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    • சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4,687 ரன்கள் அடித்துள்ளார்.
    • எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார்.

    சென்னை:

    18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.

    தற்போது ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்தார். எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
    • இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.

    இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.

    • சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது:

    முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

    இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே, ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.

    குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்து வீசிய விதம் நம்ப முடியாதது.

    இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ரசிகர்கள் அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது.

    நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் அதை துரத்துவது எளிதல்ல.

    நான் இருக்கும்வரை ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தெளிவான குறிக்கோளாக இருந்தது என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.

    சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

    ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும் எடுத்தனர்.

    சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கி ஆடி அவ்ருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.

    • ரஜத் படிதார் அரைசதம் அடித்தார்.
    • டிம் டேவிட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் பதிரனா, ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.

    தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். விரட் கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடக்கத்தில் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    5-வது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி மின்னல் வேகத்தில் சால்ட்-ஐ ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். அப்போது ஆர்சிபி 5 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்கருடன் 32 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருடன் 27 ரன் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ரன்அவுட் மிஸ், கேட்ச் மிஸ் என படிதாருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுத்தனர்.

    மறுமுனையில் விராட் கோலி 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

    ஏராளமான வாய்ப்புகள் பெற்ற ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஜித்தேஷ் சர்மா 12 ரன்களும், லிவிங்ஸ்டன் 10 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டிம் டேவிட் 3 சிக்சர்கள் விளாச இறுதியாக ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    சிஎஸ்கே அணியில் சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பதிரனா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நூர் அகமது 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்து வருகிறது.

    ×