என் மலர்
புதுச்சேரி
புதுவை கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். இவர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளிப்பது வழக்கம்.
சமீபத்தில் புயல், மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நீச்சல் பயிற்சியை தொடங்கினார். அப்போது கொரோனாவிற்காக அரசு வழிகாட்டுதலின்படி பயன்படுத்தி விட்டு பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட முக கவசங்கள் ஆறுகள் மூலமாக அடித்துச் செல்லப்பட்டு கடலுக்கு அடியில் தேங்கிக் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாசுபடுதலில் இருந்து கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக அந்த முகக்கவசங்களை அகற்றுவது என முடிவு செய்தார். அதன்படி பாதுகாப்பு உடை அணிந்து தன்னுடன் பயிற்சியில் இருக்கும் 5 பேருடன் அரவிந்த் கடலுக்கு சென்றார்.
நடுக்கடலுக்கு நீந்திச் சென்ற அவர் 60 அடி ஆழம் இறங்கி அடியில் தேங்கிக் கிடந்த முகக்கவசங்களை சேகரித்தார். இதை அவர்களுடன் சென்றிருந்த மற்ற வீரர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.
இந்த காட்சிகளை அரவிந்த் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பயிற்சியாளர் அரவிந்த் கூறும் போது, ‘கடலுக்கு அடியில் இன்னும் தேங்கி கிடக்கும் முகக்கவசங்களை நான் தொடர்ந்து அகற்றுவேன்’ என்றார்.
கடலுக்கு அடியில் இருந்து சுமார் 1 டன் எடைக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை சேகரித்து கரைக்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அதன் நகலை கிழித்தெறிந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை எரித்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகில் நேற்று காலை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமையில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஏராளமானோர் கூடினர்.
போராட்டத்தில் செல்வகணபதி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், அருள்முருகன், சாய் சரவணன், செயலாளர்கள் அகிலன், ரத்தினவேல், இளைஞர் அணி தலைவர் கோவேந்தன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் விஜயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது சாலையின் நடுவில் 4 தகரத்தால் ஆன பேரல்களை வைத்து அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நகல்களை போட்டு பா.ஜ.க.வினர் தீ வைத்து கொளுத்தினர்.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே ஒரு பிரிவினர் இந்திராகாந்தி சிலையை சுற்றி 4 பக்க சாலைகளிலும் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே தேர்தல் அறிக்கையை தீ வைத்து கொளுத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தகரத்தால் ஆன பேரல்களை சாலையோரத்துக்கு கொண்டு சென்று ரசாயன கலவையை தெளித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி வெண்ணிலா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி நிவெர்ச்சி (வயது 56) புதுவை அரசு பொது மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் ஸ்டீபன் ராஜும், மகளும் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்கள். எனவே நிவெர்ச்சி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நிவெர்ச்சி அவரது அறையில் உள்ள பீரோவில் இருந்த நகைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சரிபார்த்தார். அப்போது தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், மோதிரம் என 40 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. ஆனால் வீட்டின் கதவு, பீரோ ஆகியவை எதுவும் உடைக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிவெர்ச்சி, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஜீத், வெங்கடாசலபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஸ்டீபன்ராஜ் நண்பரான கோவிந்தசாலையை சேர்ந்த மைக்கேல் சுதன் (24) நிவெர்ச்சி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மைக்கேல் சுதன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நானும், ஸ்டீபன்ராஜும் கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எனவே அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வேன். அப்போது அவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சகஜமாக சென்று வருவேன். அந்த வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றின் சாவிகள் வைக்கும் இடம் எனக்கு தெரியும்.
அதன் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு 10 பவுன் நகைகளும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 பவுன் நகைகளையும் திருடினேன். அந்த நகைகளை எனது நண்பர்களான கார் டிரைவர் எழில்நகர் கிஷோர் (25), முதலியார்பேட்டை சூர்யா (29) ஆகியோர் உதவியுடன் விற்று பணத்தை பங்கு வைத்துக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து மைக்கேல் சுதனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரது நண்பர்களான கிஷோர், சூர்யா ஆகியோரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஜீத், வெங்கடாசலபதி, ஏட்டு புவனேஷ், போலீஸ்காரர்கள் ராஜரத்தினம், செல்லத்துரை ஆகியோரை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் பாராட்டினார்.
புதுவை, தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்.
கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
திருப்பூரில் நாளை மறுநாள் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர்.
அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம், கூட்டணி கட்சிகள் தொடர்பாக விளக்கி கூறினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ராகுல் தெரிவித்தார்.
புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்ய வர வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர். புதுவை காங்கிரசாரின் அழைப்பை ஏற்ற ராகுல் அடுத்த மாதம் புதுவைக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கிருஷ்ணா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது55). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
முருகனும் அவரது மனைவி கஸ்தூரியும் வில்லியனூர்-பத்துக்கண்ணு செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வந்தனர். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
அடிக்கடி மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து விட்டு பெட்டிக்கடையை சரியாக கவனிப்பதில்லை. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.
மேலும் புதிதாக வீடு கட்டி வருவதால் கட்டுமான பணிக்கு பணம் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இப்படி மது குடித்து செலவழிக்கிறீர்களே என்று அடிக்கடி கூறி வந்தார். இதனால் முருகன் விரக்தியில் இருந்து வந்தார்.
அதுபோல் நேற்று காலை முருகன் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அப்போது கஸ்தூரி கணவனை கண்டித்து விட்டு பணம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி கொண்டு முருகன் மது குடிக்க சென்றார்.
வெகு நேரமாக பெட்டிக்கடைக்கு கணவன் வராததால் சந்தேகமடைந்த கஸ்தூரி புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை அரசு போக்குவரத்துக்கழக (பி.ஆர்.டி.சி.) ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
நேற்று அதிகாலை புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனை முன்பு திரண்ட ஊழியர்கள் பஸ்களை எடுக்கவிடாமல் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால் புதுவையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. காரைக்காலில் பணிமனை முன்பு பேராட்டம் நடத்த வந்த ஊழியர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
ஆனால், புதுவையில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் புதுவையில் ஊழியர்கள் பணிமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
நிரந்தர ஊழியர்கள் பஸ்களை இயக்க தயாராக இருந்தும் பஸ்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. நேற்று பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
2-வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் புதுவை அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர். தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநில தேர்தலுடன் புதுவை சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி கூட்டணி ஆட்சியை உருவாக்க பா.ஜனதா பல்வேறு வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவையின் 30 தொகுதிக்கும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாகவே சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. காங்கிரஸ் அரசை கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை பா.ஜனதா நடத்தி வருகிறது.
அதோடு பிற கட்சிகளில் செல்வாக்குள்ள வேட்பாளர் கர்நாடக மாநில பிரதிநிதிகளை தங்கள் கட்சியின் பக்கம் இழுப்பதிலும் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர். புதுவையின் பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரசில் உள்ள அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க பா.ஜனதா வியூகம் அமைத்துள்ளது. ஒரு அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 29-ந்தேதி மாலை புதுவை வருகிறார்.
அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
மறுநாள் (30-ந்தேதி) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பா.ஜனதாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரை ஆற்றுகிறார். இதில் காங்கிரசை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.
30-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு 2 நாட்கள் முகாமிடுகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.






