என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெற்றிக் கணக்கை தொடங்குவது யார்?: குஜராத்-மும்பை அணிகள் இன்று மோதல்
    X

    வெற்றிக் கணக்கை தொடங்குவது யார்?: குஜராத்-மும்பை அணிகள் இன்று மோதல்

    • குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 244 ரன் இலக்கை தூரத்திய குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்த அந்த அணி 'இம்பேக்ட்' வீரர் விஜய்குமார் வைஷாக்கின் 'யார்க்கர்' பந்து வீச்சில் போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது தோல்விக்கு வழிவகுத்தது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (3 விக்கெட்) தவிர மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், ரபடா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் அதிக ரன் கசியவிடுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (31 ரன்), சூர்யகுமார் யாதவ் (29) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் உள்ளிட்ட மற்ற பவுலர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை.

    கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் 3 முறை சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவர் களம் திரும்புவது அந்த அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும்.

    முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு அல்லது கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷித் கான், கசிகோ ரபடா, முகமது சிராஜ்

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், சத்யநாராயணா ராஜூ.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×